Tuesday, 8 January 2013

திருமணத்தில் தீய பழக்கங்கள்

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.
ஒரு மணப்பந்தலை அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்து மணமக்களை அமரவைத்து குடும்பத்தினர் அனைவரும் மாறி மாறி போட்டோ எடுப்பதும் ஆடல் பாடல் என்று கும்மாளமிடுவதும் சர்வசாதாரணமாக பல திருமணங்களில் காணலாம். இங்கேயும் எந்த பாகுபாடுமின்றி மஹ்ரம் பேணப்படுவது கிடையாது. வருகிறவர் போகிறவர் நண்பர்கள் அனைவரும் மணமக்களை பார்த்து ரசிப்பது பெரும் வேதனைக்குரிய செயலாகும். தனது மனைவியின் அழகை தான் மட்டும் ரசிக்காமல் ஊருக்கே ரசிக்கச் செய்யும் இவர்களும் முஸ்லிமான ஆண்களா?
மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்” வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான மகிமை அளிப்பதும்-

திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும்  மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும்   பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும்   ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும்   எங்கே போய்க் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்?
சமுதாயம் சீர் பெற   இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பெருமைக்காகவும்   ஆடம்பரத்துக்காகவும்   செய்யும் வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அப்போது தான் ஏழ்மையான மக்களின் சிரமங்களைக் குறைக்க முடியும்.
‘குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் நிறைந்ததாகும்.” என்பது நபி மொழி. (அறிவிப்பவர். ஆயிஷா (ரலி) ஆதாரம் அஹ்மத்)
வரதட்சனை என்னும் வன்கொடுமை ஒழிய வேண்டும். சீர் வரிசை என்னும் பெயரில் பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் பாதகர்கள் திருந்த வேண்டும்.
கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க இறையச்சமுள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்.
வரதட்சனை ஒரு மாபெரும் கொடுமை என்பதை உணர்ந்த ஏராளமான இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யத் தயாராகி விட்டனர்.
என்றாலும் இது ஒரு சாதனை அல்ல. மணப் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையைக் கொடுத்து மணம் முடிக்க வேண்டும். இதுவே மார்க்கச் சட்டம்.
சிலர் மஹர் என்னும் பெயரில் சொற்பத் தொகையை நிர்ணயித்து அதையும் கொடுக்காமல்   பள்ளிவாசலின் பதிவுப் புத்தகத்தில் பெயரளவில் எழுதி வைத்து விட்டு   கட்டிய மனைவியிடம் கடன்காரனாகக் காலத்தைக் கழிக்கிறார்கள்.
மஹர் தொகையைக் கொடுக்காமல் கடன் காரனாக இருப்பவர்கள் இப்போதாவது கொடுத்து விட வேண்டும். மஹர் தொகையை இப்போது கொடுப்பதால் ‘தலாக்” ஆகி விடும் என்று சிலர் கருதுகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கை. அறியாமல் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.
இவ்வளவு அனாச்சாரங்கள் அரங்கேரும் போதும் உலமாக்கள் என்று சொல்லுபவர்கள் உக்கார்ந்து மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள் என்றால் இதுதான் இஸ்லாத்தை போதிக்கின்ற முறையா? திருமணத்தை எதிர்நோக்குகின்ற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனது திருமணம் ஆடம்பரமில்லாமல் சுன்னாஹ்வின் வழியில் நடைபெற உதவிபுரிய வேண்டும். ஊர் வழமை, சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தையும் உடைத்தெரிந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் வழிகாட்டிய திருமணத்தை, எளிய திருமணத்தை நடத்திக்காட்டி சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment