Thursday 21 November 2013

பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தையாக வளர்ப்போம்


இந்த உலகில் ஒரு சில நல்லமல்களை செய்து விட்டு மரணித்து விடும் நாம், நமது மரணத்திற்கு பிறகும் நமக்கு நன்மையை ஈட்டு தரக்கூடிய ஒன்றை இந்த உலகில் விட்டு செல்கிறோம் என்றால் அது நமது குழந்தைகள் !



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே நின்று விடுகின்றன.



1. நிலையான தர்மம்.

2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி.

3. அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள்.

முஸ்லிம் 3358

எந்த குழந்தையாக இருந்தாலும், அவர்களை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால், நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.




நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், சொர்க்கத்தில் ஒரு அடியானின் தகுதியை உயர்த்துவான். யா அல்லாஹ், இது எனக்கு எப்படி கிடைத்தது? என்று அவன் கேட்கும் போது, உனக்காக உன் குழந்தை பாவ மன்னிப்பு கேட்டது அதனால் தான், என்று அல்லாஹ் விடையளிப்பான்.

அஹ்மத் 10202


அத்தகைய பாக்கியம் நமக்கு கிடைப்பதற்கு நாம் எந்த வகையிலாவது உழைக்க வேண்டுமா பாடுபட வேண்டுமா?? எதுவும் இல்லை, நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தாலே போதும்.

குழந்தைகள் நமக்கு கிடைத்த பாக்கியமாக நாம் கருத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கும் போது, பெண் குழந்தைகளை நாம் வெறுப்பது என்பது, நபியை விட்டு நாம் விலகி செல்கிறோம் என்பதையே காட்டும்.


இவ்வாறு தாங்கள் பெற்ற பெண் குழந்தைகளை கண்டு வெறுப்பு அடைகிற பெற்றோர்களை அல்லாஹ் கடுமையாக சாடுகிறான்.


எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை. (6:140)


என்று கண்டிக்கிற அல்லாஹ், இன்னொரு வசனத்தில்

அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான். (16:58)

எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? (16:59)

என்று கூறுகிறான்.


பெண் குழந்தைகளை வெறுப்பதோ அதனால் கவலைப்படுவதோ, அதை இழிவானதாக கருதுவதோ, அதை கொலை செய்து விடவதோ அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவமான காரியமாக இருக்கிறது.

இதை கண்டிப்புடன் சொன்ன அல்லாஹ், பெண் குழந்தை பிறந்த செய்தியை பற்றி சொல்கிற போது அது ஒரு நற்சயதி என்கிறான் !!

பெண் குழந்தைகளை வெறுப்பவர்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் நமக்கு பாரமாக இருக்கும் என்றால், அல்லாஹ் அதை நற்செய்தி என்று சொல்வானா?? அப்படியானால் நிச்சயம் அதில் ஏதோ ஒரு நற்செய்தி இருக்கத்தான் செய்யும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள்

முஸ்லிம் 5127

இந்த பெண் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்று கொள்கிறார்களோ, அவர்கள் நரகம் சென்று விடாமல் தடுக்கும் தடையாக இந்த குழந்தை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 5995

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். (17:31)

No comments:

Post a Comment