Sunday, 2 December 2012

ஊடகத்துறையின் அவசியமும் முஸ்லிம்களின் நிலையும்!

ஊடகம் என்பது தகவல்கள், செய்திகள் என்பவற்றைச் சேகரித்து வைத்துப் பரவலாக வழங்கும் மிகச் சக்தி வாய்ந்த தொடர்பு சாதனமாகும்.
இவற்றுள் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையம் முதலான அனைத்தும் உள்ளடங்குகின்றன. இன்றைய உலகில் ஊடகமொன்று இல்லாத சமுதாயம் உயிரில்லாத உடம்புக்கு ஒப்பானதாகும். காரணம், ஒரு சமுதாயத்தின் இருப்பையும் உயிர்ப்பையும் நிர்ணயிப்பதில் ஊடகத்தின் பங்கு மகத்தானதாகும். எந்த ஒரு சமுதாயமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் தன்னுடைய தனித்துவ அடையாளங்களைப்  பேணிக்கொள்ளவும் மட்டுமின்றி, தனக்கெதிராகக் கட்டமைக்கப்படும் பொய்களையும் திட்டமிட்ட நச்சுப் பிரசாரங்களையும் எதிர்கொண்டு அவற்றை முறியடிக்கவும் ஊடகமே மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாகப் பயன்பட முடியும். எனவேதான், இன்றைய உலகில் பலம் வாய்ந்த அதிகாரச் சக்திகளுக்கு இடையிலான அல்லது வேறுபட்ட சித்தாந்தங்கள், மதங்களுக்கிடையிலான போர், “ஊடகப் போர்” என்று அடையாளப்படுத்தப்படுகின்றது.
முஸ்லிம்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள், ஐயங்கள் காலங்காலமாக வெளிவந்தவண்ணமே இருந்துள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகனும் தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து இந்நிலைமை உக்கிரமடைந்ததை நாமறிவோம். அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்களின் உண்மையான அடையாளம் திட்டமிட்டு உருக்குலைக்கப்பட்டும், இஸ்லாமும் அதன் இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் அவமானப்படுத்தப்பட்டும் வருவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். இத்தகைய இழி செயலில் மேற்கத்திய ஊடகங்களும் கீழக்கத்திய ஊடகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.
ஸியோனிஸ, கிறிஸ்தவ, ஹிந்துத்துவ சக்திகள் தமது இஸ்லாமிய எதிர்ப்பை, மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருவதற்கு ஊடகத்தையே பெரிதும் பயன்படுத்தி வருகின்றன.
மேற்கத்திய உலகைப் பொறுத்தவரையில் முதலாவது செய்திப் பத்திரிகை 1605ம் ஆண்டிலும், முதலாவது வானொலிச் சேவை 1920ம் ஆண்டிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விக்கிபீடியா பதிவு செய்துள்ளது. ஆனால், முஸ்லிம் உலகின் நிலையென்ன? உலகின் எந்த மூலையில் எந்த ஒரு முஸ்லிம்களுக்கு எத்தகைய கொடூரமான அநியாயங்கள் நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்க நமக்கென்று ஓர் ஊடகம் இருக்கவில்லை. பி.பி.சி. சி.என்.என். ஏ.பி. ராய்ட்டர்ஸ் முதலான பக்கச் சார்பு ஊடகங்களினால் கட்டமைக்கப்படும் உண்மைக்குப் புறம்பான செய்திகளே உலகமெங்கும் பரவலாகச் சென்றடைந்தன. உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கெதிராக சொல்லொணாத கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையிலும் கேட்பார் பார்ப்பாரற்ற சமூகமாக, நம்முடைய சமுதாயம் நாதியற்றுத் தவிக்கும் நிலையே காணப்பட்டது.
இந்நிலையில், (அல்ஜஸீரா) அரபுத் தொலைக்காட்சிச் சேவை 1996ம் ஆண்டிலும் ஆங்கில சேவை 2006ம் ஆண்டிலும், பிரஸ் தொலைக்காட்சி சேவை 2007ம் ஆண்டிலும் ஆரம்பிக்கப்பட்டு இன்று  முஸ்லிம் ஊடகங்களாகத் திகழ்கின்றன.
இத்தகைய ஒரு நிலையில் முஸ்லிம்களுக்கென்று தனியான முழுநேர செய்தி ஊடகமொன்றின் தேவை பரவலாக உணரப்பட்டு வருவதையும் அதற்கான முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது இருந்தபோதிலும் ஒருங்கிணைக்கப்பட்டதும், பரவலாக மக்களைச் சென்றடையக்கூடிய சக்திவாய்ந்ததுமான முஸ்லிம் ஊடகமொன்றை உருவாக்கி வளர்க்கும் நம்முடைய கனவை நனவாக்கும் முதற்கட்ட முயற்சியென்ற வகையில் “நமக்கென்று ஒரு நாளிதழ்” குறித்து சிந்திப்பதும் திட்டமிட்டு செயற்படுவதும் அதனை நோக்கி இடையறாது பாடுபடுவதும் முஸ்லிம்களாகிய நமது இன்றியமையாத பணியாகும்.
ஏனெனில், அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் ஜிஹாதுக்கு அல்லாஹ்விடம் மிக உயர்ந்த நற்கூலிகள் உள்ளன. அந்த அடிப்படையில், உலகளாவிய ரீதியில் இஸ்லாத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சதித்திட்டங்களை முறியடிப்பதற்குரிய மிகப் பிரதான ஆயுதமான ஊடகமொன்றைக் கட்டமைத்து அதனை ஸ்திரமடையச் செய்வதும் ஜிஹாதின் ஒரு பகுதியே என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் நாம் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில்,
“அவர்(நிராகரிப்பாளர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும் உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்). அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் – அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் (அதற்கான நற்கூலி) உங்களுக்குப் பூரணமாகவே வழங்கப்படும். (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.” (8:60)
என்ற அல்குர்ஆன் வசனத்தின் மூலம், இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்கொள்ளத்தக்க எல்லா வகையான போர் சாதனங்களையும் சித்தப்படுத்தி தயாராக வைக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இந்தத் திருமறை வசனம் இன்றைய ஊடகப் போருக்கும் பொருந்தி வரும் என்பதில் ஐயமில்லை.
எந்தவொரு முயற்சியிலும் வெற்றி காண வேண்டுமானால், அது தொடர்பான பிரச்சினைகள், சவால்களை இனங்காண்பதோடு, அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கண்டறிவதும், தக்க அணுகுமுறைகளைக் கையாண்டு செயற்படுத்துவதும் முக்கியமானதாகும்.
நமக்கான ஊடகம் எனும்போது அது, நம்முடைய பிரச்சினைகளை நாம் பேசுவதற்கானதா அல்லது நம்மிடமிருந்து மனிதகுல மேம்பாடு கருதி நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்தக் கூடியதும், பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் குரல் கொடுப்பதாகவும், நம்முடைய சமுதாயம் பற்றிய விசாலமான பார்வையை சகோதர சமுதாயத்தவரிடம் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமையத்தக்க ஒரு பொது ஊடகமாக இருக்க வேண்டும்.
நம்முடைய பிரச்சினைகளை மற்றவர்கள் மத்தியிலும் கொண்டு சென்று, பொதுஜன அபிப்பிராயத்தை நம் பக்கம் வெற்றிகரமாகத் திருப்புவது, தாக்குதிறன் கூடியதாக நம்முடைய நியாயமான கோரிக்கைகளை, முன்னெடுப்பது, சமூக  மேம்பாடு தொடர்பான நம்முடைய பங்களிப்பை வழங்குவது முதலான அம்சங்களை உள்வாங்கியதாக நம்முடைய ஊடகம் அமைவதே மிகப் பொருத்தமானது. எனவே, நம்மை நாமே தற்காத்துக் கொள்வதற்காகவும், நமக்கெதிரான சவால்களை முறியடிப்பதற்காகவும் மட்டுமின்றி, நீதியை நிலைநிறுத்த வேண்டிய நடுநிலைச் சமுதாயத்துக்குரிய பணியைத் திறம்படச் செய்வதற்காகவும் அத்தகைய ஒரு பொது ஊடகத்தை நோக்கி நகர்வது காலத்தின் தேவையாக உள்ளது.
தொடர்ச்சியாகப் ஊடகம் நடத்துமளவுக்குத் தேவையான நிதி இன்மை, புதிதாக அறிமுகமான ஊடகம் என்ற நிலையில் போதிய விளம்பரங்கள் கிடைக்காமை, விற்பனை முகவர்களிடமிருந்து முறையாகப் பணம் வசூலிப்பதிலுள்ள இடர்பாடுகள், முஸ்லிம்கள் மத்தியில் காசு கொடுத்துப் பத்திரிகை வாங்கிப் படிக்கும் பழக்கம் இன்மையால் விற்பனை வருமானத்தை மட்டும் நம்பியிருக்க முடியாத நிலைமை என்பன இந்த நிதிப் பிரச்சினையை பூதாகரமாக வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகின்றன என்றால் மிகையில்லை. இத்தனையையும் தாண்டி குறித்த பத்திரிகையை நடப்பு நட்டத்தைத் தாங்கிக்கொண்டே தொடர்ச்சியாக வெளியிடக்கூடிய நிலை வெகு அரிதானதாகும்.
தேர்ச்சி பெற்ற செய்தியாளர்கள், வடிவமைப்பு முதலான தொழினுட்பம் சார்ந்த துறைசார் நிபுணர்கள், போதிய ஊழியர் படை, பரவலான விநியோகத்துக்குத் தேவையான வாகன வசதி, நாடெங்கிலும் நேர்மையான முகவர்கள் அல்லது விநியோகஸ்தர்கள், விளம்பரதாரர்கள் என்று பல்வேறுபட்ட அடிப்படை அம்சங்கள் தேவை,
இந்திய முஸ்லிம்களிடையே வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ளதென்பது கசப்பான உண்மையாகும். அதிலும், எத்தனையோ வீண் ஆடம்பரங்களுக்காகப் பணத்தை அள்ளியிறைக்கும் நம்மவர்கள் ஒரு சிறு தொகைப் பணத்தை பத்திரிகையொன்றை வாங்குவதற்காகச் செலவழிப்பதை பெரும் சுமையாகக் கருதும் மனப்பாங்கே மேலோங்கியுள்ளது. தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்ட சூழ்நிலையில் பத்திரிகைகளைப் படிக்கும் பழக்கம் நம்மவர் மத்தியில் மிக அரிதாகி வருகின்றது. இந்நிலையில், நம்முடைய இலக்கு வாசகர்கள் யார் என்று தீர்மானித்து அதற்கேற்ப பத்திரிகையின் உள்ளடக்கத்தை வடிவமைக்க வேண்டியுள்ளது.
இத்துறை சார்ந்த நிபுணர்களை ஆர்வமும் திறமையும் உள்ள நம் இளைஞர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தலாம். நம்முடைய இம்முயற்சியின்போது தகுதி வாய்ந்த பிற சமயம் சார்ந்தவர்களின் உதவியையும் அறிவுத் திறனையும் மூலவளமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் நாம் தயங்கக் கூடாது. உதாரணமாக, ஹிந்து சமயத்தவரான ஒரு பேராசிரியர் மாஸ் மீடியா துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்று இனம் கண்டால், அவரை அழைத்து அவருக்குரிய வசதிகளைச் செய்து கொடுத்து நம்முடைய கருத்தரங்கில் உரையாற்றவோ பயிற்சியளிக்கவோ சந்தர்ப்பம் வழங்கத் தயங்கவே தேவையில்லை. எங்கே வளம் இருந்தாலும் நம்முடைய தூய நோக்கத்துக்காக அதனை உரிய முறையில் பெற்றுப் பயன்படுத்தத் தவறக் கூடாது.
ஊடகத்துறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கும் முஸ்லிம் ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்து ஒரே அமைப்பின் கீழ் இயங்கச் செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இத்தகைய அமைப்பினூடே ஊடகவியலாளரின் நலன்கள், உரிமைகள் பேணப்படுவது, அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது என்பன தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், பரஸ்பரம் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.
செயற்கைக் கோள் எனும் செட்டலைட் வரை விண்ணோக்கி உயர்ந்து நம்முடைய முஸ்லிம் நாடுகளை அங்குலம் அங்குலமாக உளவு பார்க்கும் நவீன தொழினுட்பத்தின் உச்சத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள், இஸ்லாத்தின் எதிரிகள். ஆனால், உலகுக்கே வாழும் வழிமுறை வகுத்துக் கொடுத்த ஓர் ஒப்பற்ற மார்க்கத்துக்குச் சொந்தக்காரர்களாகிய நாமோ இன்னும் ஒன்று இல்லாமல் இருக்கிறோம். புதுயுகம் படைக்கும் உத்வேகத்தோடும், அல்லாஹ்வின் மார்க்கத்தை அகிலத்தில் மேலோங்கச் செய்வதற்குரிய எல்லா வியூகங்களையும் அமைத்துப் போராடத்தக்க தணியாத தாகத்தோடும் விவேகமும் தியாக சிந்தையும் கடும் உழைப்பும் தளராத மனோதிடமும் கொண்ட முஸ்லிம் இளைஞர் அணி முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment