உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து
முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை
வீணாக்கிவிடும். மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில்
இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின்
சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன்
அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.
ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)
எந்த வணக்கமும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.
(எனினும் அவர்களுக்கோ) இறைவனுடைய
கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து
அல்லாஹ் ஒருவனையே வணங்கி தொழுகையையும் கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து
வருமாறேயன்றி (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. இதுதான் நிலையான
சட்டங்களுடைய மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)
தங்களது பொருளை ஏழைகளுக்கு செலவு
செய்யும்போது அதை சொல்லிக் காண்பித்து ஏழைகளின் கண்ணியத்தை
காயப்படுத்துபவர்களை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான். முகஸ்துதி
கலந்துவிட்டால் அவ்வணக்கம் வீணாகிவிடும்.
விசுவாசிகளே! நீங்கள் உங்களுடைய தர்மத்தை
(ப்பெற்றவனுக்கு) இகழ்ச்சியையும், துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன்
பலனை) வீணாக்கிவிடாதீர்கள். அவ்வாறு (செய்பவன்) அல்லாஹ்வையும் கடைசி
நாளையும் விசுவாசம் கொள்ளாது (தான் தர்மவான் என்பதைப் பிற) மனிதர்களுக்கு
அறிவிக்கும் பொருட்டு தன் பொருளை செலவு செய்து (வீணாக்கி) விட்டவனுக்கு
ஒப்பாவான். அவனுடைய உதாரணம்; ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது.
அதன்மீது மண் படிந்தது. எனினும் ஒரு பெரும் மழை பொழிந்து அதை (க் கழுவி)
வெறும் பாறையாக்கிவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை
அழித்துவிடும்). ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததிலிருந்து யாதொரு பலனையும்
(மறுமையில்) அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:264)
ஏழைகளுக்கு தான் செய்த உபகாரத்தை
சொல்லிக் காட்டுவது, அந்த தர்மத்தின் நற்பலன்களை வழுக்குப் பாறையில்
ஒட்டியிருந்த மணலை பெரும் மழை அடித்துச் சென்று விடுவதுபோல அழித்து
விடுகிறது. புகழுக்காக தர்மம் செய்பவர் அல்லாஹ்வின் நேர்வழிக்குத்
தகுதியற்றவர், அவர் நிராகரிப்பாளர்களுடன் இணைக்கப்பட்டு விடுவார் என்பதை
இந்த வசனத்தின் பிற்பகுதி சுட்டிக் காட்டுகிறது.
”மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும்
ஜனங்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில்
செலுத்தமாட்டான்.” முகஸ்துதிக்காரர்கள், மனிதர்கள் தங்களைப் புகழவேண்டும்
என்பதற்காக நல் அமல்களைச் செய்வார்கள். மகத்தான இரட்சகனின்
திருப்பொருத்தத்தை நாடமாட்டார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ்
குறிப்பிடுகிறான்…
அவர்கள் தொழுகையில் நின்றாலோ
சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள்.
அவர்கள் வெகு சொற்பமாகவே அன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை. (அல்குர்ஆன்
4:142)
அவர்கள் அல்லாஹ்வுடன் மற்றவர்களை
இணையாக்கிதன் காரணமாக அவர்களது அமல்கள் மறுக்கப்படும். தனது திருப்தியை
நாடி, தூயமனதுடன் செய்யப்படும் அமல்களை மட்டுமே அல்லாஹ் ஒப்புக்
கொள்கிறான்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள்
அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ்
கூறுகிறான், ”நான் இணைவைப்பவர்களின் இணையை விட்டும் தேவையற்றவன். ஒருவன்
ஏதேனும் அமல் செய்து என்னுடன் மற்றெவரையும் கூட்டாக்கினால் நான் அவனை அவனது
இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
தூய இதயத்துடன் வருவது தவிர வேறெந்த
செல்வமும் மக்களும் பலனளிக்காத அந்நாளில் முகஸ்துதிக்காரர்கள் சந்திக்கும்
இழிவையும் வேதனையையும் நபி (ஸல்) அவர்கள் விவரித்துக் கூறினார்கள்:
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். ”மறுமை நாளில் முதன் முதலாக
தீர்ப்பளிக்கப் படுபவர்களில் ஒருவன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட
தியாகி. அவன் கொண்டு வரப்பட்டு அவனுக்கு உலகில் அருளப்பட்ட அருட்கொடைகள்
எடுத்துரைக்கப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் அதைக் கொண்டு என்ன
அமல்களைச் செய்தாய் என்று கேட்கப்படும். ”அவன் உனக்காக போர் செய்து
ஷஹீதாக்கப்பட்டேன்” என்று கூறுவான். அல்லாஹ் ”நீ பொய் சொல்கிறாய். நீ
வீரன் என்று புகழப்படுவதற்காக போர் செய்தாய். அவ்வாறு உலகில்
சொல்லப்பட்டு விட்டது” என்று கூறிவிடுவான். பிறகு, முகம் குப்புற
இழுத்துச் சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.
மற்றொரு மனிதன் கல்வியைக் கற்று
பிறருக்கு கற்றுக் கொடுத்தான். குர்ஆனை ஓதியிருந்தான். அவன்
கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அதை ஒப்புக்
கொள்வான். அல்லாஹ் ”அதன்மூலம் என்ன அமல்களைச் செய்தாய்?” என்று கேட்பான்.
அவன் ”நான் கல்வியை கற்று பிறருக்குக் கற்றுக் கொடுத்தேன். உன்
திருப்திக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் ”நீ
பொய் சொல்கிறாய். நீ ஆலிம் என்று புகழப்படுவதற்காக கல்வி கற்றாய், காரி
என்று புகழப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய், அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது”
என்று சொல்வான். பிறகு அவனை முகம்குப்புற நரகில் வீசி எறியுமாறு
உத்தரவிடப்படும்.
இன்னொரு மனிதன், அல்லாஹ் அவனுக்கு உலகில்
பல்வேறு அருட்கொடைகளை வழங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தியிருந்தான்.
அவனைக் கொண்டு வரப்படும். அவனுக்கு அல்லாஹ்வின் நிஃமத்துகள்
நினைவூட்டப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் ”அதைக்கொண்டு என்ன
அமல்களைச் செய்தாய்?” என்று கேட்கப்படும். அவன் ”எந்த வழிகளில் செலவு
செய்வது உனக்குப் பிரியமானதோ அந்த அனைத்து வழிகளிலும் நான் செலவு
செய்தேன்” என்று கூறுவான். ”அல்லாஹ் நீ பொய் சொல்கிறாய், நீ கொடைவள்ளல்
என புகழப்படுவதற்காக செய்தாய், அவ்வாறு உலகில் சொல்லப்பட்டுவிட்டது” என்று
கூறுவான். பிறகு அவனை முகம்குப்புற இழுத்துச்சென்று நரகில் வீசுமாறு
உத்தரவிடப்படும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
இந்த நபிமொழி தர்மம், வீரம், ஞானம்
போன்ற நல் அமல்களில் தீய எண்ணங்களைக் கலந்து விடுவதால் ஏற்படும் விளைவுகளை
சுட்டிக் காட்டுகிறது. தீய எண்ணத்துடன் அமல் செய்வதால் மகத்தான அந்நாளில்
அகில உலக மக்களுக்கு முன்னால் அகிலங்களின் இரட்சகனால் கடும் தண்டனை
வழங்கப்படுவது எவ்வளவு பெரிய இழிவு? அவர்கள் செய்த அமல்கள் தூய எண்ணத்துடன்
அமைந்திருந்தால் எத்தகு நன்மைகளைப் பெற்று சுவனத்தில்
நுழைவிக்கப்படுவர்களோ! அந்த அனைத்து நன்மைகளும் உரியப்பட்டு மாபெரும்
இழிவும், கேவலமும் சூழ்ந்த நிலையில் முகங்குப்புற நரகில் வீசி எறியப்படுவ
தென்பது ஈடுசெய்யவே இயலாத மகத்தான இழப்பல்லவா?
மார்க்கச் சட்டங்களை அறிந்த பேணுதலுள்ள
முஸ்லிம் தனது அனைத்து செயலிலும் முகஸ்துதியிலிருந்து விலகி, அல்லாஹ்வின்
திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவர்
பெருமைக்காக அமல் செய்கிறாரோ அல்லாஹ் அவரை மறுமையில் இழிவுபடுத்துவான்.
எவர் முகஸ்துதிக்காக அமல் செய்வாரோ மறுமை நாளில் அல்லாஹ் அவரது குற்றங்களை
பகிரங்கப்படுத்துவான்.” (ஸஹீஹுல் புகாரி)
No comments:
Post a Comment