குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை
மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும்
வீட்டில் உள்ளபோது உபயோகிக்க வேண்டாம்
வெளியில் செல்லும் போதும் , பயணங்களின் போதும் உபயோகிக்கலாம்
தொடர்ந்து மாற்றாமல் இருந்தால் டயாபர் ரேஷ் எனப்படும் allergy ஏற்படும்
ஆண் குழந்தைகளுக்கு இறுக்கமாக போடகூடாது ,
இதனால் விரைப்பையின் வெப்பநிலை உயர்ந்து பின் நாட்களில் விந்து அணு
குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது .
துணி diaper சிறந்தது என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது . எனவே வீட்டிலேயே சுத்தமான புது துணியை பயன்படுத்தலாம் .
துணியை துவைத்தபின் டெட்டோல் போன்ற கிருமி நாசினிகளை உபயோகித்தால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படக்கூடும் .
‘தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்
தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர்.அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என நம்புகின்றனர்.
ஆனால் இவற்றைவிட குழந்தைகளிடம் தாய்
தொடர்ந்து பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தையின் மூளை வளர்ச்சி அடைந்து
அறிவுத்திறனும் வளரும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழ கத்தை
சேர்ந்த விஞ்ஞானிகள் இதுபற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் பிறந்த 3
மாதமே ஆன 50 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தினார்கள்.
அந்த குழந்தைகளிடம் அவர்களின் தாய்மார்களை
அடிக்கடி பேச்சு கொடுக்கும்படி தெரிவித்தனர். மேலும், மீன், மாடு
போன்றவற்றின் படங்களை காட்டி அவற்றின், பெயர்களை கற்றுக் கொடுக்கும்படியும்
வலியுறுத்தப்பட்டது.
அவர்கள் கொடுத்த பயிற்சியின்படி 3 மாத
குழந்தைகள் படங்களை பார்த்து அவற்றின் பெயர்களை உச்சரிக்க தொடங்கினர்.
மேலும் பல படங்களின் மூலம் அவற்றின் பெயர்களை தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம்
தாய்மார்கள் பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும்
என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குழந்தை சாப்பிட அடம் பிடித்தால்…
தேர்வு முடிவுகள் வெளியாகும் காலம் இது. “என் குழந்தையும் முதல் மதிப்பெண் வாங்கிடுமா’ என ஒவ்வொரு பெற்றோரும் ஏக்கப் பெருமூச்சுடன் தத்தம் குழந்தையை தொடர்ந்து தயார்படுத்தும் உத்வேகம் இயல்பானது.
சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட
முடியும்! அறிவுத் திறன் கொண்ட குழந்தைக்கு ஆரோக்கியமான உடல் நலம் அவசியம்.
ஆனால், ஆரோக்கியத்தை அருகில் உள்ள கடையிலோ அல்லது பெரிய “ஷாப்பிங்
மால்’களில் வாங்க முடியாது. கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும்.
ஆரோக்கியத்தின் அடையாளம்: “பால்குடி’
மறக்கும் நிலையிலேயே “ப்ரீ கே.ஜி.’, “எல்.கே.ஜி.’ என படிக்க அனுப்பும்
காலச் சூழலில் உள்ள நாம், குழந்தைகளை சத்தான உணவுகளைச் சாப்பிட வைப்பதுதான்
முதல் சவால். நல்ல பசியுள்ள, சுறுசுறுப்பான சேட்டை செய்யும் குழந்தை
ஆரோக்கியத்தின் அடையாளம்.
“சேட்டையெல்லாம் இருக்கிறது; குழந்தை
சாப்பிடத்தான் மறுக்கிறது’ என்று சொன்னால், நோய் எதிர்ப்பாற்றல் நாளடைவில்
குறையத் தொடங்கி விடும். பசியை எப்படி உண்டு பண்ணுவது – அந்த மந்திரம்
தெரியுமா எனப் பல தாய்மார்கள் பதறிக் கேட்பது உண்டு. சித்த மருத்துவத்தில்
“பசித் தீ தூண்டிகள்’ என்று நம் முன்னோர் பல மூலிகைகளை அடையாளம்
காண்பித்துள்ளனர்.
உரை மருந்து – அஸ்திவாரம்: குழந்தை
பிறந்து 3 மாதம் ஆன உடனே, அதற்கு பசியைத் தூண்டுவதற்கான முயற்சி தொடங்கி
விடுகிறது. “கடுக்காய், மாசிக்காய், அதிமதுரம், வசம்பு, அக்கரகாரம்’ என
மூலிகைகள் அடங்கிய உரை மருந்தை 3 மாத குழந்தையாயிருக்கும் போதே கொடுக்க
ஆரம்பித்தால் “ரெடிமேட் போஷாக்கு’ உணவுகள் பக்கம் போக வேண்டியிருக்காது.
குழந்தை வளர வளர நவ தானியங்களான திணை,
ராகி, கம்பு, சோளம், பயறு வகைகள் அடங்கிய சத்துமாவு கஞ்சி, பனைவெல்லம்
சேர்த்து தினம் ஒரு வேளை கொடுக்க வேண்டும்.
2 – 3 வயதில் ஓடி விளையாட ஆரம்பித்ததும்
“சாப்பிட மாட்டேன்’ என குழந்தை அடம் பிடிப்பதும், காற்றடித்தால்
பறந்துவிடும் அளவுக்கு தகடாக இருப்பதும் பல பெற்றோருக்குப் பெருத்த கவலை.
பஞ்சதீபாக்னி (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் ஆகிய ஐந்தும்
சேர்ந்த தூள்.), தேற்றான் முதலிய சித்த மருந்துகளை மருத்துவரின்
ஆலோசனைப்படி கொடுத்து வந்தால், பசி அதிகரித்து உடல் எடை கண்டிப்பாகக்
கூடும்.
மருத்துவர் ஆலோசனை எதற்கெனில், உடல் எடை
குறைவு எதனால் என்பதைத் தெளிவாகக் கணிப்பது மிக அவசியம், சாதாரண வயிற்றுப்
புழுக்கள், ரத்த சோகை, மாந்தம், கணை (“பிரைமரி காம்ப்ளக்ஸ்’) எனப் பல
காரணங்கள் “”ஒல்லிக்குச்சி உடலுக்கு” உண்டு.
இது தவிர அக்கறையின்மை எனும் பழக்கவழக்க
நோயும் காரணமாக இருக்கலாம். “வருமுன் காப்போம்’ என்ற மூதுரைப்படி
பின்னாளில் நல்ல உடல் நலத்துடன் சாதிக்க வேண்டுமெனில் இந் நாளிலேயே உடல்
வலுவை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
கண் கூர்மையைப் பெருக்கும் பொன்னாங்கண்ணி,
புத்தி கூர்மையைப் பெருக்கும் பிரமி, வல்லாரை, நோய் எதிர்ப்பாற்றலை
வளர்க்கும் நெல்லிக்காய், சீந்தில் என சித்த மருத்துவம் சொல்லும் எளிய
மூலிகைகளை முறையாக ஆலோசித்து பெற்றுச் சாப்பிட வைத்தால் நாளைய தலைமுறை
நிச்சயம் வெல்லும் என்பதில் சந்தேகமில்லை.
குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில…
குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?
*கணவன்-மனைவி சண்டை சச்சரவு
குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக்
கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி
தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக
இருக்கிறாரே’ என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக்
கொண்ட குழந்தை, அவர் வரும் போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’
என்று சொல்ல நேரிடலாம்.
*தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும்
குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை
கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
*சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.
*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள்
கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே
சொல்லிடாதே’ என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை
பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே “அப்பாக்கிட்ட
சொல்லிடுவேன்’ என்று மிரட்டும்.
*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி
கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க
டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது.
அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு
குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.
* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு
கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது
கூடவே கூடாது. ” கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு
சாக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவதை தவிருங்கள்.
இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து
விடுவர்.
*குழந்தைகள் முன்னிலையிலும் , எப்போதும் சினிமா பார்க்க கூடாது . நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று
பார்த்து வாங்கவும்.
*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக்
குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில்
தாழ்வு மனப்பான்மை வளரும்.
*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக்
கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக
படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’
என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை
கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்’ என்றெல்லாம்
பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.
*குழந்தை முன்னிலையிலும் , எப்போதும் உங்கள் கணவர்,
வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது,
புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட்டிகளாக இருப்பார்கள்
தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ
இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து
ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர் எரிகா கெய்லர் கூறியதாவது:
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் 9 மாத
குழந்தைகளாக இருந்தபோதிலிருந்து எவ்வாறு தூங்குகின்றன என்பது குறித்த
விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
அதே குழந்தைகளுக்கு 4 வயதான பின்பும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
தினசரி இரவு சீக்கிரமே தூங்கச் செல்வதுடன்
11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள், சொல்வதை விரைவாகப் புரிந்து கொள்ளுதல்,
மொழிகளை எளிதாக கற்றுக் கொள்ளுதல், கணிதத்தில் புலியாக விளங்குதல்
போன்றவற்றில் படுசுட்டிகளாக விளங்குகின்றன.
குறித்த நேரத்தில் தூங்கச் செல்லாததுடன்,
11 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அவ்வளவு சுட்டிகளாக
விளங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே, தினசரி இரவு சீக்கிரமே குழந்தைகளைத்
தூங்கச் செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அளவு தூக்கத்தை பெற்றோர்கள்
உறுதி செய்ய வேண்டும்.
தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது, கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார்.
குழந்தைகளை சீக்கிரமே தூங்கச் செய்ய வேண்டும் என்பதையே இதற்கு முந்தைய ஆய்வுகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment