Saturday, 29 December 2012

Before You invite the ENGLISH (CHRIST) NEW YEAR


2:208   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
2:208நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,

புதுவாழ்வு பிறக்கட்டும்

எழுதியவர்/பதிந்தவர்/உரை 
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு பிறையை அடிப்படையாகக் கொண்டதாகும். பிறைமாதத்தின் முதல் மாதமாகமுஹர்ரம் திகழ்கின்றது. இந்த இதழ் உங்கள் கரங்களை வந்தடையும் போது ஹிஜ்ரி 1433 முடிவுற்று, ஹிஜ்ரி 1434 துவங்கியிருக்கும். இஸ்லாமிய புது வருடம் பிறந்திருக்கும்.
இஸ்லாத்தில் புது வருடத்திற்கென தனியான எந்தக் கொண்டாட்டங்களும் இல்லை. என்றாலும், இஸ்லாமிய மாதக் கணிப்பீட்டையும், ஒரு வருடம் முடிகின்றது. மறு வருடம் தொடர்கின்றது என்ற உண்மையுமாவது முஸ்லிம்கள் உணர்ந்திருப்பது அவசியமாகும்.
அல்லாஹ் உங்களை விசாரிப்பதற்கு முன்னர், உங்களை நீங்களே சுயவிசாரனை செய்து கொள்ளுங்கள் என்று கூறுவர். கடந்த வருடம் எம் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? எமது வாழ்வில் கடந்த வருடங்களில் ஆன்மீக, லௌஹீக முன்னேற்றங்கள் என்ன? என்பது குறித்து சிந்தனை செய்வது அவசியமாகும். குறிப்பாக இஸ்லாமிய அமைப்புக்கள் கடந்த வருடம் நாம் அடைந்த இலக்குகள் எவை? இந்த வருடத்தில் நாம் அடைய இருக்கும் இலக்குகள் எவை? என்பவை குறித்த சிந்தனையோட்டம் அவசியமாகும்.
‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.’ (9:36)
மேற்படி வசனம் நான்கு மாதங்கள் இஸ்லாத்தில் புனிதப்படுத்தப்பட்டமாதங்கள் என அறிவிக்கின்றது. இம் மாதங்களில் முஸ்லிம்கள் போரைத் துவக்;குவது குற்றமாகும். துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் என்பனவே இந்த புனித மாதங்களாகும். இந்த வகையில் முஹர்ரம் புனித மாதங்களில் ஒன்றாகும். இதுவே ஹிஜ்ரி வருடத்தின் முதல் மாதமாகும். நபிமொழிகளில் இந்த மாதம் ‘ஸஹ்ருல்லாஹ்’ அல்லாஹ்வின் மாதம் என சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. ஜாஹிலிய்யாக்களின் காலத்தில் கூட இம் மாதங்களில் யுத்தம் புரிவது தவிர்க்கப்பட்டு வந்தது. அத்துடன் இம் மாதத்தில் நோன்பு நோற்று இதை மக்கள் சிறப்பித்தனர்.
முஹர்ரம் மாத்தின் 10 ஆம் நாள் அறியாமைக் காலத்தில் குறைஷிகள்நோன்பு நோற்கும் தினமாக இருந்தது. நபி(ஸல்) அவர்களும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். மதீனா வந்த போது (அத்தினத்தில்) தானும் நோன்பு நோற்றதுடன் மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். றமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் விரும்பியவர் அதை நோற்கட்டும் விரும்பியவர் அதை விடட்டும் எனக் கூறினார்கள்’ (அறி: ஆயிஷh(ரழி), ஆதா: புஹாரி: 6074, முஸ்லிம்:1125, அஹ்மத்:50, 162, 243)
இந்த நபிமொழி மூலம் முஹர்ரம் மாதம் 10 ஆம் நாள் காபிர்களும் நோன்பு நோற்கப்படும் நாளாக இருந்ததை அறியலாம்.
‘நபி(ஸல்) அவர்கள் முஹர்ரம் 10 ஆம் தினத்தில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்க ஏவிய போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே! என்று கூறினார்கள். எதிர்வரும் ஆண்டில் இன்ஷா அல்லாஹ் 09 ஆம் நாளும் நோற்போம் எனக் கூறினார்கள். அடுத்த வருடம் முஹர்ரம்வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள்’ (அறி: இப்னு அப்பாஸ்(ரழி) , ஆதா: முஸ்லிம்:1134, அபூதாவுத்: 2445)
இந்த இடத்தில் மற்றுமொரு முக்கியமான அம்சம் உணர்த்தப்படுகின்றது. யூதர்களுக்கு மாறு செய்வதற்காக 09 உம் 10 உம் நோன்பு நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் பணித்துள்ளார்கள். முஸ்லிம் சமூகம் தனது தனித்துவத்தைப் பாதுகாப்பதன் அவசியம் இங்கே உணர்த்தப்படுகின்றது.
பல்லின சமூகங்களுக்கு மத்தியில் வாழும் போது தனித்துவத்தை உடை, நடை, பண்பாடு, கலாச்சாரம் அனைத்திலும் பாதுகாப்பதென்பது எமது இருப்புக்கான அத்திவாரமாகத் திகழ்கின்றது. ஏனைய சமூகங்களின் கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் பின்பற்றி அவர்களுடன் கலந்து உறைந்துவிடுவது சமூகத் தற்கொலைக்கு ஒப்பானதாகும். தற்போது முஸ்லிம் இளைஞர், யுவதிகளின் ஆடைகளில் கலாச்சாரத்தில் விரும்பத்தகாத மாற்றங்கள் நிகழ்ந்து வருவது நிறுத்தப்பட வேண்டிய அம்சமாகும்.
ஹிஜ்ரி ஆண்டுக் கணிப்புக் கூட இந்தத் தனித்துவத்தின் வெளிப்பாடுதான் ஈஸா(அலை) அவர்களின் பிரச்சாரத்திற்குப் பிற்பட்ட காலத்தைக் கவனத்திற் கொண்டு சூரிய வருடக் கணிப்பு கணிப்பிடப்பட்டு வருகின்றது. கி.பி, கி.மு என்பது இதையே குறிக்கின்றது. ஹிஜ்ரி ஆண்டுக் கணிப்பு ஹிஜ்ரத்திற்குப் பின்பிலிருந்து சந்திரனைக் கவனத்திற் கொண்டு துவக்கப்பட்டது. இந்த ஹிஜ்ரி ஆண்டுக் கணிப்பும் தனித்துவம் பேணுவதன் அவசியத்தைத்தான் உணர்த்துகின்றது.
முஹர்ரம் மாதம் நாம் நோன்பு நோற்பதற்கான காரணமும் ஹதீஸ்களில் கூறப்படுகின்றது.
‘நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் முஹர்ரம் 10 ஆம் தினம் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அதற்கான காரணத்தைக் கேட்ட போது இது நல்ல நாள். இந் நாளில் அல்லாஹ் மூஸா நபியையும், இஸ்ரவேலர்களையும் அவர்களது எதிரியிடமிருந்து பாதுகாத்தான். எனவே, மூஸா நபியும் நோன்பு நோற்றார் எனக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் மூஸா நபி விடயத்தில் உங்களை விட நான் அவருக்கு உரித்துடையவன் எனக் கூறி தானும் நோன்பு நோற்றதுடன் தனது தோழர்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்’ (அறி: இப்னு அப்பாஸ்(ரழி) , ஆதா: புஹாரி, முஸ்லிம்)
இந்த நபிமொழி மூலம் இந்தத் தினம் பிர்அவ்ன் அழிக்கப்பட்டு மூஸா நபி பாதுகாக்கப்பட்ட தினம் என்பது உறுதி செய்யப்படுகின்றது. இஸ்ரேலியர் இஸ்லாமிய சமூகத்தின் எதிரிகளாவர். இன்றுவரை அவர்கள் முஸ்லிம்களின் பகைவர்களாகவே செயற்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையிலே ‘இஸ்ரவேலர்கள் பாதுகாக்கப்பட்ட தினத்தில் அதற்கு நன்றி செலுத்துமுகமாக முஸ்லிம்கள் இன்றுவரை நோன்பு நோற்று வருகின்றனர் என்பது ஆச்சரியமான தகவலாகும். இஸ்ரவேலர்கள்கூட இதை மறந்திருப்பார்கள். மூஸா நபி பாதுகாக்கப்பட்டதற்கு இன்று அவர்கள்கூட நன்றி செலுத்தாது இருப்பார்கள். ஆனால் முஸ்லிம்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி நோன்பு நோற்று வருகின்றனர். இது இஸ்லாத்தின் உலகளாவிய தன்மையையும், குறுகிய இன, குல வேறுபாட்டைத்தாண்டி நீதி நியாயத்தின் அடிப்படையிலும், மனித இனத்திற்கான நலன்களின் அடிப்படையில் அதன் பார்வை அமைந்திருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
முஸ்லிம்களில் சிலர் இந்தத் தினத்தை சோக நிலையாகப் பார்க்கின்றனர். இந்தத் தினத்தில்தான் ‘கர்பலா’ போர் இடம்பெற்றது. இதில் நபி() அவர்களது பேரர் ஹுஸைன்(ரழி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தத் துக்கமான நிகழ்வை ஒட்டி இத்தினத்தை துக்க தினமாக அனுஸ்டிக்கும் பழக்கம் ஷியாக்களிடமும், அவர்களது சிந்தனையால் தாக்கப்பட்டவர்களிடமும் இருந்து வருகின்றது.
இது தவறானதாகும். யாருடைய மரணத்திற்காகவும் மூன்று நாளைக்கு மேல் துக்கம் அனுஷ்டிப்பதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. ஒரு பெண் தனது கணவனுக்காக 04 மாதங்களும் 10 நாட்களும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். (இத்தா இருக்க வேண்டும்) இந்த விதிக்கு மாற்றமாக துக்கம் அனுஷ;டிப்பதும், இத்தினத்தில் உடம்பைக் கீறிக் கிழித்து இரத்தம் எடுப்பதும், தமக்குத் தாமே அடித்துத் தம்மை நோவினை செய்வதும் ஜாஹிலிய்யத் ஆகும்.
ஷியாக்களின் இந்தத் தவறான நடத்தையினாலும்; சில தீவிரவாதப் போக்குடையவர்களின் மோசமான போக்கினாலும் இத்தினம் சில நாடுகளில் படுகொலைத் தினமாக மாற்றப்படுகின்றது. இது தவிர்க்கப்பட வேண்டிய அம்சமாகும்.
முஹர்ரம் மாத நோன்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, ‘அது கடந்த வருடத்தில் நடந்த சிறு தவறுக்கான பரிகாரமாக அமையும்’ என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்கள். (அறி: அபூ கதாதா(ரழி) , ஆதாரம்: புஹாரி)
இந்த நபிமொழி ஆசூரா நோன்பின் சிறப்பை மட்டும் கூறவில்லை. கடந்த வருடத் தவறுகளுக்காக பரிகாரம் காண வேண்டும் என்பதையும் சேர்த்தே உணர்த்துகின்றன. எனவே, கடந்த வருடம் குறித்த மீளாய்வுடன் இந்த வருடத்தை எதிர்நோக்குவோம்! புது வருடத்தில் புது வாழ்வு மலரட்டும்.

No comments:

Post a Comment