இஸ்லாம் என்ற மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டுள்ள ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ள வேண்டிய அடிப்படையான ஆறு அம்சங்களும் என்ன என்பதை நாம் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளோம். அறிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவன் முஸ்லிமாகிவிட முடியாது என்று அதில் ஆழமான நம்பிக்கையையும் வைத்துள்ளோம். அல்லாஹ், மலக்குமார்கள், நபிமார்கள், வேதங்கள், இறுதி நாள், விதி ஆகிய 6 அம்சங்களையும் நம்ப வேண்டிய முறையில் நம்புவதுதான் ஒரு முஸ்லிமின் அடிப்படைத் தகுதிகள். இதில் ஒன்றைக்கூட நம்ப மறுப்பது அல்லது நம்ப வேண்டிய முறையில் நம்பாமல் இருப்பது இஸ்லாத்தை விட்டே வெளியேற்றி விடும் என்பதும் நாம் அறிந்ததே.
எந்த 6 அம்சம் நம்மை முஸ்லிம் என்று பறைசாற்றுகிறதோ, எந்த 6 அம்சத்தை ஆழமாக நாம் நம்ப வேண்டுமோ, அதில் ஓரம்சம் மிகுதி 5 அம்சங்களையும் பொய் என்று பறைசாற்றுவதுபோன்று மேலோட்டமாகப் பார்த்தால் விளங்கும்.
அதுதான் விதி பற்றிய நம்பிக்கை.
எல்லாம் விதிப்படியே நடக்கிறது, அல்லாஹ் எழுதி வைத்த பிரகாரம்தான் இறுதித் தீர்ப்பு உள்ளது, நன்மை தீமை எல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது என்று நம்பினால்,அல்லாஹ் ஏன் எம்மைப் படைக்க வேண்டும்? நாம் ஏன் அவனை வணங்க வேண்டும்? பிரார்த்தனை என்பதற்குக் கூட வேலையே இருக்காது, என்னதான் செய்தாலும் சுவர்க்கம் நரகம் என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றால்,அல்லாஹ் நீதியாளன் கிடையாது(நஊது பில்லாஹ்). நீதியில் எள்ளளவு கூட தவறுபவன் கடவுளாக இருக்க முடியாது.
எனவே விதி பற்றிய நம்பிக்கையை மேலோட்டாமகப் பார்த்தால் அல்லாஹ் பற்றிய நம்பிக்கை ஆட்டம் காணும்.
வஹி அறிவிக்க, மனிதன் செய்யும் நன்மை தீமைகளை பதிவுசெய்ய, நன்மையின் பக்கம் தூண்ட என பல்வேறுபட்ட வேலைகளின் நிமித்தம் மலக்குகள் இருப்பதும் வேலைக்கில்லாதவொன்று என்றாகிவிடும்.
எல்லாம் விதிப்படி என்றால், அத்தனை நபிமார்களும், அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களும், அதன் போதனைகளும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை.
தீர்ப்பு நாள், விசாரனை என்பதெல்லாம் ஒரு நாடகம் என்றாகி, தீர்ப்பு நாளும் பொய்யாகிவிடும்.
எனவே, “விதியை எவ்வாறு நம்புவது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவாக விளங்கிவைத்திருக்க வேண்டும்.
இஸ்லாத்தை விமர்சிக்கும் நாத்திகர்களுக்கும், கேள்வி கேட்டு பதிலளிப்பவரை மடக்கி தான் ஓர் அறிவாளி என காட்டிக்கொள்பவர்களுக்கும், வணக்கம் புரிய முடியா சோம்பேறிகளுக்கும், விதி என்பது பெரிய பாக்கியம்தான்.
இதன் காரணமாகவும் விதி பற்றிய தெளிவான அறிவை நாம் பெற்றிருப்பது அவசியம்.
விதியை அல்குர்ஆன் இரண்டுவிதமாக பிரித்து அணுகுகின்றது.
1) இவ்வுலகத்தில் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுவது.
2) மறுவுலகத்தில் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுவது.
இவ்வுலகத்தில் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுவது
இவ்வுலகில் மனிதனுக்குக் கிடைக்கும் அனைத்துப்பாக்கியங்களும் அல்லாஹ் ஏற்கெனவே தீர்மானித்ததன் அடிப்படையிலேயே ஆகும் என குர்ஆனை ஆராயும் போது தெரிகிறது.
அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான். (2:212)
தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான்.(13:26)
(மேலும் பார்க்க , 3:27, 3:37, 9:28, 17:30, 24:38, 28:82, 29:62, 34:36, 39:52, 42:12, 42:19)
இவ்வசனங்கள் இவ்வுலகில் நாம் பெற்றுள்ள அனைத்து செல்வங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே என்று கூறுகிறது.
தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான்(2:247)
''அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார்.(7:128)
இங்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படுவது அல்லாஹ்வின் நாட்டப்படியே என்று விளங்குகிறது.
மேலும் நம் மத்தியில் நிலவும் சண்டை சச்சரவுகள், குழப்பங்கள்,மனிதனுக்குக்கிடைக்கும்
கண்ணியம், இழிவு உட்பட அனைத்து இன்ப துன்பங்களும் அல்லாஹ் விதித்தபடியே நடக்கும்.
இதில் மனித முயற்சியால் எதையும் அடைந்துவிட முடியாது.(பார்க்க அல் குர்ஆன் 2:253, 4:90 3:26 5:48, 11:118, 16:93, 42:8)
இதுபோன்ற உலகின் அனைத்து காரியங்களும் விதிப்படியே நடக்கும் என்பதற்கு பின்வரும் வசனங்களும் சான்றாக உள்ளன.
. மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. 6:59
வானத்திலும் அணுவளவோ, அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ உமது இறைவனை விட்டும் மறையாது. (அவை) தெளிவான பதிவேட்டில் இல்லாமல் இருப்பதில்லை 10:61
மேலே நாம் எடுத்துக்காட்டிய அனைத்து வசனங்களிலும் இவ்வுலகத்தில் கிடைக்கும் பாக்கியங்கள் அனைத்தும் விதியின் அடிப்படையில் வந்து சேருபவையே. மனிதன் முயற்சி செய்தாலும் இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அல்லாஹ் எங்குமே குறிப்பிடவில்லை.
மேலும் இது ஈமானுக்கு பங்கம் விளைவிக்குமளவு சர்ச்சைக்குரிய விடயம் ஒன்றும் அல்ல. இவ்வுலக சுகபோகங்கள் என்பது ஒரு முஸ்லிமை பொறுத்தவரை அற்பமானதே.
மறுவுலகத்தில் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கும் பாக்கியங்கள் தீர்மானிக்கப்படுவது
மறுமை பாக்கியங்கள் பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும்போது இரண்டு வேறுபட்ட விதமாகக் குறிப்பிடுகிறான்.
அதாவது அதில் முதல் வகை சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ மனிதன் அடைவதென்பது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது. தானாக ஒரு மனிதன் நல்லவனாக வாழ்ந்து சுவனத்தை அடைய முடியாது. மனிதனுக்கு நல்வழி காட்டுவதும், வழிகெடுப்பதும் அல்லாஹ்வின்பாற்பட்டது என்று ஏராளமான குர்ஆன் வசனங்கள் கூறுகின்றது.
உதாரணமாக
அவர்களை நேர் வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை. மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். (2:272)
(இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்தப் பாக்கியமும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு (3:176)
எனவே அல்லாஹ் நாடுவதால்தான் ஒருவன் நரகத்தை அடைகிறான் என்பதை இவ்வசனங்களும் கீழே நான் குறிப்பிடும் வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன.
நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். ''அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது (சாதகமானது) கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!'' என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெற மாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.(5:41)
''நான் உங்கள் நலம் நாடினாலும் உங்களை வழி கேட்டில் விட்டு விட அல்லாஹ் நாடினால் எனது அறிவுரை உங்களுக்குப் பயன் தராது(11:34)
மேலும் பார்க்க அல் குர்ஆன் 2:7, 2:142, 2:213, 2:253, 2:272, 4:94, 4:88, 4:143, 6:25, 6:35, 6:39, 6:107, 6:111,112, 6:125, 6:137, 6:149, 7:30, 7:101, 7:155, 7:176,178, 7:186, 9:55, 9:85,87, 9:93, 10:74, 10:99, 11:18, 13:27, 13:31, 13:33, 14:4, 16:9, 16:19, 16:36, 16:37, 16:93, 16:108, 17:46, 17:97, 18:17, 18:57, 22:16, 24:21, 24:35, 24:46, 28:56, 30:29, 30:59, 32:13, 35:8, 36:9, 39:23, 39:36, 40:33,35, 42:8, 42:24, 42:44,46, 42:52, 45:23, 47:16, 63:3, 74:31
இங்கு அல்லாஹ் நேர்வழியும், வழிகேடும் விதிப்படியே என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறான்
விதி சம்பந்தமாக ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களுக்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் நடைபெற்ற ஓர் உரையாடலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லிக்காட்டுகிறார்கள்.
(இறைத்தூதர்களான) ஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம்(அலை) அவர்களிடம் மூஸா(அலை) அவர்கள் ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள் என்றார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள் மூஸாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் உமக்காக (தவ்ராத் எனும் (வேதத்தை) வரைந்தான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா? என்று கேட்டார்கள். (இந்த பதில் மூலம்) மூஸா (அலை) அவர்களை ஆதம்(அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள்; தோற்கடித்துவிட்டார்கள் என மூன்று முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
அறிவிப்பவர் - அப+ ஹ{ரைரா(ரலி) நூல் - புகாரி 6614
ஆனால் இதைவிட அதிகமான வசனங்களில் இதற்கு மாற்றமாக மனிதன் மறுமையில் சந்திக்கப் போகும் விளைவுகளுக்கு அல்லாஹ் பொறுப்பாளியல்ல. மனிதனே அதைத் தீர்மானிக்கிறான் என்று அல்லாஹ் குறிப்பிடுபிறான்.
உதாரணமாக
''மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர் வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக (10:108)
நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.(17:15)
மனிதர்களுக்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை நாம் உமக்கு அருளினோம். நேர் வழி பெற்றவர் தமக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி கெடுபவர் தமக்கு எதிராகவே வழி கெடுகிறார். (முஹம்மதே!) நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்ல(39:41)
இவ்வசனங்கள் மனிதன் தனது வழிகேட்டுக்கு தானே பொறுப்பாளி என்பதை ஐயத்திற்கிடமின்றி சொல்கின்றுது.
இது அறிவுரை. விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்வார்(73:19)
எவ்விதச் சந்தேகமும் இல்லாத நாளில் அவர்களை நாம் ஒன்று திரட்டும் போது எவ்வாறு இருக்கும்? ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(3:25)
மேலும் பார்க்க அல் குர்ஆன் 2:57, 2:79, 2:90, 2:134, 2:141, 2:225, 2:281,286, 3:108, 3:117, 3:161, 3:182, 4:62, 5:80, 5:105, 6:70, 6:116, 6:119,120, 6:129, 7:96, 8:51, 9:70, 9:82, 9:95, 10:8, 10:44, 10:108, 11:101, 13:11, 14:27, 14:51, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29, 18:57, 22:10, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 30:41, 31:6, 34:50, 39:7, 39:41,50,51, 40:17, 40:31, 41:17, 42:20,30, 42:48, 43:76, 45:14, 45:22, 59:18, 62:7, 74:37,38, 74:55, 76:29, 78:39,40, 80:12, 81:28, 83:14, 89:24
இவ்வசனங்கள் மனிதனே தனது செயலுக்குப் பொறுப்பாளி பொறுப்பாளி என்பதை பறைசாற்றுகின்றது.
அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான் (7:20)
உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழி கெடுத்துக் கொள்! உனது குதிரைப் படையையும், காலாட் படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட் செல்வத்திலும், மக்கட் செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை (17:64)
அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான்(25:29)
மேலும் பார்க்க அல் குர்ஆன் 2:36, 2:268, 3:155, 3:175, 4:60, 4:119, 4:120, 5:91, 6:43, 6:68, 16:63, 17:27, 19:58, 20:120, 27:24
மேலே உள்ள வசனங்கள் வழிகெடுப்பது ஷைத்தானின் வேலை என்று கூறுகின்றது.
ஓருவன் நல்லவனாக வாழ்ந்து சுவனத்தை அடைவதும் கெட்ட வழியில் சென்று நரகத்தை அடைவதும் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது என்று ஒரு வகையான வசனங்கள் கூறுகின்றன.
ஓருவன் நல்லவனாக வாழ்ந்து சுவனத்தை அடைவதும் கெட்ட வழியில் சென்று நரகத்தை அடைவதும் தானாக தேடிக்கொள்வது.
அல்லது ஷைத்தான் வழிகெடுப்பதுதான் காரணமே தவிர அதற்கு இறைவன் பொறுப்பாளியல்ல என்று வேறு சில வகையான வசனங்கள் சொல்கின்றன.
இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.இரண்டு வகையான வசனங்களும் ஒன்றுக்கு ஒன்று முரன்பாடாக இருப்பது உண்மைதான்.
இப்போது நாம் என்ன செய்வது?
முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதம்தான் என்பதற்கு பெரிய சான்று அது முரன்பாடுகள் அற்றதாக இருப்பதுதான் என அல்லாஹ்வே கூறுகிறான்
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் (4:82)
குர்ஆனைப் பற்றி குர்ஆனே இவ்வாறு சான்று பகரும் போது நான் மேலே எடுத்துக்காட்டிய விதியைப்பற்றி கூறக்கூடிய அத்தனை வசனங்களும் ஒன்றுக்கொன்று முரன்பட்டவையாக இருப்பது ஏன்?
வஹியில் முரன்பாடு வரலாமா?
இந்தக்கேள்வி நியாயமானதுதான்.
இஸ்லாத்தை பொருத்த வரை அதன் கொள்கைகளாகட்டும், அதன் சட்டதிட்டங்களாகட்டும், அவை அனைத்தும் அறிவுபூர்வமானவையே. தர்க்க ரீதியாக சரியென்று நிரூபிக்கத் தக்கவைகளே. இஸ்லாத்தின் எந்தவொரு அம்சத்தைப்பற்றியும் எந்தவொரு கேள்வியை கேட்டாலும் அதற்கு தர்க்க ரீதியான பதில் உண்டு.
ஆனால் விதிபற்றிய முரன்பாட்டிற்கு இஸ்லாம் தர்க்கரீதியான பதிலைத் தரவில்லை.
ஏனெனில் அதை விளங்கும் அளவிற்கு அறிவை அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு தரவில்லை.
இதை நானாகச் சொல்லவில்லை. எந்த அல்லாஹ் இதை முரன்பாடாக குர்ஆனில் சொன்னானோ அதே அல்லாஹ்தான் அதே குர்ஆனில் இதை விளங்குமளவிற்கு எமக்கு ஞானமில்லை என்பதையும் கூறுகிறான்
''அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்கள் முன்னோர்களும் இணை கற்பித்திருக்க மாட்டோம். எதையும் விலக்கப்பட்டதாக ஆக்கியிருக்கவும் மாட்டோம்'' என்று இணை கற்பிப்போர் கூறுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். முடிவில் நமது வேதனையை அனுபவித்தார்கள். ''உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா? (இருந்தால்) அதை எங்களுக்குக் காட்டுங்கள்!ஊகத்தையே பின்பற்றுகிறீர்கள்! நீங்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறில்லை'' என்று கேட்பீராக
அல்குர்ஆன் 6 : 148
''உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா? (இருந்தால்) அதை எங்களுக்குக் காட்டுங்கள்! என்று கூறுவதன் மூலம் அல்லாஹ் இது பற்றிய அறிவு எம்மிடம் இல்லை என்பதை தெளிவாக அறிவித்துவிட்டான்.
எது பற்றிய அறிவு எம்மிடம் இல்லை என்பதை அல்லாஹ்வே அறிவித்துவிட்டானோ அது பற்றி தீர்வு சொல்லி அல்லாஹ்வுக்கே ஆசானாகும் பாவத்தை செய்ய ஒருபோதும் நான் தலைப்பட மாட்டேன். மக்கள் என்னை மடையனாக சித்தரித்தாலும் சரியே.
மடையர்களும் விதியில் கேள்வி கேட்டு தாம் அறிவாளிகளென தம்பட்டம் அடிப்பதும் இதனால்தான்.
இந்தக் கேள்வியை கேட்கும் ஒவ்வொருவரும் தானே முதலில் இதை கண்டுபிடித்தது போல நினைக்கிறார்கள்
இது 1400 ஆண்டுக்கு முன்னதாகவே கேட்கப்பட்ட கேள்வி.
நாங்கள் விதியைப்பற்றி சர்ச்சை செய்துகொண்டிருந்த போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். ஆவர்களின் முகம் சிவக்குமளவுக்கு - அவர்களின் கன்னங்களில் மாதுளை பிழிந்தது போல் - கோபமடைந்தார்கள. இப்படித்தான் நீங்கள் கட்டளையிடப்பட்டுள்ளீர்களா?” இதைத்தான் நான் உங்களிடம் தூதுச் செய்தியாக கொண்டுவந்திருக்கிறேனா? இந்த விஷயத்தில் சர்ச்சை செய்ததன் காரணமாகத்தான் உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்தனர். நீங்கள் இது விஷயத்தில் சர்ச்சை செய்யக் கூடாது என்று நான் வலியுறுத்துகிறேன் என்று அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல் - அஹ்மது 6381, இப்னுமாஜா 82, திர்மிதி 2216
இந்த ஹதீஸில் இருந்து நாம் என்ன விளங்குகிறோம்? உலகத்திலேயே இஸ்லாத்தை பூரணமாக அறிந்துவைத்துள்ள நபிகளாரே இந்த முரன்பாட்டிற்கு விளக்கம் தராத போது நாம் எம்மாத்திரம்? மேலும் விதி பற்றி சர்ச்சை செய்வதை அவர்கள் தடுத்துள்ள போது நாம் அதற்கு விளக்கம் சொல்ல முனைவது அறிவீனம். விதியின் முரண்பாட்டிற்கு விளக்கம் கூறி உங்கள் ஈமானைப் பாதுகாக்க முனைந்து எமது ஈமானை இழக்க நாம் தயார் இல்லை என்பதையம் இங்கு நாம் கூறிவிட ஆசைப்படுகிறோம்.
எதைப்பற்றிய ஞானம் எமக்கு இல்லையோ, அது சம்பந்தமாக கேள்வி கேட்பதும் மடமை. பதில் கூறுவதும் மடமை என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமையினால்தான் விதி பற்றி கேள்வி கேட்கும் மேதாவிகளும் பதில் கூறும் மேதாவிகளும் உருவாகியுள்ளனர்.
உதாரணத்திற்கு “எப்பாயிரெவாடிலா” என்ற ஒன்று உண்டு. இதைப்பற்றி யாருக்குமே தெரியாது என்று வைத்துக்கொள்ளோம். இதைப்பற்றி எந்தக் கேள்வி கேட்டாலும் அது மடமை. அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொன்னாலும் அது மடமை.
விதி பற்றிய நம்பிக்கைக்கு இஸ்லாத்தில் தர்க்க ரீதியான விடை இல்லை என்பதால் இஸ்லாமிய மார்க்கம் பொய்யென்றாகிவிடுமா?
விதி பற்றிய நம்பிக்கைக்கு இஸ்லாத்தில் தர்க்க ரீதியான விடை இல்லை என்பதுதான் உண்மையில் அறிவுபூர்வமானது என்பதை நிரூபிப்பதுதான் இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.
இனி விஷயத்திற்கு வருவோம்.
விதி பற்றி சர்ச்சை எழுப்புவோரை இரண்டு பிரிவினராக பிரித்து நோக்கி அவர்களின் வாதங்களுக்கு பதிலளிக்க முனைவோம்.
1. முஸ்லிம்களாக இருந்து அல்லாஹ்வை நம்பிக்கொண்டே விதியில் சர்ச்சை செய்பவர்கள்.
2. நாஸ்திக வாதிகளாக இருந்து விதியில் சர்ச்சை செய்பவர்கள்.
முஸ்லிம்களாக இருந்து அல்லாஹ்வை நம்பிக்கொண்டே விதியில் சர்ச்சை செய்பவர்கள்
இப்பிரிவினரைப் பொருத்தவரை,எதிர்காலத்தை விதியின் மீது போட்டு அமல் செய்யாமல் இருப்பதற்கே அவர்கள் விதியில் சர்ச்சை செய்கின்றனர். அல்லாஹ் நாடினால் எனக்கு சுவர்க்கம் கிடைக்கும். நான் என்ன அமல் செய்தாலும் அல்லாஹ் நாடிய படியே நடக்கும். அல்லாஹ் நாடினால்தான் எனக்கு அமலே செய்ய முடியும் என்று கூறி விதியின் மீது பழியைப் போட்டுவிட்டு அமல் செய்யாமல் இருந்துவிடுகின்றனர்.
இவர்களின் இந்தக் கேள்வி கூட ஏற்கெனவே ஸஹாபாக்களினால் கேட்கப்பட்டு நபிகளாரினால் பதிலளிக்கப்பட்ட பழைய கேள்விதான்.
எனவே இவர்களின்;; கேள்விக்கு நபிகளாரின் பதிலையே நமது பதிலாகத் தருகிறோம்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தம் இருப்பிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை என்றார்கள்.
அப்போது மக்களில் ஒருவர் அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், தீயோர்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு (இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம் எனும் (திருக்குர்ஆன் 92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
ஆறிவிப்பவர்- அலீ(ரலி) அறிவித்தார்.
நூல் - புகாரி 6605
ஒருவர் இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ஆம் (தெரியும்) என்றார்கள்.அதற்கு அவர் அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரியவேண்டும்? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொருவரும் எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ அல்லது எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ அதற்காகச் செயல்படுகிறார்கள் என்று பதிலளித்தார்கள்.
ஆறிவிப்பவர்- இம்ரான் இப்னு ஹ{ஸைன்(ரலி)
நூல் - புகாரி 6596
இப்படி கேள்வி கேற்கக் கூடிய தற்கால முஸ்லீம்களிடம் சென்று அல்லாஹ்வை நீங்கள் நம்புகிறீர்களா என்று கேட்டுப்பாருங்கள். உடனே ஆம் என்ற பதிலையே தருவார்கள்.
அல்லாஹ்வை நம்பவேண்டிய விதத்தில் நம்பியிருந்தால், விதி பற்றியும் சேர்த்தே இவர்கள் நம்பியுள்ளார்கள் என்பதை ஏன்தான் விளங்க மறுக்கிறார்களோ?
இறைவனை நம்புவதாக இருந்தால், அவனுக்கு இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் தெரியும் என்று நம்புவதே சரியானது. ஆறிவுபூர்வமானது.
அப்படித் தெரியாதவன் இறைவனாக இருக்கவே லாயக்கற்றவன்
உதாரணத்திற்கு
நாளை நீங்கள் வெளிநாடு செல்லவிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
இது இறைவனக்கு தெரியுமா? என்று கேட்டால் தெரியாது என்று நீங்கள் சொன்னால் அப்படிப்பட்ட ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. எமக்கு எவ்வாறு நாளை நடப்பது தெரியாதோ அதுபோல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்றாகிறது. நாளை நான் வெளிநாடு செல்வது இறைவனுக்கு தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீரவேண்டும் என்ற முடிவு அதனுள் அடங்குகிறது. நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத்தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.
எனவே அண்ட சராசரங்களின் எதிர்காலம் பற்றிய அறிவு, ஒவ்வொரு மனிதனுக்கும் எதிர்காலத்தில் என்ன நடக்கவிருக்கிறது. அவன் சுவனம் செல்வானா? நரகம் செல்வானா? என்ற விஷயங்கள் அல்லாஹ்வுக்கு தெரியும் என்று நம்பினால், விதியையும் சேர்த்து நம்பியவர்களாகிறோம்.
மேலும் இவர்கள் உலகவிஷயங்களை பொருத்தவரை விவரமானவர்களாக இருக்ககின்றனர். அல்லாஹ் நாடியதுதான் கிடைக்கும் என்று தொழில் செய்யாமல் இருப்பதில்லை. நோய் வந்தால் அல்லாஹ் நாடியபடி நடக்கும் என்று வீட்டில் இருப்பதில்லை.
அல்லாஹ் எழுதியிருந்தால் சுவர்க்கமோ நரகமோ கிடைக்கும் என்று அமல் செய்யாமல் இருந்தது போன்று தொழில் செய்யாமல், வைத்தியரிடம் செல்லாமல் இருக்;க வேண்டியது தானே. அல்லாஹ் எழுதி வைத்தது தானே கிடைக்கும் என்று இவர்களிடம் கேட்டுப்பாருங்கள். திரு திரு என்று முழிப்பார்கள்.
எமக்கு எது அளக்கப்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாது. எனவேதான் நாம் முயற்சி செய்கிறோம் என்பதைத் தவிர வேறு பதில் இதற்கு இல்லை.
உலக நடப்பைப் போன்றே மறுமையிலும் என்ன நடக்கப் போகிறது என்று யாருக்கும் தெரியாது.
எனவே நமது வேலை எதிர்காலத்தைப்பற்றி யோசிக்காமல் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதுதான் என்று செயல்பட்டால் டழபiஉ சரியாகிவிடும்.
உலக பாக்கியங்களை பொருத்த வரை அல்லாஹ் எல்லாம் விதிப்படியே என்று கூறிவிட்டான். இதில் மாற்றுக்கருத்து குர்ஆனில் இல்லை.
ஆனால் மறுமையில்; நமது நிலை என்ன என்பது பற்றி குர்ஆன் இருவேறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளது. இதை இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் தெளிவுபடுத்தி உள்ளோம். இதில் வேடிக்கை என்னவென்றால் (இவ்வுலகைப் பொறுத்தவரை) எல்லாம் விதிப்படியே நடக்கும் என்ற தெளிவான விஷயத்தில் இவர்கள் விதி இல்லாதது போல் செயற்படுவார்களாம். இருவிதமாகக் கூறப்பட்டள்ள மறுமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் இவர்கள் தமக்குத் தாமே முரன்பட்டு குர்ஆனின் ஒரு பகுதியை மறுத்து எல்லாம் விதிப்படியே என்று வணக்கம் புரிய மாட்டார்களாம்.
என்னே இவர்களின் ஞானம்?
ஓரு வாதத்திற்காக ஒவ்வொருவரின் விதியும் அவரவருக்கு தெரியும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த மாதம் இறக்கப்போகும் ஒரு மனிதனுக்கு தனது விதி தெரியும் என்றால் என்ன நடக்கும்? நாளை விபத்தொன்றில் சிக்கப்போகும் ஒருவனின் விதி அவனுக்கு தெரியும் என்றால் அவனது நிலையை சிந்தித்துப் பாருங்கள். விதி தெரிந்த எந்தவொரு மனிதனாலும் நிம்மதியாக வாழ முடியாது. உலகம் சீராக இயங்கவேண்டும் என்பதற்காகக் கூட விதியை அல்லாஹ் மறைத்து வைத்திருக்கலாம்( அல்லாஹ் மிக அறிந்தவன்)
இஸ்லாமிய வரலாற்றில் விதியில் சர்ச்சை செய்து இரண்டு சாரார் வழிகெட்டனர்.
1. கத்ரியாக்கள்-
2. ஜபரிய்யாக்கள் -
இந்தக்கூட்டங்கள் வழிகெட்டுச்செல்ல அடிப்படைக் காரணமே விதியில் சர்ச்சை செய்ததுதான்.
அல்லாஹ்வை ஏக இறைவனாக ஏற்றுள்ள நாம் உலகின் அனைத்து அம்சங்களும் விதிப்படியே நடக்கிறது என்று நம்புவதன் மூலமே எமது ஈமான் பூர்த்தியடையும்.
முஸ்லிம்களாகிய நாம் விதியை பொருந்திக்கொண்டு அதில் சர்ச்சை செய்வதிலிருந்து விலகிக் கொள்வோமாக.
நாஸ்திக வாதிகளாக இருந்து விதியில் சர்ச்சை செய்பவர்கள்
தர்க்க ரீதியான விளக்கம் இஸ்லாத்தின்; விதி நம்பிக்கையில் கிடையாது என்பதால் இஸ்லாமிய மார்க்கம் பொய்யானது என்று இவர்கள் கூறுகின்றனர்.
இவ்விஷயத்தை நாம் சற்று விரிவாகவே விளங்க முனைவோம்.
விஞ்ஞான உலகம் அண்ட சராசரங்களின் அனைத்து விஷயங்களையும் தனது சிற்றறிவால் விளங்கிட முடியும் என்ற இறுமாப்பில்தான் இன்னும் உள்ளது. முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பது தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும், மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலவும் உதவும் என்பதும் உண்மைதான். ஆனால் அது மனிதனை உலகில் எதையும் சாதித்து விடலாம் என்ற அளவுக்கு இட்டுச்செல்லும் என்று நம்புவது மடமையிலும் மடமை.
மனிதனது புலன் உறுப்புகளாகிய கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவற்றின் மூலம் அறிந்துகொள்ளப்படும் 5 அறிவுடன் சேர்த்து 6 வதாக அவனுக்கே உரிய பகுத்தறிவுடனும் இவ்வுலகில் இயங்குகிறான்.
கண் எனும் புலன் உறுப்பின் மூலம் பார்த்து அறியும் அறிவைப் பெற்றுள்ளான். பார்த்து அறியும் அறிவு என்பது மனிதனுக்கு ஒரு குறித்த வரையறைக்குள்தான் இருக்கிறது.உலகிலுள்ள எல்லாவற்றையும் பார்த்து அறியும் அறிவை மனிதன் இயற்கையாகப் பெறவில்லை. மனிதன் தனது ஆறாவது அறிவைப் பயன்படுத்தி பார்த்து அறியும் அறிவின் எல்லையை விசாலமாக்கியுள்ளான். நுணுக்குக்காட்டி, தொலைகாட்டி, இன்னும் பல நவீன கண்டுபிடிப்புகள் மூலம் காலத்துக்குக் காலம் பார்த்து அறியும் அறிவுத்திறன் மனிதனுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஒரு காலத்தில் அண்ட சராசரங்கள் அனைத்தையும் பார்த்து அறிந்துவிடலாம் என்று விஞ்ஞான உலகம் இறுமாப்புக் கொள்வதும் இதனால்தான்.
இதேபோலத்தான் கேட்டு அறியும் அறிவு, நுகர்ந்து அறியும் அறிவு, சுவைத்து அறியும் அறிவு, உணர்ந்த அறியும் அறிவு ஆகிய எல்லா அறிவுகளையும் தனது பகுத்தறிவின் மூலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறான்.
இவ்வாறு அதிகரித்து செல்லும் மனித அறிவு வரையறுக்கப்பட்டதுதானா?
மனித அறிவுக்கு ஏதாவது எல்லை இருக்குமா?
இந்தக் கேள்விகளுக்கு சரியான விடை கண்டோமேயானால் விதி பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
ஆறறிவுடன் திகழும் மனிதனுடன் ஏராளமான பலவீனங்களும் சேர்ந்தேதான் இயற்கையில் அமைந்துள்ளது.
மனிதனின் மிகப்பெரிய பலவீனங்களான மறதி,அசதி,தூக்கம், பைத்தியம்,பசி,தாகம்,காமம்,தேவை,முகஸ்துதி,அவசரம்;,துக்கம்,
பொறாமை
தடுமாற்றம்,குழப்பம்,நோய்,வயதாதல்,மரணம்; போன்ற இன்னோரன்ன விஷயங்கள் எப்போதும் மனிதனுடன் ஒட்டிக்கொண்டே இருக்கின்றன.
இவை அணைத்துமே மனிதனின் அறிவுக்கு எதிரான ஆயுதங்கள்.மேலும் அன்பு,கருனை,நன்றி,கோபம்,போன்ற ஏராளமான நல்ல பன்புகள் கூட சில நேரங்களில் அவனை பலவீனப்படுத்திவிடும்.
இந்தப் பலவீனம் எதுவுமே இல்லாத இலட்சியப் புருஷர்கள் யாராவது வாழ்ந்தால் அவருக்கு மாத்திரமே எல்லையில்லா அறிவுண்டு என வாதிட முடியுமே தவிர எந்த மனிதனாலும் தன் அறிவு எல்லையற்றது என வாதிட முடியாது.
தன் வாழ்நாளில் ஒரு பிழையேனும் விடாத ஓரு மனிதரைக்கூட நம்மால் காணமுடியாமைக்கு இதுவே காரணம்.
அத்தனை விஞ்ஞானிகளும் தனது ஆய்வுகளில், ஆராய்ச்சியில், கண்டுபிடிப்புகளில் பாதிக்குமேல் பிழை விட்டிருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.
புத்திக்கூர்மையின் தந்தை எனப் போற்றப்படும் அல்பட் ஐன்ஸ்டைன் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
இவர் உருவாக்கிய E=mc2 எனும் சமன்பாடு E=mc2-X என்று தற்போது திருத்தப்பட்டுள்ளது.
மனிதனின் முதல் 5 அறிவுகளுக்கும் எல்லை உண்டு என்பது போலவே சிந்தனா சக்தியாகிய பகுத்தறிவிற்கும் எல்லை உண்டு.
அந்த எல்லையை மிஞ்சிய அறிவுதான் விதி பற்றிய அறிவு என்று விளங்கிக்கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லை.
மேலும் கோள்களெல்லாம் ஈர்ப்பு விசையை இழந்து ஒன்றோடொன்று மோதி இவ்வுலகமும் மனித இனமும் அழியும் என்ற (மறுமைக்) கோட்பாட்டை விஞ்ஞான உலகம் சொல்கிறது.
எத்தனையோ கேள்விகளுக்கான விடைகள் இதனால் மனித குலத்திற்கு தெரியாமல் போக வாய்ப்புள்ளது என்பதை விஞ்ஞானமே தன்னையும் அறியாமல் ஒத்துக்கொள்ளத்தான் செய்கிறது.
மனிதனால் அறியப்பட்டே எல்லாவிஷயங்களினதும் அதன் உண்மைநிலை உணர்த்தப்படவேண்டும் என்ற கட்டாயம் ஒருபோதும் இல்லை.
எனவே மனித அறிவுக்கு எட்டாமல் இருக்கும் எத்தனையோ விடயங்கள் கூட உண்மையாக இருக்கலாம்.
இப்படி மனித அறிவுக்கு எட்டாமல் இருக்கும் உண்மைகளில் விதி என்றொரு கோட்பாடும் இருப்பதாக நம்புவது ஒன்றும் பகுத்தறிவிற்கு முரனானதல்ல.
விடை தெரியாத விதி பற்றிய நம்பிக்கை அறிவுபூர்வமானதுதான் என்பதை இன்னெரு உதாரணத்தின் மூலமாகவும் விளங்கலாம்.
10 கோடி ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு யாரென்றே தெரியாத இரண்டு பேருடன் தனிமையில் பயணித்து ஒரு அறையில் தனிமையில் உறங்குவதற்கு யாராவது முன்வருவார்களா?
அப்படி ஒரு நிலை வந்தால் ஒவ்வொரு மனிதனினதும் பகுத்தறிவு என்ன சொல்லும். இத்தனை பெரிய தொகையுடன் இவர்களோடு தூங்கலாமா? இவர்கள் திருடமாட்டார்களா? பணத்தாசை பிடித்தவர்களாக இருப்பார்களா? என்னைக் கொன்று பணத்தை கொள்ளையடிப்பார்களா? என்று சிந்தித்து தூங்கக்கூடாது என்ற முடிவையே பகுத்தறிவு சொல்லும். பகுத்தறிவு வழங்கிய இந்த முடிவு சரியானதுதான்.
இதே நேரம் தனது தாயுடனும், தந்தையுடனும் இதே போன்று தங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் மேலே உள்ளது போல்தான் நமது பகுத்தறிவு நமக்கு சொல்லுமா?
அல்லது எமது பெற்றோர் இதுவரை காலமும் எம்மோடு நடந்துகொண்ட விதம், சிறு வயது முதல் அவர்கள் எம்மீது காட்டிய அக்கரை, எம்மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு பாசம் இதையெல்லாம் வைத்து தைரியமாகத் தூங்கு என்று சொல்லுமா?
பணத்தாசை எந்த மனிதனையும், எப்படியும் மாற்றிவிடலாம். எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும், அவர்களை நம்புவதுதான் பகுத்தறிவு.
இதுவரை சந்தித்துள்ள அனைத்து சந்தர்ப்பங்களிலும் துளியேனும் எம்மீது தீங்கு நினைத்திராத அவர்களை இந்த ஒரு விஷயத்திலும் அட்வான்ஸாக நம்புவது அறிவுள்ள செயல்தான் என்பதை மறுக்க முடியாது.இப்படித்தான் ஒவ்வொரு பகுத்தறிவுவாதியும் நடந்துகொண்டு இருக்கிறான்.
இதே போன்றுதான் இஸ்லாம் எனும் தூய மார்க்கத்தின் கொள்கை கோட்பாடாகட்டும், சட்ட திட்டங்களாகட்டும், வணக்க வழிபாடாகட்டும்,அறிவியல் சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கட்டும், இன்ன பிற அம்சமாகட்டும்,எதுவும் அறிவுபூர்வமானது என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.
இஸ்லாத்தின் அத்தனையம்சங்களும் அறிவுபூர்வமாக கண்முன்னாலேயே நிரூபிக்கப்பட்டு இருக்கும் போது விதியை மாத்திரம் வைத்து மொத்த இஸ்லாமிய கோட்பாடுகளையும் பிழையென தள்ளுவது எவ்வாறு பகுத்தறிவு வாதமாக அமையும்?
இஸ்லாத்தின் அத்தனை அம்சங்களையும் அல்லாஹ் அறிவுபூர்வமாகத் தந்துவிட்டு விதியை மட்டும் நமது அறிவுக்கு சிக்காமல் வைத்திர்ப்பது எம்மைச் சோதித்துப் பார்ப்பதற்காகத்தான்.
எல்லாவற்றையும் சரியாகவே சொன்ன இறைவன் விதியையும் சரியாகத்தான் சொல்லியிருப்பான் என்று மனிதன் நம்புகிறானா,அல்லது விதியை மாத்திரம் வைத்துக்கொண்டு இஸ்லாத்தின் எல்லா அம்சங்களையும் மறுக்கிறானா என்று மனிதனை சோதித்துப்பார்க்கக் கூட விதியை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கலாம்.
எதையுமே விட்டுவைக்காமல் எல்லா விடயங்களையும் அறிவுபூர்வமாகத் தந்தால் மனிதனை சோதித்துப் பார்க்க என்ன இருக்கிறது?
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்திலும் தனக்கு கீழிருப்பவன் தன்னை கண்மூடி நம்பவேண்டும் என எதிர்பார்க்கும் போது படைத்த ரப்பு ஒரு விடயத்தில் மாத்திரம் நாம் அவ்வாறு நம்பவேண்டுமென எதிர்பார்ப்பது
எந்த பகுத்தறிவிற்கு முரனானது?
முதலாளி சொல்லும் ஒவ்வொரு வேலையையும் அறிவுபூர்வமாக அவர் நிரூபித்தால்தான் அதை செய்வேன் என்று அவனது வேலைக்காரன் சொல்வது எவ்வாறு பைத்தியக்காரத்தனமானதோ அவ்வாறுதான் இதுவும்.
ஒரு மனிதன் தான் கட்டளையிடும் எந்த ஒரு விஷயத்தையும் தனக்கு கீழிருப்பவன் காரணம் கேட்காது செயல்பட வேண்டும் என நினைக்கும் போது விதியை தவிர்த்து அத்தனை அம்சங்களையும் காரணத்தோடு இறைவன் சொல்லியிருப்பது அவனது தயாள குணத்தையே காட்டுகிறது
நம்மைப் படைத்துவிட்டு இறைவன் நீ விரும்பியவாறெல்லாம் வாழு என்று நம்மை விட்டுவிடவில்லை. சில செயல்களை செய்யக்கூடாது என்று நமது செயல்களுக்கு கடிவாளம் இட்டிருக்கிறான். செயல்களுக்கு கடிவாளம் இட்டது போன்றே சிந்தனைக்கு அல்லாஹ் இட்ட கடிவாளம்தான் விதி பற்றி சர்ச்சை செய்யக்கூடாது என்பது.
விதியினால் உண்டாகும் நன்மை
விதியினை நம்பவதால் மனிதகுலத்துக்கு ஏராளமான நன்மைகள் இருக்கிறது.
மனிதன் தனது வாழ்க்கையில் ஏராளமான இன்ப துன்பங்களை சந்திக்கின்றான்.
ஒரு மனிதன் தனது முழு முயற்சியையும் பயண்படுத்தி ஒரு காரியத்தை செய்கிறான். அது கைகூடவில்லை என்று வைத்துக்கொள்வோம். விதியை நம்புகிறவன் நாம் என்ன முயற்சி செய்தாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா என நினைத்து உடனேயே சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறான்.
அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக்கொள்வோம். இவ்வளவு பாடுபட்டும் கைக்கூடவில்லையே என்று புலம்பியே வாழ்க்கையை அழித்துவிடுவான்
துன்பங்களைக் கண்டு துவண்டு போகாமல் தடுக்கும் கேடயமே விதி.
திடீரென மனிதனுக்கு இலாபம் கிடைத்துவிடும் போதும் அவனுக்கு தலை கால் புரிவதில்லை. விதியை நம்பிய மனிதன் அல்லாஹ்வின் நாட்டப்படி கிடைத்தது என்று நினைக்கும் போது அவனது கர்வம், பெருமை,ஆணவம் போன்றவை ஒழிகின்றன.
இதுதான் விதியினால் ஏற்படு;ம் நன்மை என்பதை குர்ஆன் பின்வருமாறு பறைசாற்றுகிறது
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற் காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான் (57:23)
இறுதியாக
விதியை நம்பி முடங்கிக்கிட என்று மற்ற மதங்கள் கூறவது போன்று இஸ்லாம் கூறவில்லை. மனித முன்னேற்றத்திற்கு எந்தத் தடங்களும் ஏற்படாத வகையில்தான் விதியை நம்புமாறு இஸ்லாம் கூறுகிறது.
இந்த நிமிடம் வரை என்ன நடந்துவிட்டதோ அதுதான் நமது விதி என்று நமக்குத் தெரியும். அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பது தெரியாததால்
எதிர்கால விதி நமக்குத் தெரியாது.
எது நடந்து முடிந்துவிட்டதோ விதி இன்னதென்று தெரிந்துவிட்டதோ விதியை நம்பி ஆறுதல் படு. எது நடக்கவில்லையோ அதில் நீயாக திட்டமிட்டு செயற்படு என்று இஸ்லாம் கூறுகிறது. இதனால் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது.
விதி பற்றிய தெளிவையும் அதைப் புரியும் அளவுக்கு உள்ள அறிவையும் இன்ஷா அல்லாஹ் மறுமையில் அல்லாஹ் தருவான். அதுவரை அல்லாஹ்வால் ஏவப்பட்டதை அப்படியே செய்யவும் அவனால் தடுக்கப்பட்டதிலிருந்து தவிர்ந்துகொள்ளவும் முயற்சிப்பதே அறிவுடமை
-S.H.R. ரஸ்மி (சிலாபம்)
No comments:
Post a Comment