Wednesday, 6 February 2013

கல்விக்கான தேடல் அறிவிற்கா? வளத்திற்கா?

இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகத்தில் கல்வி குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் 5% கூட பூர்த்தியாகவில்லை. மேலும் கல்விக்கான தேடலில் போதிய வழிகாட்டலின்றியும், வாய்ப்பின்றியும் தடுமாறுகிறது. உலகமயமாக்கலில் அனைத்து சமூகமும் அடித்துச் செல்லப்படுவதில் தமிழக முஸ்லிம் சமூகமும் அச்சுழலில் சிக்கித் தவிப்பதில் வியப்பொன்றுமில்லை. 

கல்விக்கான தேடல் அறிவிற்கா? வளத்திற்கா?

இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் கல்வியை தன் எதிர்கால வாழ்வின் பொருளாதார தேவையை சீராக்க உதவும் அகக்காரணியாக மட்டும் நினைத்து தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) , பொறியியல் பாடப்பிரிவுகளைப் படித்து மைக்ரோசாஃப்ட், விப்ரோ போன்ற நிறுவனத்தில் வேலை பெறுவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். சிலர் அதில் வெற்றியும் பெறுகின்றனர். சிலர் பொருளாதாரப் பாடங்கள் (எம்.பி.ஏ), கலைப்பாடப்பிரிவுகள், தொழிற்பயிற்சிகள் பயின்று ஏதேனும் பன்னாட்டு நிறுவனம், அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை பெற்று விடலாம் என்று நம்பிக்கையுடன் பயில்கின்றனர். இவர்கள் யாருமே கல்வியை ஓர் அறிவாகக் கற்பதில்லை. மேலும் தான் அடையப் போகும் அல்லது அடைந்த கல்வியின் மூலம் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும், ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கும் விடுதலை மற்றும் சமூக நீதி பெற்றுத் தருவதற்கும் தன் கல்வி பயன்தரும் என்று எண்ணுவதில்லை. இதில் இளைஞர்கள் மீது மட்டுமல்ல, பெற்றோர் மற்றும் சமூகத் தலைமை என்று அனைவருக்கும் பொறுப்புண்டு. 
மார்க்க கல்வி போதிக்கும் பெரும்பாலான பாடசாலைகள் கூட மாணவன் தன் மார்க்கக் கல்வி கொண்டு ஏதேனும் ஒரு இறை இல்லத்தில் இமாமாகவோ அல்லது இஸ்லாமியப் பாடசாலையில் ஆசிரியனாகவோ சேர்ந்து தன் வாழ்வின் பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே அவனை தயார் செய்கின்றனர். நாம் இக்கட்டுரையில் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் போதித்ததின் அடிப்படையில் கல்வியை பரந்த நோக்குடனே அணுகுகிறோம்.

அல்லாஹ் தன் திருமறையில் கேட்கின்றான்,
“அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?” 
(அல் குர்’ஆன் 39:9)
ஓர் கல்வியை அறிவாகப் பெற்று ஆய்ந்தறிந்து அதன் மூலம் உலக மக்களுக்கு நன்மையை ஏவி தீமையை தடுப்பவனும், வெறுமனே கல்வியை பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதற்காக பயில்பவனும் சமமாவார்களா? இது கல்விக்கான தேடலில் முதல் கேள்வியாகும். இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
“அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தருகின்ற கல்வியை, உலக ஆதாயத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருவர் கற்றுக் கொண்டால் மறுமை நாளில் சொர்க்கத்தின் வாடையைக்கூட அவர் பெற்றுக்கொள்ள மாட்டார்.” 
(அபூ ஹுரைரா(ரலி) அபூதாவூத் - 3664)
மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் கல்வியை அறிவாகப் பெற்று மக்களுக்குப் பயனளிக்கும் நபரைக் குறித்து ஓர் அழகிய உதாரணம் மூலம் விளக்குகின்றார்கள்,
“நேர்வழி மற்றும் கல்வி ஞானம் ஆகியவற்றுடன் என்னை அல்லாஹ் அனுப்பி வைத்ததற்கு உதாரணம் பூமியை வந்தடைந்த மழையின் உதாரணம் போலாகும். அதில் ஒரு பகுதி தண்ணீரை ஏற்றுக் கொண்டு செடி, கொடிகளை அதிக அளவில் விளையச் செய்கிறது. தண்ணீரை தேக்கி வைத்து அதன் மூலம் மக்களுக்கு பயனளித்த கெட்டியான பூமியாக உள்ளது. மக்களும் அதிலிருந்து குடித்தார்கள். (கால்நடைகளுக்கும்) குடிக்கக் கொடுத்தார்கள். விவசாயம் செய்தார்கள். அந்த பூமியின் மற்றொரு பகுதி கட்டாந்தரையாகும். அது தண்ணீரையும் தேக்கி வைக்காது. செடிகளையும் முளைக்கச் செய்யாது. இதில் முதல் உதாரணம் அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, அல்லாஹ் என்னை அனுப்பி வைத்த மார்க்கம் மூலம் பயனளித்து (அதாவது) தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவனுக்குரிய உதாரணமாகும். (கட்டாந்தரைக்கு உதாரணம்) மார்க்கத்தின் பக்கம் தன் தலையைக் கூடத் திருப்பாமல் அல்லாஹ் என்னை எதன் மூலம் அனுப்பினானோ அந்த வழியை ஒப்புக்கொள்ளாமல் இருப்பாவனுக்கு உதாரணமாகும்.” 
(அபூ மூஸா (ரலி), புகாரி - 79, முஸ்லிம் 2282)
ஒருவன் கல்வியை அறிவாகப் பெற்று சமூக நலனுக்காக அதனை பயன்படுத்தும்போதுதான் அவனிடமிருந்து புதிய கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், அறிவுகள் தோன்றுகின்றன. இப்படிக் கல்வி பயில்பவன் தான் விஞ்ஞானியாகவோ, கண்டுபிடிப்பாளனாகவோ, சமூக ஆர்வலனாகவோ உயர இயலும். இல்லாவிட்டால் ஏதேனும் பன்னாட்டு நிறுவனத்தில் இலட்ச ரூபாய் மாத சம்பளம் பெற்று தன்னை மட்டுமே வளப்படுத்திக் கொள்ளும் சுயநலமியாகத்தான் இருப்பான். அவனது கல்வியால் மனித சமூகத்திற்கு எந்த பயனுமில்லை.

சிலர், "இன்று கல்வி முறையே இப்படித்தானே உள்ளது... இதனை முற்றாக சீர் செய்வது என்பது இயலாத காரியம்" என்கின்றனர். கல்வி முறையை முற்றாக சீரமைப்பது என்பது நீண்டகால இலக்கு. அதே சமயம் தற்போது கல்வித்தேடலில் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு, கல்வி என்பது அறிவு. அது மக்களுக்கு பயன்படும் விதமாக பயின்று சமூகத்திறுகும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கும் விடுதலையைப் பெற்றுத்தர பயன்படுத்த வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
“ நிச்சயமாக செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே”
உமர் (ரலி), புகாரி - 1, முஸ்லிம் - 1907)

கல்வியின் மூலம் அதிகாரம்: 

தான் பெற்ற கல்வியின் மூலம் மக்களுக்கு சேவை செய்வதின் உச்சத்தை அடைவதற்கு அதிகாரம் அவசியமாகிறது. அதிகாரம் என்பது அரசின் ஆட்சிப்பணிகளான இந்திய நிர்வாக சேவை (ஐ ஏ எஸ்), இந்திய காவல் சேவை ( ஐ பி எஸ்) மற்றும் இன்னபிற அரசுப்பணிகளின் மூலம் சாத்தியமாகிறது. ஆனால் அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு அதிர்ச்சியளிக்கும் வகையில் குறைவாக உள்ளது.நான் தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை மற்றும் அதன் சதவிகிதத்தை "தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்" மூலம் கோரிய போது அரசு அளித்த பதிலின் விவரம்:  

    • தமிழக முஸ்லிம் மக்களின் மொத்த மக்கட்தொகை 8%க்கும் மேல்!

    • ஆனால் அரசுப்பணியில் வெறும் 1.9%பேர்தான் உள்ளனர். 

    • அதிலும் அதிகாரமிக்க ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் பணிகளில் வெறும் 10 பேர் மட்டுமே உள்ளனர். 

    • காவல்துறையிலும் சதவீதக்கணக்கு மிக மிகக் குறைவாக உள்ளது. 

கல்வித் தேடலில் அரசுப் பணியின் முக்கியத்துவம், இன்றைய தலைமுறையினருக்கு முறையாக வழிகாட்டப்படவில்லை. ஒருவன் கோடி கோடியாக சம்பாதித்தாலும் ஒரு கோப்பில் அரசிடம் கையெழுத்துப் பெற வேண்டுமானால் மாவட்ட ஆட்சித்தலைவரின் அலுவலகத்தில் சாதாரண அலுவலக எழுத்தரிடம் (க்ளார்க்) கை கட்டிதான் நின்றுதான் பெற இயலும். அதுதான் அதிகாரத்தின் சக்தி. உயர்சாதி பிராமணர்கள் இதனை நன்கறிந்ததால் தான் 1% உள்ள அவர்கள் அரசுப் பணியில் மட்டும் 90% உள்ளனர். இஸ்லாமிய இளைஞன் அரசுத்துறையில் பங்கெடுக்க ஆர்வம் கொள்ளாதிருக்க முக்கிய காரணம், “ சம்பளம் குறைவு”. அதனை விட தன் தந்தையின் வணிகத்தில் அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் அதிகம் சம்பாதிக்க இயலுமென்ற பணக்கணக்கு. ஆனால் எப்போது ஒரு சமூகம் அரசுப்பணியில் தனது பங்களிப்பை சரியாக பெறத் தவறிவிடுகிறதோ அச்சமூகத்திற்கு “சமூக நீதி” என்பது ஒருபோதும் கிட்டாது.அரசுப்பணிகளின் முக்கியத்துவம் குறித்து இஸ்லாமிய இளையத் தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டியது சமூகத் தலைமை மற்றும் மார்க்க அறிஞர்களின் முதன்மைக் கடமையாகும். தலித் மக்களும் கூட அரசுப்பணியில் போதிய சதவிகிதம் பெற்றுள்ளனர். ஆனால் முஸ்லிம்களின் நிலை பரிதாபத்திற்குரியது. வன்னியச் சமூகம் முதற்கொண்டு எல்லா சாதிப்பிரிவுகளும் ஆட்சிப்பணி பயிற்சி சாலைகளை (ஐஏஏஸ் அகாடமி) நடத்தி தன் சமூக இளைஞர்களை அதிகாரத்துறைகளில் நுழைவிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகம் மத்திய அரசுப்பணி (யுபிஎஸ்ஸி) மாநில அரசுப்பணி (டி என் பிசி) குறித்து சிறிதும் விழிப்புணர்வின்றி உள்ளது. எனவே கல்விக்கான தேடலில் அதிகாரத்தைப் பெறுவதே முதல் இலக்கு. அதன் மூலம் மிகுதியான மக்கள் பணியாற்ற இயலும்.

ஆரம்பக் கல்வியின் அவசியம் :

ஒருவன் பிற்காலத்தில் பெரும் விஞ்ஞானியாகவோ மெஞ்ஞானியாகவோ வர வேண்டுமெனில் அவனது அடிப்படைக் கல்வி மிகச் சிறப்பானதாக அமைய வேண்டும். பெரும் விஞ்ஞான கண்டுபிடிப்புக்களின் அடிப்படையாக ஆரம்பக் கல்வியின் வேதியியல், இயற்பியல், உயிரியல் கோட்பாடுகளும், கணிணி வழிக் கண்டுபிடிப்புகளுக்கு ஆரம்ப கல்வியின் கணித சூத்திரங்களே அடிப்படை. அது போல் ஒருவனின் பண்பு நலன்கள், சிந்தனைப் பாங்கு, ஒழுக்கம் ஆகியவைகளுக்கு ஆரம்பத்தில் அவன் மனதில் பதிய வைக்கப்படும் இறையறிவும், ஒழுக்க போதனைகளும்தான் அடிப்படை. முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் ஆரம்பக் கல்வியை சிறப்பானதாக திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு இன்று அதன் இளைய தலைமுறையினர்க்கு வழங்கப்படும் ஆரம்பக்கல்வியே ஆதாரமாகவுள்ளது. ஆனால் நமது சமூகம் இவ்விசயத்தில் மிகவும் பாராமுகமாகவுள்ளது. இன்று ஒரு சில இஸ்லாமிய கல்லூரிகள் இருப்பினும் நம் சமூகத்திற்கு அடிப்படையான ஆரம்பக்கல்விசாலைகள் மிக மிக குறைவாகவுள்ளது. பெரும்பாலும் கிறிஸ்துவ மிஷினரிகளால் நடத்தப்படும் ஆரம்ப பள்ளிகளிலேயே நமது சமூக இளைய தலைமுறையினர் கல்வி கற்கின்றனர். இந்நிலையை மாற்றி நமது இளைய தலைமுறையினர் பயிலப் போதுமான அளவு ஆரம்ப பாடசாலைகளை நாம் நிறுவ வேண்டும். பள்ளிகளை நிறுவினால் மட்டும் போதாது இஸ்லாமியக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் இணைந்து 1 முதல் 5ம் வகுப்புகள் வரையிலானப் பாடப்பிரிவுகளையும், 6 முதல் 10 வரையிலான பாடப்பிரிவுகளையும் அழகிய முறையில் தொகுத்து இஸ்லாமிய சமூகத்திற்கு வழங்க வேண்டும். இன்று சில இஸ்லாமியத் தனியார் தொண்டு நிறுவனங்கள், இயக்கங்கள் அம்முயற்சியில் ஈடுபட்டு மாணவர்களுக்கு அத்தகைய பாடபுத்தகங்களை வெளியிட்டிருப்பது வரவேற்க வேண்டிய விஷயமாகும். அப்புத்தகங்களை வாங்கி நம் வளரும் தலைமுறையினருக்கு கல்வி போதிக்க வேண்டும். தமிழகத்தில் சமச்சீர் கல்வி என்ற போதிலும் நாம் சுயமாக நமக்கென்று ஆரம்பப் பள்ளிகளை நிறுவும் போது ஒழுக்க போதனைக்கு என்று தனியாக ஒரு வகுப்பிற்கு நேரம் ஒதுக்கி அப்பாடப்பிரிவுகளை போதிக்க வேண்டும்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. எனவே ஆரம்ப பள்ளிகளிலேயே இறைவனை பற்றி அறிவையும், இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளையும் போதித்து இஸ்லாமிய கலாச்சாரத்தை மனதில் பதித்துவிட்டால் பின்பு மாணவனது வளச்சியில் , ஒழுக்கத்தில் அவ்வறிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அவன் ஒரு நல்ல முஸ்லிமாக, இந்திய குடிமகனாக இந்நாட்டிற்கு பெரும் சேவை செய்பவனாக பரிணாமம் எடுப்பான்.

பெண்கல்வியின் விழிப்புணர்வு:

துனிசிய நாட்டின் இஸ்லாமிய பேரறிஞர் ரஷீத்-அல்-கன்னூஸி கூறுகையில் ,
"உலகின் மக்கட் தொகையில் சரிபாதி பெண்கள். பெண்களை விட்டுவிட்டு எந்த சீர்த்திருத்தப் பணியும், சமூக புரட்சியும், அறிவும் வெற்றி பெற இயலாது என்கிறார்.
இன்று தமிழக முஸ்லிம் சமூகத்தில் பெண் கல்வி குறித்தான விழிப்புணர்வு இப்போது தான் பற்றிப்படர்கிறது. "தி ஹிந்து" நாளிதழின் நிருபர் திருமதி அமுதா கண்ணன் கூறுகையில்,
"முன்பெல்லாம் ஒரு கல்லூரியில் ஒன்று அல்லது இரண்டு இஸ்லாமிய பெண்களே இருப்பர். ஆனால் இன்றோ ஒரு கல்லூரியின் ஒவ்வொரு வகுப்பிலும் 3 பெண்களுக்கு குறையாமல் உள்ளனர். 
(தி ஹிந்து ஜூன் 11/2012)

அவினாசிலிங்கப் பல்கலை கழகத்தின் நிர்வாகவியல் துறையின் தலைவராக இருக்கும் திருமதி யூ. ஜெரினா பீ கூறுகையில்,
"முப்பது வருடத்திற்கு முன்பாக இஸ்லாமியப் பெண் 14 வயதை அடைந்து விட்டால் அவள் திருமணத்தின் மூலம் பள்ளியிலிருந்து பாதியில் நின்றுவிடுவாள். ஆனால் இன்று உயர்க் கல்வி கற்றும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. மேலும் பாரதியார் பல்கலை கழகத்தில் இளநிலை முதல் டாக்டர் பட்டம் வரை பத்து சதவீதம் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்கின்றனர். 
(தி ஹிந்து ஜூன் 11/2012)
மேற்கூறிய தகவல் மகிழ்ச்சிக்குரியவை என்றாலும் போதுமானவை அல்ல. நிறையப் பெற்றோர் தம்பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைக்க நினைத்தாலும் இருபாலர் கல்விமுறை, மேற்கத்திய நாகரீக அடிப்படையிலான கல்வி முறைகள் அவர்களை தயங்கச் செய்கிறது. பேராசிரியர் திருமது ஜெரினா பீ அவர்கள் கூறுகையில்," கோவை பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கோட்டைமேடு மற்றும் கரும்புகடை பகுதியில் வாழும் பெண்கள், அவினாசிலிங்கப் பல்கலை கழகம் பெண்களுக்கானது என்பதால் நிறைய பேர் இணைகின்றனர் என்கிறார். பெண் கல்லூரிகள் மேலும் குறிப்பாக இஸ்லாமிய முறையிலான பெண் கல்லூரிகள் இன்று இச்சமூகத்திற்கு அடிப்படை தேவையாகும். இதன் மூலம் பெற்றோர் நம்பிக்கையுடன் தம் பிள்ளைகளை உயர்கல்வி கற்க அனுமதிப்பர்.

நிறைய இஸ்லாமிய பெண்கள் போதுமான வழிகாட்டலின்றி, உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் ஏதேனும் ஒரு பாடத்தை தேர்ந்தெடுக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சராசரி குடும்பத்தலைவியாக மாறிவிடுகின்றனர். அவர்கள் கற்ற கல்வியின் மூலம் அவர்களுக்கும் பயனில்லை, சமூகத்திற்கும் பயனில்லை. எனவே கல்லூரிகள் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கையிலேயே எந்தக் கல்வி தன் அறிவை வளர்த்தி சமூகத்திற்கும் பயனுள்ள முறையில் இருக்கும் என்பதை ஆய்ந்தறிந்து, இன்று இஸ்லாமிய சமூகச் சூழலில் திருமணத்திற்குப் பிறகும் தனக்கும், தன் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் எக்கல்வி உதவும் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் இஸ்லாமிய இளைஞிகளுக்கு வழிகாட்ட வேண்டியது சமூகத்தின் பொறுப்பாகும். மேலும் அப்பெண்கள் பெற்ற கல்வியையும் இச்சமூகத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டங்கள் தயாரிக்க வேண்டும்.

துனிசியா, எகிப்து என்று அரபுலக வசந்தத்தின் புரட்சியில் பெண்கள் சரிசமமாக பங்கெடுத்ததை மறக்கலாகாது. ஒவ்வொரு இஸ்லாமியக் குடும்பமும், சமூகமும் நமது இளைய தலைமுறையினர்க்கு அவர்களின் திறமைகளை பயன்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

திருமணத்திற்கு பிறகும் பெண்கள் உயர்கல்வி கற்க நாடினால் இஸ்லாமிய வரையரைக்குட்பட்டு அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டியது சமூக கடமையாகும். பெண்கள் தாம் பெற்ற கல்வியின் வாயிலாக பிற பெண்களுக்கு கல்வி போதிப்பதாகட்டும், இஸ்லாம் எதிர்க்கொள்ளும் தாக்குதல்கள் குறித்து பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலாகட்டும், வளரும் தலைமுறையினரை பயிற்றுவிப்பதிலாகட்டும் ஆசிரியராக, மருத்துவராக இன்னும் எந்தத் துறையிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்கவேண்டும்.

சட்டக் கல்விக்கான தேடல்:

“சட்டம் ஓர் இருட்டறை. வக்கீலின் வாதம், அதில் ஒளி விளக்கு”
என்று அறிஞர் அண்ணா கூறினார். சட்டத்தின் மொழி தெரிந்தால் மட்டுமே ஓர் ஒடுக்கப்பட்ட சமூகம் தனது சட்டரீதியான உரிமையை நிலைநாட்ட இயலும். வெள்ளையரின் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் அடிமைத்தனங்களை தகர்க்க நம் முன்னோர்கள் முதலில் செய்தது சட்டக்கல்வியை பயின்றதுதான்! காந்தி, நேரு, வல்லபாய் படேல், ஜின்னா என்று சுதந்திர போராட்ட தலைவர்களில் 80 % பேர் சட்டக்கல்வி முடித்த வழக்கறிஞர்களே. டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்வி பயின்றதன் காரணமாகத்தான் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் விடுதலைக்கு இறுதிவரை போராடி அவர்களின் உரிமையைப் பெற்றுத் தந்தார். இறுதியில் இந்தியாவின் அரசியல் சாசனத்தை எழுதும் தலைமைப் பொறுப்பையும் வகிக்க இயன்றது.

இன்று படிப்பு வராதப் போக்கிரி பயல்கள் மட்டுமே சட்டக்கல்வி பயில்கின்றனர் என்ற நம் சமூகத்தின் எண்ணம் தவறானது. பிராமணர்கள் அதிகம் மேல் சட்டக்கல்வி பயின்று பல உயர்நீதி மன்றங்கள், மற்றும் உச்சநீதிமன்றங்களில் நீதிபதியாக அமர்ந்து நமது இறையில்லம் தொடர்பான வழக்கில் நமக்கு எதிராக தீர்ப்புச் செய்யும் நிலைதான் இன்று. இன்று இஸ்லாமியச் சமூகத்திற்கு அதிகமான இடஒதுக்கீடு சிறைச்சாலைகளில்தான் வழங்கப்பட்டுள்ளது. சச்சார் கமிட்டியின் அறிக்கைப்படி நாட்டின் சிறைச்சாலைகளில் 30 % அதிகமானோர் இஸ்லாமியர்களாகத்தான் உள்ளனர். இவர்களில் மிகுதியானோர் அப்பாவிகள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடிமையான இவ்விளைஞர்களுக்காக வாதாடி உண்மையை இவ்வுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்கள் அப்பாவிகள் என்று நிருபிப்பதற்கு கூட போதிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் இல்லை. எனவே இளைய தலைமுறையினர்க்கு சட்டம் மற்றும் நீதித்துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டக்கல்வி பயில ஊக்குவித்தும், சட்டம் பயின்றவர்கள், நீதிபதித் தேர்வுகளில் கலந்துக்கொள்ள வழிகாட்டுவதும் இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் தலையாய கடமையாகும்.

கல்வித் தேடலில் செல்வந்தர்களின் பங்கு:

சச்சார் கமிட்டியின் அறிக்கையின் படி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் போதுமான அளவு ஆரம்ப பள்ளிகளோ, கல்லூரிகளோ அல்லது பல்கலைகழகங்களோ இல்லை, சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆகிய நீதிபதிகளின் அறிக்கை மற்றும் இந்த அவல நிலை மாற மத்திய, மாநில அரசுக்கு அவர்கள் பரிந்துரைத்த ஆலோசனைகளும் இன்று பல ஆண்டுகள் ஆகியும் தூசிப்படிந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். இந்நிலையில் கல்விக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக முஸ்லிம் தன்வந்தர்களுக்கு உண்டு. கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் முஸ்லிம் செல்வந்தர்களின் ஒன்றிணைந்து பல பல்கலை கழகங்கள், கல்லூரிகள், ஆரம்ப பள்ளிகள் ஆகியவற்றை நிறுவியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் இதில் சொற்ப சதவீதம் மட்டுமே செயல்பட்டுள்ளனர்.

கல்விக்கான உதவித்தொகை, ஊக்கத்தொகை வழங்குவதிலாகட்டும், மத்திய ஆட்சிப் பணி மற்றும் மாநில ஆட்சிப் பணிகளுக்கான பயிற்சிக் கல்லூரிகளை துவக்குவதிலாகட்டும், புதிய இஸ்லாமிய கல்லூரி ஆரம்ப பள்ளிகளை துவக்குவதிலாகட்டும் ஒன்றிணைந்து சேவை மனப்பான்மையுடனும், திட்டமிடலுடனும், ஒற்றுமையுடனும் செயல்ப்பட்டால் தமிழக முஸ்லிம்கள் கல்வியில் உயர்ந்த நிலை அடைய வாய்ப்புண்டு.

தென்மாவட்டங்களில் உள்ள இதுகுறித்த விழிப்புணர்வு கூட வடமாவட்டங்களில் இல்லை. கலவரத்தால் பாதிக்கப்பட்டு இன்றும் பிந்தங்கியுள்ள கோவை போன்ற மாட்டங்களில் அதன் முஸ்லிம் மக்கட் தொகைக்கு ஏற்ப ஆரம்ப பள்ளிகளோ, கல்லூரிகளோ இல்லை. இந்நிலை மாற வேண்டும்.

பிராமணர் மற்றும் உயர்சாதியினர், ஏன் சில தலித் சமூகத்தில் கூட தற்போது பட்டப்படிப்பு பயில்பவர்கள் அனைவரும் மூன்றாம் அல்லது நான்காம் தலைமுறையினர். எனவே அவர்களின் பெற்றோர் மற்றும் சமூகத்தின் வழிகாட்டுதலின் படி படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் உயர்கல்வி பெறும் அனைவருமே முதல் தலைமுறையினர். இவர்கள் பெற்றோர் பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர்கள். எனவே இவர்களின் பிள்ளைகள் அனைவரும் உயர்மதிப்பெண் பெறுவது என்பது சாத்தியமில்லை. இந்நிலையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு மட்டுமே 'கல்வி உதவித் தொகை வழங்குவது என்று சில செல்வந்தர்களின் நிலை உள்ளதால், நடுநிலையாக பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகைப் பெற முடியாமல் உயர்கல்வி பெற இயலாது போய்விடுகிறது. எனவே முஸ்லிம் செல்வந்தர்கள் சமூகத்தின் எதார்த்த நிலையறிந்து நடுநிலையாக பயிலும் மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கினால் வருங்காலத்தில் உயர்கல்வி பெறும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கைப் பெருகும்.அவர்களுக்கு பின் மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறையினருக்கு அவ்வுதவியே தேவைப்படாத அளவு கல்வியில் சிறந்து விளங்குவர்.

சில செல்வந்தர்கள் நல்மனதுடன் கல்விச் சாலைகளை நிறுவினாலும், தெளிவாக திட்டமிடல் இல்லாததாலும், முறையான கவனிப்பின்றியும் காலப்போக்கில் இஸ்லாமிய கல்வி நிறுவனகள் தரம் குறைந்து முஸ்லிம் பெற்றோரே அப்பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கத் தயங்குகின்றனர். கோவையில் ஒரு புகழ்பெற்ற இஸ்லாமியப் பள்ளியும், வேறொரு சமூகத்தை சார்ந்த அறக்கட்டளையும் ஒன்றின் பள்ளியும் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இன்று முஸ்லிம் பள்ளி உயர்நிலை தரத்தைத் தாண்டவில்லை. ஆனால் பிற சமூகத்தின் பள்ளி, கல்லூரியாகி பின்பு பல்கலைகழகமாக மாறி இன்று மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி என்று அவினாசி சாலையே இன்று அதன் அடையாளத்தை கொண்டு அழைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பித்தவர்களின் நோக்கம் தூய்மையானதாக இருந்தும், பின் வந்தவர்களின் ஊழல், கோஷ்டிபூசல், கவனிப்பின்றியும் , நவீன காலத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளாததாலும் முஸ்லிம் பள்ளி சத்துணவுப் பாடசாலைப் போன்றே இன்றுமுள்ளது.

எனவே முஸ்லிம் செல்வந்தர்கள் ஒன்றிணைந்து கல்விச் சாலைகள் நிறுவுவதோடு மட்டுமல்லாமல் சிறந்த அறக்கட்டளைகள், திறமையான நிர்வாகிகள் மூலம் அதனை சரிவர இயக்கி உலகத் தரம் வாய்ந்த கல்விசாலைகளாக அதனை மாற்ற வேண்டும்.

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
"ஆதமின் மகன் இறந்துவிட்டால் மூன்றைத் தவிர மற்ற செயல்கள் எல்லாம் முடிந்துவிடும், 
1. தொடர்ந்து நன்மை தரும் ஜகாத் 
2. அவர் மூலம் பயன்பெறப்படும் கல்வி 
3. அவருக்காக பிராத்தனை செய்யும் நல்ல குழந்தை 
( அபூ ஹுரைரா (ரலி) , முஸ்லிம்-1631
இறந்த பின்னும் மண்ணறையில் துணையாக வரும் கல்விப் பணி குறித்து செல்வந்தர்களை ஊக்கமூட்டி உற்சாகப்படுத்த வேண்டியது ஆலிம்களின் பங்கும், அவர்களின் பணியை பாதுகாத்து திட்டமிடலுடன் அடுத்த தலைமுறைக்கும் பயனளிக்கும் வகையில் மாற்றுவது சமூகத் தலைவர்களின் கடமையாகும்.

வேலைவாய்ப்பும் இட ஒதுக்கீடும்:

கல்வி மட்டுமல்ல அதற்கான வேலை வாய்ப்பும் ஒரு சமூகத்தின் சீராக அமைந்தால் தான் கல்விக்கான தேடல் சரியான திசையில் செல்லும். நாம் மேற்கூறிய கல்விச் சீர்த்திருத்தங்கள் மேற்கொண்டு இளைய தலைமுறையினர் அதன் வழியில் கல்வித் தேடல் அமைந்தால் அதற்கு பின்பு தனியார் மற்றும் அரசுத்துறையில் வேலை வாய்ப்புகள் குறித்தான தேடலில் இன்றைய இஸ்லாமிய சமூகம் தோற்கடிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. காரணம் சிறுபான்மையினரான நாம் திட்டமிட்டு வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுகிறோம்.

2011 ஆம் ஆண்டு தமிழக அரசின் மக்கட் தொகை கணக்கின்படி முஸ்லிம் மக்கட் தொகை தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 8 % ஆகும். இதுவே மிகவும் குறைத்து காட்டப்பட்ட ஒன்று என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் நமக்கு வழங்கப்படும் அரசுத்துறையில் இடஒதுக்கீடு 3.5 % மட்டுமே. அதுவும் சரிவர நடைமுறைப்படுத்தப்படாமல் திட்டமிட்டு மறுக்கப்படுகிறது . சமீபத்தில் அரசு மருத்துவர்களை தேர்வு செய்யும் விசயத்தில் கூட எப்படி அநீதியிழைக்கப்பட்டது என்பது உலகறிந்தது. எனவே தமிழகத்தில் அரசுத்துறையில் மட்டுமல்லாது தனியார் துறையிலும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 8 % வேலைவாய்ப்பு ரங்கநாத் மிஸ்ரா வேலை வாய்ப்பும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின்படி மத்திய அரசுப் பணிகளில் 10 % வேலைவாய்ப்பும் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இன்று இஸ்லாமிய இயக்கங்கள் இது குறித்து ஒன்றுபட்டு குரல் கொடுப்பது வரவேற்கத் தக்க ஒன்று. தற்போதைய தமிழக முதல்வர் தேர்தலுக்குமுன் தான் ஆட்சிக்கு வந்தால் தமிழக முஸ்லிம் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார். அதனை அவர் உடனே அமல்படுத்த வேண்டும்.மத்திய அரசும் சென்ற தேர்தல் வாக்குறுதியில் வாக்களித்தபடி உடனடியாக மத்தியில் 10 % இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

வழங்கினால் மட்டும் போதாது, அது சரிவர அமல் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும்.இது குறித்து முஸ்லிம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது சமூகத் தலைவர்களின் பொறுப்பாகும்.

முடிவுரை:

கல்வி என்பது பிறர் கூறுவது போல் தனி மனித முயற்சியால் கிடைக்கும் ஒன்றல்ல. மாறாக ஒரு சமூகம் கூட்டு முயற்சியில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து வளரும் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க அனைத்து முயற்சிகளையும் தியாகங்களையும் செய்ய வேண்டும்.

அலிகர் பல்கலைகழகத்தை நிறுவ அரும்பாடுபட்ட செய்யது அஹமது கான் ஒரு நாள் இரவு நடுநிசியில் அழுது கொண்டிருந்தார். அன்னாரிடம் அதுகுறித்து வினவப்பட்டபோது என் சமூகம் தான் எதிர்க்கொண்டுள்ள சவால்கள், சதிகள் பற்றி அறியாது உறங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் தான் நான் விழித்திருந்து அழுகிறேன் என்றார். 
அத்தகைய பெரும் தலைவர்கள் காட்டிய கல்வி சாலைகள் தான் இன்னும் இந்திய முஸ்லிம்களை ஓரளவு விழிப்புடன் இருக்கச் செய்துள்ளது. எனவே சமூக தலைவர்கள், ஆலிம்கள், பெற்றோர்கள் அனைவரும் தனது கனமான பொறுப்பை உணர்ந்து வளரும் தலைமுறையின் கல்விக்காக ஓயாது பாடுபட வேண்டியது அவசியமாகும். நாம் தூய எண்ணத்துடன் அல்லாஹ்வின் வழியில் பயணம் மேற்கொண்டால் அல்லாஹ் நமக்கு வழிகாட்டி, துணையாக நின்று அப்பணியில் வெற்றிப் பெறச் செய்வான்

No comments:

Post a Comment