Friday 21 February 2014

முதியோர்களைப் பேணும் முறை பற்றி இஸ்லாம்

முதியோர்களின் தள்ளாத வயதில் அவர்களைக் கண்காணித்து அவர்களைக் கண்ணியப்படுத்தி அவர்களது தேவைகளை ஒருவர் நிறைவேற்றுவது என்பது, அவருக்குக் கிடைத்த பெரும்பேராகவும், அவ்வாறு செய்பவரது ஆன்மீக வளர்ச்சிக்கும், இறைப்பொருத்தத்திற்குக் கிடைத்த நல்வாய்ப்பாகவும் அமைகின்றது என இஸ்லாம், முஸ்லிம்களுக்க வலியுறுத்திச் சொல்வதே இதன் காரணமாகும். இஸ்லாமானது பெற்றோர்களுக்காக பிரார்த்திக்க மட்டும் வலியுறுத்தவில்லை, மாறாக தான் எதையுமே செய்ய இயலாத குழந்தையாக இருந்த பொழுது அவர்கள் தங்களது சுயநலன்களை மறந்து நமக்காக அவர்கள் செய்த இணையற்ற ஈடுசெய்ய இயலாத சிரமங்களை எண்ணிப்பார்த்து, தன்னைப் பெற்றவரது முதுமைக் காலத்தில் அவரிடம் பணிவையும், இரக்கத்தையும் வெளிக்காட்டி அவர்களிடம் அளவு கடந்து நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் முஸ்லிம்களைப் பணிக்கின்றது. குறிப்பாக தாயாரிடத்தில் மிகவும் அன்பு காட்டி அவர்களைக் கண்ணியப்படுத்துமாறு இஸ்லாம் வலியுறுத்திக் கூறியுள்ளது.

ஒருவர் தன்னுடைய தாய் தந்தையருக்கு பணிவிடை செய்வது என்பது, இறைவணக்கத்திற்கு அடுத்தபடியான கடமையாகும்., அதை ஒருவர் எதிர்கொண்டு நிறைவேற்றியே ஆக வேண்டும். தள்ளாத வயதிலிருக்கும் தாய் தந்தையரை நோக்கி எரிந்து விழுதலும் அவர்களை ஏளனமாக, சுமையாகக் கருதி நடத்துவதும் வெறுக்கத்தக்க செயலாக இஸ்லாம் கருதுகின்றது, மேலும், அது உங்களது பெற்றோர்களின் தவறன்று. மாறாக, அவர்களது முதுமை மிகவும் கடினமானது, சிரமமானது என்று கருதி அவர்களைக் கண்ணியப்படுத்துமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இறைவன் தன் திருமறைக் குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

(நபியே!) உமதிரட்சகன் - அவனைத்தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்றும், பெற்றோர்க்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருக்கின்றான்: அவ்விருவரில் ஒருவரோ, அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால், அவ்விருவருக்கும் (இழித்துக் கூறப்படும் வார்த்தைகளிலுள்ள) 'சீ' என்று (கூட) நீ சொல்ல வேண்டாம்: (உம்மிடமிருந்து) அவ்விருவரையும் விரட்டி விடவும் வேண்டாம்: அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையைக் கூறுவீராக! இன்னும் அவ்விருவருக்காக இரக்கத்துடன் பணிவு எனும் இறக்கையை நீர் தாழ்த்துவீராக! மேலும் 'என் இரட்சகனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!' என்றும் (பிரார்;த்தித்துக்) கூறுவீராக! (அல்குர்ஆன், 17:23-24)

No comments:

Post a Comment