Friday, 21 February 2014

''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.''

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.
ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-
அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?
ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?
இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?
ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?
தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?
தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?
மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?

மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?
யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா? ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்த சுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விட அனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?
தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?
அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?
செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்ற அருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக் கொண்டிருக்கின்றீர்களா?
இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்கு உதவினீர்களா?
உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?
பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்து கொண்டீர்களா?
அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?
ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?
நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும், இஸ்திஃக்ஃபார் என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?
இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்'' என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடைய வேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே..! (முஸ்லிம்)
மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?
உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?
இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமிய நூல்களை வாங்கினீர்களா?
இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லது மரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.
இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே.. உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?
உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடி சந்தித்ததுண்டா?
மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டை அயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?
உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?
இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்'' (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?
யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்.'' இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ் உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?
மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.''

1 comment:

  1. Grand Jackpots (Grand Jackpots) - Mapyro
    Grand Jackpots are a 창원 출장안마 way to 성남 출장마사지 experience the excitement of the Grand Jackpots online 청주 출장마사지 casino with 경상북도 출장안마 the largest jackpot prizes of 통영 출장마사지 any game!

    ReplyDelete