Thursday, 31 October 2013

பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 02

தொடர்ச்சி…..
3. பித்அத்துகளை ஒழிப்பதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தவிர்த்தல்

ஒரு பித்அத்தை ஒழிப்பதன் மூலம் மிக மோசமான விளைவு ஏற்படும் என்றிருப்பின் அந்த பித்அத்தை எதிர்ப்பதைத் தவிர்க்கவேண்டும். அதற்கெதிரான போராட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும். இக்கருத்துக்கு ஆதாரமாகக் கீழ்வரும்; நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்பதற்காக தூர்ஸினா மலைக்குச் சென்றிருந்தபோது, சாமிரி என்பவன் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தவர்களை ஒரு காளை மாட்டை வணங்கும் முஷ்ரிக்குகளாக ஆக்கிவிட்டான். இவ்வேளையில் அச்சமூகத்தில் மூஸா(அலை) அவர்களின் பிரதிநிதியாக இருந்த ஹாரூன் (அலை) அவர்கள் அப் பெரும் பாவச் செயலைக் கண்டும்கூட, அதனை உடன் தடுக்காது மௌனம் சாதித்து விட்டார்கள்.
தன் சமூகத்தவர்கள் வழிகெட்டு விட்டதைக் கேள்விப்பட்ட மூஸா (அலை) அவர்கள் கோபாவேசத்துடன் திரும்பிவந்து ஹாரூன் (அலை) அவர்களை நோக்கி கீழ்வருமாறு வினவினார்கள்:
''ஹாரூனே, இவர்கள் வழிகெட்டுப் போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் என்னை நீர் பின்பற்றி நடக்க உம்மைத் தடைசெய்தது எது? நீர் என்னுடைய கட்டளைக்கு மாறுசெய்ய முற்பட்டீரா?(என்று கூறி அவருடைய தாடியையும் தலைமுடியையும் பிடித்தார்) அதற்கவர்,என்தாய் மகனே, என் தாடியையும் தலையையும் பிடித்திழுக்காதீர். 'இஸ்ரயீலின் சந்ததிகளுக்கிடையில் நீர் பிரிவினையை உண்டுபண்ணிவிட்டீர், நீர் என்னுடைய வார்த்தைகளைக் கவனிக்கவில்லை என்று நீர் என்னைக் கடுகடுப்பீர் என நிச்சயமாய் நான் பயந்தேன்!(அதனால்தான் அவர்களை நான் உடன் அப்பாவத்தை விட்டும்; தடுக்கவில்லை)'' என்றார்.

ஹாரூன் (அலை) அவர்களது இப்பதிலை மூஸா (அலை) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை, மறுத்துரைக்கவில்லை. ஒரு நபியின் கண்ணெதிரே அவரின் கட்டுப்பாட்டின் கீழுள்ளவர்கள் மிகப் பெருங் குற்றமான ஷிர்க்கைச் செய்ய முனைந்தபோதும், அதை உடன் தடுப்பதனால் சமூகத்தில் பிளவும் பிரிவினையும் குழப்பமும் ஏற்படும் என்ற காரணத்திற்காக அதனை அந் நபி தடுக்காமால் இருக்கிறார். தனது சகோதரன் வந்த பின் அவருடன் இப்பிரச்சினையை ஆராய்ந்து இதற்கு எவ்வாறு பரிகாரம் காணலாம் என்று சிந்தித்துச் செயல்படுவதே சாலச் சிறந்தது என்று கருதுகிறார்.
இது எத்தகைய பெரிய பித்அத்தாயினும் அதனை ஒழிப்பதில் நிதானம் தேவை என்பதைக் காட்டுவதோடு, ஒரு பித்அத்தை ஒழிக்க முனைவதனால் அதனைவிடப் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென்றிருப்பின் குறித்த பித்அத்தை எதிர்ப்பதை இடைநிறுத்தம் செய்தல் வேண்டும் என்பதையும் காட்டுகிறது. இப்போக்கிற்கு நபி (ஸல்) அவர்களது ஸீராவிலும் பெருந்தொகையான உதாரணங்களைக் காண முடிகிறது. ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (றழி) அவர்களை நோக்கி 'உங்களுடைய சமூகத்தவர்கள் மிக அண்மைக்காலம் வரை ஜாஹிலிய்யத்தோடு தொடர்புள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். இல்லையெனில் கஃபாவின் ஒவ்வொரு கல்லையும்கூடத் தகர்த்து மீண்டும் இப்றாஹீம் (அலை) அவர்கள் இட்ட அத்திவாரத்திலிருந்து கட்டியிருப்பேன்' என்றார்கள். நபியவர்கள் கஃபாவை இடித்து, தான் விரும்பியவாறு இப்றாஹீம் (அலை) அவர்களது அத்திவாரத்தை வைத்துக் கட்ட முற்படாதிருந்ததற்குக் காரணம், அறபு சமூகத்தில் அதன் காரணத்தினால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகும் என்ற உண்மையை இந்நபிமொழியிலிருந்து விளங்க முடிகிறது.
ஏனெனில், அறபிகள் இஸ்லாத்துக்கு முன்பே கஃபா மீது தீவிரமான பற்றுக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதனைத் தகர்க்க முற்பட்டால் நிச்சயம் அறபிகள் சகிக்க மாட்டார்கள், மாறாக பெரும் பிரச்சினையும் குழப்பமுமே தோன்றும். இதனை நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்ததனால்தான் அத்தகைய குழப்பத்தைத் தவிர்ப்பதற்குத் தனது திட்டத்தைச் செயல்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

மேலும் ஒரு சந்தர்ப்பத்தில், அன்ஸாரிகளில் சிலர் நபியவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே, இன்றிரவு நாங்கள் எங்களுக்கெதிரான காபிர்கள் அனைவரையும் கொலைசெய்து விடுவோம். நாளைக் காலையில் உங்களுக்கு உங்களது தஃவாவைப் பகிரங்கப்படுத்தி ஆட்சியாளராகவும் மாறிவிட முடியும்' என்று கூறினார். அதற்கு நபியவர்கள், 'இவ்வாறு அவசரப்பட்டுச் செயல்படுமாறு நான் ஏவப்படவில்லை' எனப் பதிலளித்து, அவர்களது ஆலோசனையை மறுத்துரைத்தார்கள்.

No comments:

Post a Comment