நவீனம், நாகரீகம் இன்று மனித வாழ்வில் சொல்ல முடியாத அளவுக்கு ஊடுருவிக் காணப்படுகின்றது. இதில் ஜாதி, இன, மத பேதம் கடந்து அதற்கும் அப்பால் சென்று கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக பொருளாதாரத்திற்கும், பொழுது போக்கிற்கும், விளம்பரங்களுக்கும் முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வெற்றிக் கொடி கட்டிப் பறக்கும் (?) ஓர் ஷாத்தானாக சினிமா உலாவருகின்றது.
இன்றைய உலகில் சினிமா துறையில் முஸ்லிம் அல்லாத அந்நியர்களுக்கு ஓர் சிறந்த அம்சமாகத் திகழும் இந்த சினிமா இன்று அதிகமான முஸ்லிம்களையும் நவீனத்தில் வீழ்த்தி சினிமாவிலும் இழுத்து இஸ்லாத்தை இழிவாக்கி அழிக்கும் செயற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இதை அறியாத எமது இஸ்லாமிய உள்ளங்களும் பிரபல்யமடைந்துள்ள சினிமா எனும் ஷாத்தானின் வலையில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். நபி வழியைச் சுமந்து புனித தீனுல் இஸ்லாத்தை மேலோங்கச் செய்த காலத்தையும் சேவையையும் மறந்து விட்டு நபி வழிக்கு நிகரானதாக ஆக்கிவிட்டார்களா என எண்ணத் தோன்றுகின்றது.
அன்றைய ஸஹாபாக்கள் நபிவழிக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அந்தளவுக்கு இன்று சினிமாவுக்கு எமது முஸ்லிம்களால் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகளைப் பார்க்கக் கூடியதாக உள்ளது.
ஸஹாபாச் சமுதாயம் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையை அடியொட்டிப் பின்பற்றி இஸ்லாத்தின் புனிதத்தைக் காத்து அதற்காகவே உயிரைத் தியாகம் செய்த சந்தர்ப்பங்கள் ஏராளம் படித்திருக்கின்றோம். ஆனால் இன்று அந்தச் செயற்பாடுகளை அப்படியே தலைகீழாகப் புரட்டி அடிக்கு அடியாக, சாணுக்கு சாணாக சினிமாவையும் அதில் சுற்றித் திரியும் கதாநாயக-நாயகிகளையும் பின்பற்றும் எமது இஸ்லாமிய சமுதாயத்தை நினைக்கவே வெட்கமாய் இருக்கிறது.
உடலும் உயிரும் அல்லாஹ்வுக்கு என்றிருந்த காலம் மாறிப் போய் ‘உடல் மண்ணிற்கும் உயிர் ……. (தனக்குப் பிடித்த நடிகர், நடிகைக்கும்)’ என்று மாறிவிட்டது. நபிகளாரின் சுன்னாக்களை வைத்து வாழவேண்டிய எமது இளைய சமுதாயம் சினிமா நாயக, நாயகிகளை அடியொட்டி ஆடை அணிகலன் என எல்லா துறையிலும் அவர்களைப் போலவே வாழ எத்தணிக்கின்றனர்.
ஒரு இஸ்லாமியனுக்கு அல்லாஹ்வின் தூதருடைய வாழ்க்கையும், அல்குர்ஆனுமே வழிகாட்டியாகவும், போதனையாகவும் இருக்கின்றது. அதன்படி வாழ்வதன் மூலமே நாம் உண்மையான முஸ்லிமாகவும் அல்லாஹ்வின் அடியானாகவும் இம்மை, மறுமை வெற்றியாளர்களாகவும் மாறமுடியும். ஆனால், எங்களில் பலர் இன்று இவற்றை மறந்தவர்களாக அனைத்து விசயங்களிலும் யார் யாரையோ பின்பற்றிக் கொண்டிருக் கின்றனர்.
அந்நிய ஆண்களுக்கு முன்னால் உடலை மறைத்துக் கொள்ளுமாறு பெண்களுக்கு இஸ்லாம் பணிக்கின்றது. ஆனால் இவர்களில் பலர் உடலும் உடல் அங்கங்களும் அச்சொட்டாகத் தெரியும் அளவுக்கு உடைகளை நவீனம் என்ற பெயரில் மாற்றி அணிந்து செல்கின்றார்கள். இவையனைத்தும் சினிமாவின் தாக்கம் என்பதை யாராலும் மறுக்க முடியுமா?
புதிய திரைப்படங்கள் வெளிவர வெளிவர அதில் புதிய புதிய ஷாத்தானிய விசயங்களும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கின்ற இஸ்லாமிய உள்ளங்களும் அவற்றை அடியொட்டி நடப்பதற்கு ஷாத்தான் உந்துதலாக இருக்கின்றான். இதை அறிந்தும் மறந்தவர்களாக நாம் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகின்றோம்.
சாதாரணமாக தலை முடிவெட்டும் விசயத்தில் கூட நாம் அவர்களையே பின் பற்றுகின்றோம். வீதிகளில் பார்த்தால் தெரியும், சிலரது தலை கீரிப்பிள்ளையின் முடிபோலும், சீவிய இளநீரைப் போன்றும் என பலவிதமான முடிவெட்டுதல்களை அவதானிக்கலாம். அதை இன்னும் மெருகூட்டுவதற்காக பல வர்ணங்களில் சாயங்களையும் பூசிக் கொண்டு திரிகின்றார்கள். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் எமது இளைஞர்களும் அவ்வாறு செய்வதுதான்.
நபி(ஸல்) அவர்கள் யூத, கிறிஸ்தவர்களுக்கு முடி வெட்டும் விசயத்தில் மாறு செய்யுங்கள், பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்காதீர்கள். ஒரு பக்கம் சிரைத்தும் மறு பக்கத்தை சிரைக்காமலும் விடாதீர்கள் என்றெல்லாம் வலியுறுத்தியிருப்பதை மறந்து விட்டார்கள் போலும்.
குழந்தைகளை வளர்க்கின்ற போது கூட அவர்களுக்கு பேச்சு, நடை போன்றவற்றை பழக்குகின்ற போது சினிமா பாடல்களையும், ஆடல் திறமையையும், சில போது நடிகர் நடிகைகள் போன்று நடப்பதையும், ஆடுவதையும் பாராட்டி மகிழ்கின்றனர். இது அவர்களின் பிற்பட்ட வாழ்வில் வழி தவறிச் செல்வதற்கு ஒரு படிக்கல்லாக அமைகின்றது என்பதை ஏன்தான் மறந்துள்ளார்களோ?
அது மட்டுமன்றி இஸ்லாமிய திருமண முறையென்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இஸ்லாம் அழகாக எடுத்துக் காட்டியுள்ளது. நபி(ஸல்) அவர்கள் மிக அழகாக வாழ்ந்தும் காட்டியுள்ளார்கள். ஆனால் இன்று எமது சமூகம் பெண்ணை சினிமாவில் போன்று அலங்கரித்து அவர்களுக்குப் பிடித்த நடிகையின் உடைகளை (குறிப்பாக சாரி) உடுத்தி மணப்பந்தலில் காட்சி பொம்மையைப் போன்று அந்நிய ஆடவர் முன்னிலையில் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. சில வீடுகளில் இசைக் கச்சேரிகளைக் கூட ஏற்பாடு செய்து நடத்தும் போக்கு காணப்படுகின்றது. கேட்டால் கல்யாண வீடு கல்யாண வீட்டைப் போன்று இருக்க வேண்டும் என கூறுவார்கள். கணவன் மட்டும் ரசிக்க வேண்டிய பெண்ணை பார்க்கும் ஆடவர் அனைவரும் ரசிக்கச் செய்யும் கேவலமான சமூக நடைமுறை என்றுதான் மாறப்போகின்றது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது!
ஒன்றல்ல இரண்டல்ல இன்னும் இதே போன்ற ஓராயிரம் உதாரணங்கள்! நபியவர்களின் சொல், செயல்களுக்கும் அவைகளுக்கு உயிரூட்டிய ஸஹாபாக்களது வாழ்கையையும் அவமதித்து புறந்தள்ளி வாழ்க்கையில் சினிமாவை ரோல் மோடலாக செயற்படுத்தும் சமூகமாக எமது இஸ்லாமிய சமூகம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது… மாறிக் கொண்டிருக்கின்றது..
நபி(ஸல்) அவர்களின் பண்பு எவ்வாறு இருந்தது என ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ஆயிஷா(ரழி) ‘நபிகளாரின் பண்பு குர்ஆனாக இருந்தது’ எனக் கூறினார்கள். இதே கேள்வியை எம்மவர்களிடம் கேட்டால் தங்களது பழக்க வழக்கம் சினிமாவாக இருக்கிறது என்று சொல்லலாமே தவிர வேறு இல்லை.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் சிறந்தவர் குர்ஆனைத் தானும் கற்று அதைப் பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே!’ இதனை அப்படியே அந்த ஸஹாபாச் சமுதாயம் பின்பற்றியது. ஆனால் நாம் சினிமாப் படங்களை தியேட்டர்களில் நேரடியாகச் சென்று பார்த்துவிட்டு கடை கடையாக ஏறி சினிமாCD,DVD களை வாங்கிச் சென்று பார்ப்பது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் எமது உறவினர்களுக்கும், சகோதர-சகோதரி களுக்கும் நண்பர்களுக்கும் அது சம்பந்தமாக எத்தி வைத்தும் CD,DVD களைக் கொடுத்தும் தூண்டுகின்றோம். இதை யாரும் மறுத்துவிட முடியாது.
மேலும் நபி(ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதுவதன் சிறப்பைப் பற்றி பல்வேறு கோணங்களில் எடுத்துக்காட்டியுள்ளார்கள். குர்ஆனை ஓதும் போது அதிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மையுண்டு அதில் அலிப் லாம் மீம் என்றால் அது ஒரு தனி எழுத்தன்று மாறாக ‘அலிப்’ ஒரு எழுத்து ‘லாம்’ ஒரு எழுத்து ‘மீம்’ ஒரு எழுத்து எனக் கூறியிருக்க, நாம் என்ன செய்கின்றோம். சிந்தித்துப் பாருங்கள்! குர்ஆன் ஓதுவதை அலட்சியம் செய்துவிட்டு சினிமா பாடல்களை எந்நேரமும் பாடிக் கொண்டிருக்கின்றோம். எம்மை அறியாமலே எந்நேரமும் எம் வாய்களில் சினிமாப் பாடல்கள்தான். அந்த அளவுக்கு நாம் அடிமைப் பட்டுள்ளோம். வாழ்வியல் நடைமுறையில் தும்மினால், மலசலம் கழிக்கச் சென்றால், பயணம் புறப்பட்டால், வீட்டினுள் நுழையும் போது….. என ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் அவ்றாதுகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது. ஆனால் எமது நாவுகள் மொழிவது எதை என்பதை நாமே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக, இஸ்லாத்தைத் தாங்கும் தூணாக இருக்கும் ஒரு விசயம் தொழுகை. எமது தேவைகளை நாமே அல்லாஹ்விடம் கேட்டு நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் ஒரு ஊடகமாகத் திகழ்கின்றது. இந்த உண்மையை வாழ்வில் கண்ட ஸஹாபாக்களின் வரலாறுகள் எமக்கு சான்று பகர்ந்து கொண்டிருக்க, நாம் என்ன செய்கின்றோம். ஒரு தொழுகை முடிந்து மறு தொழுகையை எதிர்பார்க்கும் காலமும் உணர்வும் மறைந்து இன்று ஒரு சினிமா முடிந்து மறு சினிமா எப்போது போகும் என்ற எதிர்பார்ப்பு தோன்றிய வண்ணமே இருக்கின்றோம்.
தாடி வைப்பதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் கடுமையாக வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். தாடியை மழிக்காதீர்கள், அதை வளரவிடுங்கள், யஹுதி நஸாராக்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கட்டளையிட்டிருப்பதைக் காணலாம். இப்படிப்பட்ட பல சிறப்பியல்புகளை உள்ளடக்கிய இவ்வுன்னத சுன்னாவை சினிமாவோடு ஒப்பிட்டு அதனைக் கேவலமான முறையில் அணுகி கேலிக்கையாக்கும் ஓர் சினிமா சமூகம் எம் மத்தியில் உலா வருவதனைக் காணலாம். அழகிய முறையில் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையைப் பின்பற்றி வாழவேண்டும் என தாடி வளர்த்த ஒருவரைக் கண்டால் எமது சமூகத்திலுள்ள பலர் ‘காதல் தோல்வியா? பொண்டாட்டி செத்துட்டாளா?’ என்றெல்லாம் கேலி செய்வதை அவதானிக்க முடிகின்றது.
அவர்களின் இந்த கேள்வி எதனால் வந்தது என்று சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக அது சினிமாவின் தாக்கத்தினால் வந்த வார்த்தைகள் என்றால் மிகையாகாது. இன்றைய சினிமாக்களை எடுத்துக் கொண்டால் அதில் முற்று முழுதாக தாடி வைத்து நடிக்கும் கதாநாயகர்கள் காதலில் தோல்வி அடைந்தவர்களாகவோ அல்லது மனைவியை இழந்தவனாகவோதான் சித்தரிக்கப் படுகின்றான். இதைப் பார்க்கும் சமூகத்தவர்கள் அதையே தாடிக்கு அடித்தளமாக உருவாக்கியுள்ளனர்.
அது மட்டுமல்ல, இன்றைய முஸ்லிம் சகோதர சகோதரிகள் எத்தனை பேர் இந்த சினிமாத் துறையில் விலைபோயுள்ளனர் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். பொருளாதாரத்தையும் ஆடம்பரத்தையும் மோகமாக் கொண்டு புனிதமான இஸ்லாத்தையும் அதன் போதனைகளையும் அல்லாஹ்வின் மீது அச்சமின்றி மிஞ்சிச் சென்று அண்ணல் நபி(ஸல்) அவர்களின் சுன்னாக்களை தகர்த்தெறிந்து சேறு பூசும் துஷ்டர்கள் அதிகமாகின்றார்களே தவிர குறைவதாகத் தெரியவில்லை.
அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே! சொல்லப் போனால் இன்னும் எத்தனையோ உதாரணங்களையும் காரணங்களையும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எமது வாழ்விற்கு இந்த அடிப்படை உதாரணங்களே போதும் என்ற எண்ணத்தில் இவற்றோடு நிறுத்திக் கொள்வோம்.
எனவே, இந்த விசயங்களில் ஆழமான சிந்தனையோடு நாம் செயற்பட வேண்டும்.
‘தன்னை, தன் தந்தையை, தன் மகனை ஏன் உலகத்தார் அனைவரையும் விட என்னை நேசிக்காதவரை உங்களில் ஒருவர் ஈமான் கொள்ள மாட்டார்’ (புஹாரி)
இந்த ஹதீஸ் எமக்கு உணர்த்துவது என்ன? நீங்கள் அதிகம் யாரை நேசிக்கின்றீர்கள்? நபி(ச) அவர்களையா? அல்லது ஷாத்தானையும் அவனது அடிச்சுவடுகளைப் பின்பற்றும் கூட்டத்தவர் களையா?
இனியும் நீங்கள் வாழப் போவது ஷாத்தானுடைய வாழ்க்கையா? அல்லது அல்லாஹ்வின் வேதமாம் அல்குர்ஆன் காட்டிய வழிகாட்டலை அழகாக வாழ்ந்து காட்டி இம்மை மறுமையின் வெற்றிக்கு வழி வகுக்கும் எம் பெருமானார் நபி முஹம்மத்(ச) அவர்களின் வாழ்க்கையா?
முடிவு உங்கள் கையில்!…
No comments:
Post a Comment