Friday, 1 November 2013

பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 03

தொடர்ச்சி…..

4. ஒழித்த பித்அத்துக்குப் பிரதியீடாக அதனை விடச் சிறந்த ஒன்றை வழங்க முயல்தல்

சமூகத்திலிருந்து ஒரு பித்அத்தைக்களையும் வேளையில் அதற்குப் பிரதியீடாக ஷரீஅத் கூறும் ஒன்றை முன்வைக்க முயல வேண்டும். ஒரு பித்அத்தில் ஏதாவது நன்மை இருப்பின் அதனை ஒழிக்கும்போது அதற்குப் பகரமாக முடியுமானவரை ஷரீஆ அனுமதிக்கும் ஒரு நற்கரு மத்தை முன்வைக்க முயல வேண்டும். உள்ளங்கள் எப்பொழுதும் ஒன்றைப் பிரதியீடாகப் பெறாமல் ஒன்றை விடாது. ஒருவர் ஒரு நன்மையை விடுவதாயின் அதை ஒத்த ஒன்றையோ அல்லது அதனைவிடச் சிறந்த ஒன்றையோ பெற்ற பின்னரே அதனை விட வேண்டும், என்று கூறும் இமாம் இப்னு தைமிய்யா, தொடர்ந்து பித்அத்களைச் செய்வோர் குறைகூறப்பட வேண்டியவர்களாகவும் குற்றம் காணப்பட வேண்டியவர்களாகவும் இருப்பது போலவே நபிகளாரின் ஸுன்னாக்களை விடுவோரும் செயற்படுத்தாதோரும் கண்டிக்கத்தக்கவர்களாகவே இருக்கின்றனர் எனக் குறிப்பிடுகின்றார்.


5. பித்அத்துகளை ஒழிப்பதைவிட ஸுன்னத்துகளை உயிர்ப்பிப்பதில் கூடிய கவனம் செலுத்துதல்

மக்கள் மத்தியில் பித்அத்துகளை இனம் காட்டும் அதே வேளையில் சரியான ஸுன்னாக்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியமாகும். பித்அத்துக்களை ஒழிப்பதில் செலுத்தும் கவனத்தைவிட ஸுன்னாக்களை உயிர்ப்பிப்பதில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.
இபாதத்துகளிலுள்ள பித்அத்துகளை எதிர்க்கின்ற பலர் ஸுன்னாக்களை எடுத்து நடப்பதிலும் அவற்றைப் பிறருக்கு ஏவுவதிலும் சிரத்தையற்றவர்களாய் இருக்கின்றனர். அந்த பித்அத்துகளைச் செய்பவர்களின் நிலையைவிட, பல சந்தர்ப்பங்களில் இத்தகையவர்களின் நிலை மோசமாகவே இருக்கின்றது. உண்மையில், மார்க்கம் என்பது நன்மையைக் கொண்டு ஏவுவதும் தீமையிலிருந்து தடுப்பது மாகும்.
இவ்விரண்டில் ஒன்றின்றி அடுத்தது நிலைக்க முடியாது என இமாம் இப்னு தைமியா குறிப்பிடுகின்றார். இக் கருத்தைக் கூறும் அவர், தொடர்ந்து மனித உள்ளங்கள் எப்பொழுதும் செயல்படுவதை விரும்புகின்றனவே அன்றி செயலிழந்திருப்பதையல்ல எனக் கூறுகிறார். இது ஓர் உளவியல் ரீதியான உண்மையாகும்.

6. பித்அத்துகளை ஒழிப்பதுவே முழு இஸ்லாமிய தஃவாவாகும் என்ற கருத்தைக் கொள்ளாதிருத்தல்

இஸ்லாமிய பிரச்சாரம் என்பது பித்அத்துகளை எதிர்த்துப் போராடுவதே எனக் கருதுவது பிழையானதாகும். இஸ்லாம் தனக்கென ஓர் ஆட்சியையும் சமூகத்தையும் பெற்று மேலோங்கியிருந்த காலப் பகுதியில் பித்அத்துகளை ஒழிப்பது மாத்திரம் சிலவேளை இஸ்லாமியப் பிரசாரமாக அமைந்திருக்க இடமுண்டு. ஆனால் இன்றைய காலகட்டம் அத்தகையதல்ல. பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி இன்று இஸ்லாம் 'அல் குர்பத்துஸ் ஸானியா' எனும் இரண்டாவது அநாதரவான, அறிமுகமற்ற நிலையை அடைந்திருக்கின்றது. இஸ்லாம் இன்று ஆட்சிபீடத்திலில்லை. மனித வாழ்வின் பல துறைகளுக்கு அது இன்று அந்நியமானதாக மாறியுள்ளது. அதற்கெதிரான சதித்திட்டங்கள், அது எதிர்நோக்க வேண்டியுள்ள சவால்கள் ஒன்றிரண்டல்ல.
எனவே, இஸ்லாத்தின் அடிப்படைகளே ஆட்டங்கண்டுள்ள இத்தகைய ஒரு காலப்பிரிவில் இபாதத்களில் காணப்படும் பித்அத்துக்களை எதிர்ப்பதே முழு தஃவாவுமாகுமென்று கருதுவது எவ்வளவு தூரம் அபத்தமானது! ஆகவே பித்அத்துக்களை ஒழிப்பதற்கான முயற்சி முழு இஸ்லாமிய தஃவாவின் ஒரு பகுதியேயாகும் என்பதனையும் இஸ்லாமியப் பிரசாரகர்கள் கவனத்திற் கொள்ளல் வேண்டும

7. 'அல்ஹிக்மா' எனும் ஞானத்தையும் 'அல்மவ்இழத்துல் ஹஸனா' எனும் நல்லுபதேசத்தையும் கடைப்பிடித்தல்

'உலகில் இரு விடயங்களுக்கு வரையறுக்கப்பட்ட நியதிகள் கிடையா. அவற்றில், ஒன்று யுத்தமாகும். அடுத்தது அன்பாகும்' எனக் கூறும் மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி 'வரையறுக்கப்பட்ட நியதிகளுக்குட்படாத மூன்றாவது ஓர் அம்சமும் உண்டு. அது தஃவாவாகும்' எனக் கூறுகின்றார். உண்மையில், இஸ்லாம் பிரசாரத்துக்கான பொதுவான வழிகாட்டல்களை மாத்திரமே வழங்குகிறது. இவ்வகையில் 'அல்ஹிக்மா' எனும் ஞானத்தையும், 'அல் மவ்இழதுல் ஹஸனா' எனும் நல்லுபதேசத்தையும் கொண்டு, சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து, தஃவாவில் ஈடுபட வேண்டியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியப் பிரசாரம் வெற்றிபெற 'அல்ஹிக்மா' பெரிதும் துணைபுரிய முடியும்.
இதனால்தான் அல்குர்ஆனும், அதனை வலியுறுத்துகிறது. ''(நபியே) நீர் உமது இறைவனின் பாதையில் ஹிக்மா எனும் ஞானத்துடனும் விநயத்துடனும் அழைப்பீராக''(16:125)

No comments:

Post a Comment