Monday, 15 October 2012

இஸ்லாமிய ஒற்றுமை எங்கே?


Post image for இஸ்லாமிய ஒற்றுமை எங்கே?
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப்புகழும் உரித்தானது!
தாம் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் எதைக் கூறினாலும் அதை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டாடும் இயக்கப்பற்றின் காரணமாக, ஏகத்துவத்தைப் போதிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே சகோதர முஸ்லிம்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் கீழ்தரமான வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருடிருக்கும் இயக்கங்களைச் சார்ந்தவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தம்மை சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொண்டு தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்கின்றோம் என்ற போர்வையில் தமக்குப் பிடிக்காத ஒரு ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைக் குறிவைத்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடும் இயக்கவெறியை எதிர்கின்ற இயக்க எதிர்ப்பு வெறியை உடையவர்களின் செயல்பாடுகள் மறுபுறம்!

யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன? நாம் உண்டு! நமது வேலையுண்டு என்று சுயநலத்தின் மொத்த உருவாய் செயல்படுபவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தர்ஹா, சமாதி வழிபாடுகள், தட்டு, தாயத்து என்று இணை வைப்பின் உச்சத்தில் உழன்றுக் கொண்டிருந்த தமிழக முஸ்லிம்களிடையே ஏகத்துவம் வீறுகொண்டு எழுவதைப் பொறுக்காத ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்குண்டு, தவ்ஹீதுவாதிகள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொண்டு தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்குப்பவர்களைப் பார்த்து இவர்கள் ஒன்றுபடவே மாட்டார்களா என்று மனம் வெதும்புபவர்கள் மறுபுறம்,
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் குர்ஆன் ஹதீஸைப் போதிப்பவர்களுக்கிடையில் நடைபெறும் இந்தக் குழுச்சண்டைகளினால் குதூகலமடைந்த குராஃபிகளும், ஷிர்க் மற்றும் பித்அத் புரிபவர்களும் வீறுகொண்டெழுந்திருக்கின்றனர்.
எவ்வித இயக்கங்கங்களையும் சாராமல் அல்லாஹ் நமக்கு இட்டபெயராகிய முஸ்லிம்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அழகிய முறையில் அழைப்புப் பணியினைச் செய்பவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த குழுச்சண்டைகளே என்றால் அது மிகையாகாது! ஷிர்க், பித்அத்திலே உழன்றுக் கொண்டிருப்பவர்களிடையே அதன் தீமைகளை உணர்த்த முற்படும் போது அவர்கள் முன்னிருத்துவதோ நமது குழுச்சண்டைகளைத்தான்!
எனதருமை முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!
தமக்கும் தம் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும்! அறிவாற்றலில், விவாதத் திறமையில் தம்மை விஞ்சியவர்கள் யாருமில்லை என்று நினைப்பது நம் அகந்தையின் காரணமாக அன்றோ?
‘கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்’ (12:76) என்ற திருவசனத்தை நாம் மறந்துவிட்டோமா? அல்லது
‘அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்’ (அல்-குர்ஆன் 5:100) என்ற உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும்தானா?
தாம் சார்ந்த இயக்கம் தான் தலைசிறந்தது என்ற நினைப்பும், தம் இயக்கத்தை விட்டு வெளியேறியவர்கள் அல்லது தம் இயக்கத்தைச் சாராதவர்கள் எல்லாம் தடம் புரண்டவர்கள் என்ற இறுமாப்பும் அகங்காரத்தின் வெளிப்பாடுகள் அல்லவா? இந்த இயக்கங்களைப் பற்றிக்கூட கேள்விப்பட்டிராத கோடானு கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனரே! அவர்களும் தடம்புரண்டவர்கள் தானா? சிந்தியுங்கள் சகோதரர்களே!
அன்பு சகோதரர்களே! தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றோம் என்ற போர்வையில் தனிநபர் விமர்சனங்கள் அல்லவா நாம் செய்து கொண்டிருக்கிறோம்! சமுதாயத்தில் தீமைகள் நடைபெறும் போது அவற்றைச் சுட்டிக் காட்டி திருத்துவது அவசியமாகும். ஆனால் அந்தப் போர்வையிலே தனிப்பட்ட ஒருவரின் அந்தரங்க தவறுகளையும், அவர் தனிப்பட்ட முறையில் செய்த தவறுகளையும் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி அவருடைய மானத்தோடு விளையாடி அவருடைய மாமிசத்தையல்லவா சாப்பிடுகின்றோம்?
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
புறம் என்றால் என்ன? என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை குர்ஆன் ஹதீஸ் போதிக்கின்ற நமக்கு கிடையாதா?
அன்பு சகோதரர்களே!
இந்தச் சமுதாயம் கருத்துவேறுபாடுகள் நிறைந்த சமுதாயமாகும். முஸ்லிம்களுக்கிடையிலான இந்த கருத்து வேறுபாடுகள் கியாமத் நாள்வரை இருக்கக்கூடியது! அனைவரும் ஒருமித்தக் கருத்தையுடைய சமுதாயமாக மாறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதன்று! எனவே எனது கருத்துக்கு ஒருவர் மாறுபட்டிருக்கின்றார் என்பதற்காக அவர் ஏக இறைவனை மட்டுமே வழிபடும் முஸ்லிமாக இருந்தும் அவரை கேவலமாக விமர்சிப்பது என்பது ஒரு உண்மையான முஃமினுக்கு உரிய பண்பாக இருக்கமுடியாது! ‘ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுடைய கண்ணியத்தைக் களங்கப்படுத்துவது ஹராமாகும்’ என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் எக்கணமும் மறந்துவிடக்கூடாது.
எனவே நாம் நம்முடைய பிறசகோதரர்களை கீழ்தரமாக எண்ணுவதையோ அல்லது அவர்கள் மனம் நோகும்படி கூறுவதையோ தவிர்க்கவேண்டும். அதை மீறி செயல்பட்டால், நாம் மறுமை நாளின் மீது உறுதியான நம்பிக்கையுடையவர்களாக இருந்தால், நம்மால் பாதிப்புக்குள்ளான சகோதரர்கள் நம்மை மன்னிக்காதவரை நாம் ஒரு அடி கூட எடுத்துவைக்க இயலாது என்பதை உறுதியுடன் நம்பவேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் நம்மீது சுமத்தப்பட்டடுள்ள பொறுப்புகளை நிறைவேற்றக் கடமைபட்டவர்களாக இருக்கின்றோம். அதில் ஒன்று தான் ஒவ்வொருவரும் தம்மையும், தம் குடும்பத்தார்களையும் மற்றும் தம்மைச் சார்ந்தவர்களையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வது! அல்லாஹ் கூறுகின்றான்:
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 66:6)
அல்லாஹ்வைத் தவிர வேறு ‘இலாஹ்’ இல்லை என்று தமது வாயினால் கூறிக்கொண்டே அல்லாஹ்வின் பண்புகளையும், சிஃபத்துக்களையும் அவனுடைய சிருஷ்டிக்களான அவுலியாக்களுக்கும், நபிமார்களுக்கும், இறை நேசர்களுக்கும் வழங்கி அவர்களை அழைத்து, உதவிகோரி அவர்ககளிடம் பிரார்த்திப்பதன் மூலம் அவர்களை வணங்கி வழிபட்டு அவர்களையும் ‘வேறு இலாஹ்களாக’ ஏற்படுத்திக்கொண்டு, ஷிர்க் என்னும் மாபெரும் பாவமாகிய இணை வைப்பைச் செய்து நிரந்தர நரகத்தின் படுகுழியை நோக்கி வேகமாகச் சென்றுக் கொண்டிருக்கும் நமது சகோதர சகோதரிகளை மீட்டெடுப்பதைவிட வேறு முக்கிய செயல்கள் நமக்கு இருக்கின்றனவா? இதற்கல்லவா நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்?
ஆம்! தாம் சார்ந்த இயக்கப்பற்றின் காரணமாக தாம் செய்வது தவறு என்பதை உணராமல் செயல்படுபவர்களைத் திருத்துவது நமது கடமைதான்! இல்லையென்று கூறவில்லை! அவர்களைத் திருத்துகின்ற நம்முடைய செயல்பாடுகள் எரிகின்ற தீயில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போல அவர்களுடைய இயக்கவெறியை அதிகப்படுத்துவதாக அமையக்கூடாது! மாறாக, அவர்களின் சிந்தனையை தட்டியெழுப்பி இவ்வித இயக்கங்களினால் சமுதாயத்திற்கு சீர்கேடுகளே அதிகம் என்பதை அவர்களுக்கு எடுத்துக்கூறி உண்மையை உணர்த்துதாக அமையவேண்டும்! அதே நேரத்தில் இயக்கத்தை எதிர்ப்பதாகக் கூறுகின்ற நம்முடைய செயல்பாடுகள் எக்காரணத்தைக் கொண்டும் இணைவைப்பாளர்களுக்கு ஆதரவாகப் போய்விடக்கூடாது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால் உண்மை என்னவெனில், இயக்கங்களைச் சார்ந்தவர்களாயினும் சரி, அல்லது இயக்க எதிர்ப்பாளர்களாயினும் சரி! நமக்கு நாமே குறைகூறி, புறம் பேசித் திரிகின்றோமே தவிர இறைவனால் என்றென்றும் மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகிய ஷிர்க்கை நமது சமூகத்திலிருந்து நீக்குவதற்கு பாடுபடுவதில் வெகு சொற்பமாகவே கவனம் செலுத்துகின்றோம்.
ஏக இறைவனை மட்டுமே வணக்கத்திற்கு உரியவனாக ஏற்று, ஷிர்க் மற்றும் பித்அத்துகளை தவிர்ந்து வாழும் எனதருமை ‘முஸ்லிம்’ சகோதர, சகோதரிகளே! நீங்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களாகவோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை எதிர்ப்பவராகவோ இருந்தாலும் சரியே! நீங்கள் உண்மையில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உறுதியாக நம்புபவராக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்! நமது ஒவ்வொரு செயல்களுக்கும் அல்லாஹ்விடம் பதில்கூறியே ஆகவேண்டும் என்பதனையும் மறந்துவிடாதீர்கள்! நாம் ஒவ்வொரு முறையும் பிறருக்கு போதிக்கின்ற இறைவனின் எச்சரிக்கையை நமக்கு நாமே கூறிக்கொண்டு நம்மை சீர்திருத்திக்கொள்வோம்!
“முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்! இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:8)
சகோதரர்களே!
ஒருவர் பூமி நிறைய பாவங்கள் செய்திருப்பினும் இறைவனுக்கு இணைவைக்காத நிலையில் அல்லாஹ்வைச் சந்தித்தால் அல்லாஹ் அவன் பாவங்களை மன்னிப்பதாக இருக்கின்றான்’ என்ற நபிமொழியை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே நம்முடைய செயல்களிலேயே தலையாய செயலாக, ‘பூமி நிறைய பாவங்களை விட மிகப்பெரிய பாவமாகிய ஷிர்க்’ என்பதை விட்டும் நம் சகோதர, சகோதரிகளை மீட்டெடுப்பதையே அமைத்துக்கொள்ள வேண்டும்! அதற்கே நாம் அதிக முன்னுரிமை கொடுக்கவேண்டும்.
யா அல்லாஹ் சத்தியம் எங்கிருந்து வந்தாலும், அதை யார் கூறினாலும் அந்த சத்தியத்தை ஏற்று நாங்கள் தவறு செய்திருப்பின் எங்களைத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!
உள்ளங்களைப் புரட்டுபவனே! உன்னிடம் நாங்கள் மன்றாடிக் கேட்கின்றோம்! ஷைத்தானின் தூண்டுதல்களினால் துண்டு துண்டாகச் சிதறுண்டு தனித்தனிக் குழுக்களாக, இயக்கங்களாக செயல்படுபவர்களின் உள்ளங்களை ஒன்றினைத்து நாங்கள்
அனைவரும் ‘முஸ்லிம்கள்’ என்ற அடிப்படையில் ஒன்று சேர்வதற்கு உதவி செய்திடுவாயாக!
யா அல்லாஹ்! ஷைத்தானின் தீய சூழ்ச்சிக்கு உட்பட்டு முஸ்லிம்களுக்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும் குழுச்சண்டைகளிலே எங்களின் சக்திகளை, நேரங்களை வீணடிக்காமல் அவைகளை நிரந்தர நரகத்திற்கு வழிகோலுகின்ற ஷிர்க் மற்றும் வழிகேட்டிற்கு இட்டுச்சென்று அதன் மூலம் நரகத்திற்கு வழிவகுக்கும் பித்அத் போன்ற செயல்களைச் செய்பவர்களைச் சீர்திருத்துவதில் திருப்புவதற்கு உதவி செய்வாயாக!

No comments:

Post a Comment