ஒரு வீடு என்பது
மண்ணாலும் கற்களாலும் ஆனது. அதுபோல் ஒரு குடும்பம் என்பது அன்பாலும்
பாசத்தாலும் ஆனது. அந்தப்பாசப்பிணைப்பு இன்று கொஞ்சங் கொஞ்சமாக மனித
மனங்களிலிருந்து கழன்று கொண்டிருக்கிறதோ என்கின்ற ஐயப்பாடு தோன்றுகிறது.
பெற்றோர்
அன்பு, சகோதர பாசம் உறவுத்தொடர்புகள் எல்லாம் குறைந்து வருகிறது.
‘வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.’ சில
இடங்களில் இன்று இந்த நிலைதான். இந்த நிலையில் தாய் – தந்தை உறவு பற்றி
இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.
தாய்க்கு முதலிடம்:
‘மனிதர்களுள்
யாருக்கு நான் அதிகக் கடன்பட்டுள்ளேன்?’ இது நபித்தோழர் ஒருவரின் வினா.
‘தாய்’ என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்கள். ‘அடுத்து யார்?’ என மீண்டும் அவர் கேட்க, ‘தாய்’ என்றே
கூறினார்கள். மூன்றாவது முறையாக ‘அடுத்து யார்?’ என்று கேட்டபோதும் ‘தாய்’
என்றே பதில் வந்தது. ‘அடுத்து யார்?’ என நான்காம் முறையாக அவர் கேட்க
‘தந்தை’ என்று பதிலளித்தார்கள் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்கள். ( அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, – புகாரீ ஷரீஃப்.)
ஒரு
குழந்iயின் வளர்ச்சிக்கு தாய்-தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும்
தந்தையைவிட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம். காரணம் என்ன?
திருக்குர்ஆன் கூறுகிறது: ‘அவனுடைய அன்னை, அவனைச்சிரமத்துடனேயே கருவுற்று
சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச்
சுமந்திருப்பதற்கும் பால்குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள்
ஆகின்றன.’ ( அல் குர்ஆன் 46:15).
தியாகத்திற்கு
தாயைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்வது சிரமம். அவள் ஒரு குழந்தையின்
பிறப்புக்காக இறப்பின் வாசல்வரை சென்று வருகிறாள; தன் உயிரைப் பணயம்
வைத்துக் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தைக்காகத் தாய் செய்யும் தியாகம்
மகத்தானது. கொஞ்ச நேரம் இளைப்பாறிக்கொள்ள ஒரு பத்து நிமிடம் மற்றொருவரின்
விரகுச்சுமையைத் தாங்கி நிற்கவே ஒதுங்கிவிடுகிற இந்த காலத்தில் தொடர்ந்து
பத்து மாதம் ஒரு சிசுவைத் தன் வயிற்றில் சுமப்பதென்பது எவ்வளவு பெரிய
தியாகம்!
குழந்தைக்கு
நோய் என்றால் தான் பத்தியம் இருக்கிறாள் என்பது மாத்திரம்அல்ல,
நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாதபோது நலமாயுள்ள தாய்,
தானும் அந்த மருந்தை சிறிது குடிக்கிறாள். ஏன்? தாய்க்கும் தனக்கும் ஒரே
நோய்தான் என்று குழந்தை எண்ணி ஆறுதல் அடைவதற்காக. ஒரு அறிஞரின் சொல் எப்படி
இருக்கிறது பாருங்கள்: ‘ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள்
என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு
இருப்பதில்லை’. சிலரது வாழ்வில் இது உண்மையுங்கூட!