தொடர்ச்சி…..
2. பகுத்தறிவுக்கு அளவு கடந்த முக்கியத்துவம் கொடுத்தல்
இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் கூறுகின்ற முடிவுகளுக்கு முரணாக, பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனடிப்படையில் முடிவுகளைப் பெற்றபோது பல பித்அத்கள் தோன்றுவதற்கு முஃதஸிலாக்களே பெரிதும் காரணமாக அமைந்தனர். இவர்கள் தமது பகுத்தறிவுக்கு முரணாகத் தெரிகின்ற ஹதீஸ்களை மறுத்தனர். இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டில் காணப்படும் பல அடிப்படைகளையே நிராகரித்தனர். அவற்றிற்கு வலிந்து பல பிழையான விளக்கங்களைக் கொடுத்தனர். இவர்களால் உருவான சில பித்அத்தான கருத்துக்கள் கீழ்வருமாறு:-
1 மறுமையில் அல்லாஹ்வைக் கண்களால் காணமுடியாது.
2 ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் உலகிற்கு வரப்போவதில்லை.
3 கப்றில்; வேதனை கொடுக்கப்படுவதில்லை.
மேலும், ஸிராத், மீஸான் போன்ற பகுத்தறிவினால் புரிந்துகொள்ள முடியாத, அகீதா தொடர்பான ஆதாரபூர்வமான பல அம்சங்களுக்கு பகுத்தறிவினடிப்படையில் பல பிழையான விளக்கங்களைக் கொடுத்தனர்.
இத்தகையோர் பற்றி ஷாஹ்; வலியுல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறார்: 'இந்த பித்அத்வாதிகள் பல இஸ்லாமிய சட்டங்களில், அவை பகுத்தறிவுக்கு முரணானவை என்று கூறி சந்தேகத்தை ஏற்படுத்தினர். பகுத்தறிவுக்கு முரணான அனைத்தும் மறுக்கப்பட வேண்டும் அல்லது அவற்றிற்குரிய விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
இவ்வகையில்தான் கப்றின் வேதனையைப் பொறுத்தவரையில் அது புலன்களும் பகுத்தறிவும் ஏற்றுக்கொள்ளாத ஒன்று எனக் குறிப்பிட்டு அதனை மறுத்தனர். அவ்வாறே ஹிஸாப், ஸிராத், மீஸான் போன்றவை பற்றியும் மிகத் தூரமான விளக்கங்களைக் கூறியுள்ளனர்.' இஸ்லாமிய அறிஞர்கள் எப்போதும் பகுத்தறிவுவாதிகளை பித்அத்வாதிகளாகக் கருதிவந்திருப்பதனைக் காணமுடிகின்றது.
'எல்லாக் காலங்களிலும், அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் பகுத்தறிவு வாதிகளை பித்அத் வாதிகளாகக் கருதியதோடு, அவர்களை என்றும் இஸ்லாமிய அறிஞர்களாக எவரும் ஏற்றுக்கொண்டதில்லை' என இமாம் இப்னு அப்தில் பர் குறிப்பிடுகின்றார்.
3. மனோ இச்சையைப் பின்பற்றல் (சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடமளித்தல்)
மனோ இச்சைக்கு வழிப்பட்டு நடந்துகொண்டமை பித்அத்கள் உருவாவதற்கு ஓர் அடிப்படைக் காரணமாக இருந்துவந்துள்ளது. பிரபல்ய நோக்கம், பொருளாதார நோக்கங்கள், எதிரிமீது கொண்ட காழ்ப்புணர்ச்சி, சீர்திருத்தம் செய்வதிலும் சம்பிரதாயங்களுக்கு முரணாக நடந்துகொள்வதிலும் பலருக்கிருந்த அச்சம் பல பித்அத்கள் தோன்றி வளர்வதற்கு வழிவகுத்தன. சுயவிருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுத்ததனால் வரலாற்றில் தோன்றிய பித்அத்தான பிரிவுகள் ஏராளம்.
அவை தமக்கென ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு, அதனை நிறுவும் விதத்தில் பல சந்தர்ப்பங்களில் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் வலிந்து விளக்கங்கள் கொடுத்தும், பிழையான விளக்கங்கள் கொடுத்தும் வந்ததுடன், இஸ்லாத்தின் மூலாதாரங்கள் தம் கொள்கைக்கு முற்றிலும்; முரணாக அமைகின்றபோது, அவற்றைத் துணிந்து பொய்ப்பித்து மறுக்கவும் பின்வாங்கவில்லை.
இதுபற்றி இமாம் இப்னு தைமிய்யா பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 'நமது முன்னோர் குர்ஆனையும் ஈமானையும் பற்றிப்பிடித்திருந்தனர். ஆனால், உம்மத்தில் பிளவுகளும் பிரிவினைகளும் உருவானபோது பல குழுக்களாக மாறிய பிரிவினைவாதிகள், (உள்ரங்கத்தில்) தங்களுக்கான அடிப்படைகளாக குர்ஆனையும் ஈமானையும் கொள்வதற்குப் பதிலாக, தமது தலைவர்கள் உருவாக்கிய அடிப்படைகளில் நிலைத்திருந்ததுடன் அவற்றுடன் இணைந்து ஒத்துவருகின்றவற்றை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு முரண்படுகின்ற அனைத்துக்கும் வலிந்து விளக்கங்களைக் கொடுத்தனர்.குர்ஆனினதும் ஹதீஸினதும் நோக்கங்களோ நாட்டங்களோ இவர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானதாக இருக்கவில்லை.' பித்அத்தான ஒவ்வொரு பிரிவினரும் அல்குர்ஆனை விளங்குவதற்கும் விளக்குவதற்கும் தமக்கென ஒரு தனியான கருத்தோட்டத்தைக் கொண்டிருந்தமை இதற்குச் சிறந்த உதாரணமாகும். குர்ஆனைக் கொண்டு தத்தமது பிரிவின் அடிப்படைகளை நிறுவிக்கொள்வதே இச்செய்கையின் நோக்கமாக இருந்தது.
இதனால்தான் மேற்கூறிய போக்கினையுடைய அல்கவாரிஜ், முர்ஜிய்யா, கதரிய்யா, அஷ்ஷீஆ போன்ற பிரிவுகள் இஸ்லாமிய அறிஞர்களால் 'அஹ்லுல் பிதாஇ வல்- அஹ்வாஃ' (மனோ இச்சைகளுக்கு வழிப்பட்ட பித்அத்வாதிகள்) என அழைக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment