Monday, 25 February 2013

ஜோதிடம் , நல்ல நேரம் & கெட்ட நேரம் பற்றி இஸ்லாம்

நமது வீடுகளில் நடைபெறும் திருமணம் மற்றும் பிற சுப காரியங்களுக்கான தினத்தை முடிவு செய்யும் போது அறிந்தோ அல்லது அறியாமலோ செய்யும் தவறு என்னவெனில் நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து அந்த தேதிகளை முடிவு செய்வதாகும்.
மார்க்கத்தில் போதிய தெளிவு இல்லாமை, சினிமா மற்றும் கேபிள் டி.வி.க்கள் இவற்றின் முலமாக சிந்திக்கும் ஆற்றல் மழுங்கடிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பது, ஜோதிடம், சகுனம் பார்த்தல் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு அவைகளை நம்பி தமது பொருளாதாரரத்தையும், பொன்னான நேரத்தையும் வீணடித்து வருவது மிகவும் வருத்தத்தற்குரிய விஷயமாகும். இன்று இத்தகைய தீய செயல்கள் பிரபலமான பத்திரிக்கைகள், கேபிள் டி.வி.க்கள் போன்ற மீடியாக்கள் மூலம் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் நம்மை நோக்கி வருகின்றன.
மார்க்கத்தில் போதிய தெளிவில்லாத பாமர முஸ்லிம்கள் ஏன் கல்லூரிகளுக்குச் சென்று படித்துப் பட்டம் பெற்ற முஸ்லிம் சகோதர, சகோதரிகள் கூட கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு அவற்றை உண்மை என நம்பி உயிரினும் மேலான தங்கள் ஈமானை இழந்து விடுகின்றனர். இவ்வகையான ஜோதிடங்கள் நம்மிடையே பல்வேறு வகைகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவைகளில் சில: -
  • கை ரேகை, கிளி ஜோதிடம், பிறந்த தேதி, பிறந்த வருடம் இவைகளைக் கொண்டு எதிர்காலத்தைக் கணித்துக் கூறுவது
  • திருமணம் போன்ற சுப காரியங்களைச் செய்வதற்காக நல்ல நாள் மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை ஏற்படுத்தி இறைவன் படைத்துள்ள நாட்களில் பாகுபாடு காண்பது
  • பெயரியல் நியுமராலஜி என்ற பெயரால் பெற்றோர்கள் சூட்டிய நல்ல இஸ்லாமிய பெயர்களைக் கூட நிராகரிப்பவர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்வது
  • அதிருஷ்டக் கல் ஜோதிடம் என்ற பெயரால் சாதாரண கற்களுக்குக் கூட மகத்தான சக்தியுண்டு என்றும், அவைகளை மோதிரம், நகைகள் மூலமாக நாம் அணிந்துக் கொண்டால் இறைவன் நம்மீது விதித்திருக்கும் விதியையும் மீறி அந்தக் கற்கள் நம்மை நோய் நொடியற்று வாழச் செய்து, பற்பல செல்வங்களை ஈட்டித் தரும் என்று நம்புவது
  • முஸ்லிம்களில் சிலர் ஜோதிடத்தின் அரபி வடிவமான பால் கிதாபு போன்றவற்றை நம்புகின்றனர்
  • வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரால் வீடு, மனைகள் வாங்கும் போதும் ஜோதிடம் பார்க்கப்படுகின்றது
மேற்கூறப்பட்ட ஜோதிடத்தின் வகைகளில் எதை நம்பி செயல்பட்டாலும் அவைகள் அனைத்துமே இறைநிராகரிப்பு என்னும் குஃப்ரின் பால் மக்களை இழுத்துச் செல்லக் கூடியதே. ஏனெனில் ஜோதிடக்காரன் கூறவதை உண்மை என்று நம்புபவன் அல்லாஹ் இறக்கிய வேதத்தை நிராகரித்தவனாவான் என்று நபி (ஸல்) அவாகள் எச்சரித்திருக்கிறாகள்.
“யாராவது குறி சொல்பனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்டதை (குஆனை) நிராகரித்தவர் ஆவார்”- அறிவித்தவர் அபூஹுரைரா (ரலி). ஆதார நூல் :அபூதாவுத்
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் :
“அல்லாஹ் தான் நாடியதை நிறைவேற்றியே தீருவான்” (அல் குர்ஆன் 12:21)
“அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் அறிந்தவன்” (அல் குர்ஆன் 29:62)
மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபி மொழிக்கு மாற்றமாக அல்லாஹ் ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு செல்வத்தை நிர்ணயித்திருக்க, ஜோதிடத்தை நம்புபவர்கள், அந்தக் ஜோதிடர்கள் கூறுவது போல் செயல்பட்டால் அல்லது அதிருஷ்டக் கற்களை மோதிரங்களில் அணிந்துக் கொண்டால் அந்தக் கற்கள் நமக்கு அல்லாஹ்வின் நாட்டத்திற்கு மாறாக நமக்கு அதிக செல்வங்களை பெற்றுத் தரும் என்று நம்புவதாகும். (இத்தகைய தீய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாகவும்). அல்லாஹ் இறக்கியருளியதை நிராகரித்தவன் முஸ்லிமாக இருக்க முடியாது. மேலும் நபி (ஸல்) அவர்களின் கூற்றுப்படி இத்தகைய ஜோதிடங்களை நம்புவது அல்லாஹ்வின் வேதத்தை நிராகரிக்கக் கூடிய குஃப்ரின் பால் இட்டுச் செல்வதால் முஸ்லிம்கள் அனைவரும் இவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். நம் அனைவரையும் இத்தீய செயல்களிலிருந்து காத்து நேர்வழி காட்ட வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment