Tuesday, 13 November 2012

சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சி தகவல்கள்!

காலை உணவை தவிர்க்காதீர்கள்!
வேலைப்பளு அது இதுவென்று காலையில் சாப்பிடாமல் இருந்து விடுகிற வழக்கம் பல ஆண்களிடம் இருக்கிறது. ஆனால் காலைச் சாப்பாட்டை இப்படி தவற விடுவது நல்லதல்ல என்பது அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பொது மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் 30 ஆயிரம் ஆண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
காலையில் சாப்பிடுபவர்களை விட சாப்பிடாதவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் 21 சதவீதம் அதிகம் என்று இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட 29 ஆயிரத்து 206 ஆண்களில் ஒருவருக்குகூட ஆரம்பத்தில் நீரிழிவு தாக்கவில்லை. நீரிழிவு வரக்கூடாது என நினைக்கிற ஆண்கள் காலை சாப்பாட்டை தவற விடாமல் இருப்பது நல்லது.

கோவைக்காய் – சர்க்கரைக்கு ஏற்ற உணவு!
சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொஞ்சம் நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியது தான் கோவைக்காய்.
கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொறியல், வற்றல், கூட்டு,சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. மற்றும் கோவைக் காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப் பொடி, சீரகப் பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவு தான் கோவைக்காய் பச்சடி தயார்.
இதனை வாரம் 2 நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப் புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். ஆனால் நிறைய பேர் பாகற்காயை ஒதுக்குவது போல் கோவைக் காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறார்கள்.
நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளும் விருப்பமுடையதாகத் தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.
வயிற்றுப் புண் இருப்பவர்கள் வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொள்ளலாம். கோவைக்காயை பீன்ஸ் போல பொறியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். முக்கியமாக முற்றின கோவைக்காய் வாங்கக் கூடாது பிஞ்சு காயாகப் பார்த்து வாங்கணும்.
பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.
இரவு நேர தூக்கம் மிக அவசியம்..
இரவு நேரங்களில் பலர் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர். இதனால் உடல் நலம் கெடுகிறது. அவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் என்றும், உடல் பருமனாகும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள பிரிங் கம் பெண்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றவர்களிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
அதாவது அவர்களின் எடை 4.5 கிலோ முதல் 5.5 கிலோ வரை அதிகரித்து இருந்தது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் ஆபத்து ஏற்படும் என தெரிவித்துள்ளனர். எனவே ஒருவர் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment