Saturday, 30 June 2012

நமது அழைப்புப்பணி

  Post image for நமது அழைப்புப்பணி 

அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்துலில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும்   பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை செய்து வருகிறோம். ஆனால்   அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும்   மாற்றத்திற்கும் ஆட்பட்டுவிட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன?
இஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது. கொள்கையிலும்   வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான் இன்றும் இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைய காலத்தில்   டிவி   ரேடியோ   பத்திரிக்கை   இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை. அப்படியென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறு இருக்கிறது. ஆமாம் நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம். நாம் எதை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். எதனை மையப்படுத்தி இஸ்லாமை மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும்.
உலகில் காணப்படும் சமயங்களோடு பத்தோடு பதினொன்றாக இருக்கட்டும் என்றெண்ணி அல்லாஹ் இஸ்லாமை இறக்கவில்லை. அனைத்து மார்க்கங்களைக் காட்டிலும் மேலோங்க வேண்டும் என்பதற்காக இறக்கி வைத்தான். ஆனால்   இன்று உலகில் உள்ள மதங்களில் இஸ்லாமும் ஒன்று என்கிற நிலைமைதான் உள்ளது.
1. நமது மக்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆதாரமாகக் கொண்டு இதுவே உண்மையான மார்க்கம்   அறிவியல் பூர்வமான மார்க்கம் என்று இஸ்லாமை அறிமுகப்படுத்துகிறார்கள்.
2. யாரேனும் பிரபலங்கள் இஸ்லாமை தழுவினால் அவர்களின் புகழை பெரிதுபடுத்தி இஸ்லாமை சரியான மார்க்கம் என்று சித்தரிக்க முயல்கின்றனர்.
3. அல்லது பிரபலமானவர்களின் இஸ்லாமைப் பற்றிய அபிப்பிராயங்கள் அவர்களது பேட்டிகள்   பாராட்டுகள்   கருத்துகளை முன் வைத்து இஸ்லாமை உயர்த்திக் காட்ட முற்படுகின்றனர்.
4. இஸ்லாமின் அழகான வழிபாடுகளையும் அதன் அழகான வழிமுறைகளையும் விளம்பரப்படுத்தி அதன் வாயிலாக இஸ்லாமை மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்கின்றனர்.
மேற்கண்ட இந்த நான்கு வகையான வழிமுறைகளை கையாண்டே இன்று உலகம் முழுவதும் இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இது தவிர இன்னும் சிலர் இஸ்லாமின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும்   ஆட்சேபணைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்கிறார்கள்.
குர்ஆன் வசனங்களை இறைவசனங்கள் என்று மெய்ப்பிக்க கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் குர்ஆன் வசனங்களோடு ஒத்ததாக அமைந்துள்ளமையை காண்பிக்கின்றனர்.
14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டவை இன்று இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் ஆராய்ச்சி செய்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே சாதாரணமாக ஒரு மனிதர் இதைக் கூறியிருக்க முடியாது. முக்காலமும் அறிந்த இறைவனே இதை கூறியிருக்க முடியும். குர்ஆன் இறைவன் வாக்கேயாகும் என்று நிரூபிக்கிறோம். உண்மையில் கடந்த நூற்றான்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல் உண்மைகள் குர்ஆனில் சொல்லப்பட்டவையே. ஆனால் இதை வைத்து குர்ஆன் இறைவனின் வேதம்   இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என்று நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதை நாம் கைவிட வேண்டும்.
இஸ்லாமில் எத்தனையோ வழிபாடுகள்   அறிவுரைகள்   அறிவியல்பூர்வமாக அமைந்துள்ளது நாம் இதனை அறிவியலின் துணை கொண்டு மக்களிடம் கொண்டு செல்லும் போது அறிவியலை முதன்மைப்படுத்தியும் முக்கியப்படுத்தியும் விடுகிறோம். இவ்வாறு நம்மையும் அறியாமல் அறிவியலை புனிதமாக்கி உயர்ந்த அந்தஸ்த்திற்கு கொண்டு சென்று விடுகிறோம். இதனால் இஸ்லாமின் ஏதாவது ஒரு வழிகாட்டுதல் விஞ்ஞானத்திற்கு முரணாக இருந்தால் அதைப் புறக்கணிக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனை செயல்படுத்த முன்வரும் மனிதன் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அச்செயல் அமைந்துள்ளதால் அதனை செய்ய முன்வருகிறான். அல்லாஹ்வும்   அவன் தூதரும் ஏவி இருக்கிறார்கள் என்பதை இரண்டாம் பட்சமாகவே எண்ணுகிறான். சரியோ தவறோ   நன்மையோ தீமையோ தலைவன் ஏவியதற்கு அடிபணிவதையே வழிபடுதல் என்கிறோம். இங்கே அத்தன்மை ஒளிந்து கொள்வதை பார்க்கிறோம். குர்ஆன் அறிவியல் கண்டுபிடிப்புகளின் புதையலோ   விஞ்ஞானத்தின் முன்னறிவிப்போ அதன் வழிகாட்டியோ அல்ல. அது வாழ்வியல் வழிகாட்டி புத்தகம்.
இன்று கண்டறியப்பட்டுள்ள குர்ஆனோடு ஒத்ததாக அமைந்துள்ள விஞ்ஞான உண்மைகளை நாம் சத்திய மார்க்கத்திற்கு சான்றாக கொள்ளலாம். அவற்றை வைத்து இஸ்லாம் அறிவியல் மார்க்கம்   இஸ்லாம் விஞ்ஞான பூர்வமான மார்க்கம் என்று இஸ்லாமை அறிமுகப்படுத்துவதம் சரியாகாது.
ஹிந்து மதத்தின் வழிபாடுகளிலும் எத்தனையோ அறிவியல் உண்மைகள் உள்ளன. வீட்டு முற்றத்தில் மாட்டுச் சாணி தெளிப்பதால் எத்தனையோ பூச்சிகள்   விஷ ஜந்துக்கள் வீட்டை அண்டாது. முகத்திற்கு மஞ்சள் பூசுவதால் முகக் கிருமிகள் இறந்து போகின்றன. முகத்திற்கு பொலிவு கிடைக்கின்றது சூரிய நமஸ்காரம் செய்யும் போது அதிகாலை வெயில் உடல் மேல் படுவதால் வைட்டமின் ‘D’ சக்தி கிடைக்கின்றது. நெற்றியில் திருநீர் பூசுவதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
இப்படி ஒவ்வொரு சமூகத்தின் கலாச்சாரத்திலும் பழக்க வழக்கங்களிலும் ஏதாவது ஒரு வகையில் அறிவியல் ரீதியான நன்மைகளும்   மருத்துவபலன்களும் இருக்கத்தான் செய்கின்றன. நாம் ’அறிவியல்பூர்வமாய்’ என்று மக்களிடம் இஸ்லாமை கொண்டு சென்றால் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தத்தமது பழக்க வழக்கத்தில் இருக்கும் அறிவியலை கண்டு தம் மதத்தையே பெருமையாக கொள்வர். இது அவர்களை மேலும் வெளியே வர முடியாதபடி செய்து விடும்.
இவற்றையெல்லாம் நாம் நமது மக்களிடம் சொல்லலாம். நம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக இவற்றைச் சொல்வதில் தவறில்லை. பறவை இறைச்சிக்கு உயிரூட்டி இப்ராஹிம் (அலை) அவர்களது ஈமானையும்   மிஃராஜ் மூலமாக முஹம்மத் (ஸல்) அவர்களின் ஈமானையும் அல்லாஹ் திருப்தி அடையச் செய்தான். அவர்கள் இறைத்தூதர்கள். அல்லாஹ்வின் அருளை நேரில் கண்டவர்கள். நாம் கொள்கையளவில் இஸ்லாமை அதன் ஏவல்   விளக்கங்களில் நன்மை இருக்கின்றதா? என்று நாம் பார்ப்பதில்லை. நோன்பு வைப்பதால் இன்ன மருத்துவ பலன் இருக்கிறது என்பதால் நோன்பு நோற்பதில்லை. கேட்டோம்   கட்டுப்பட்டோம் என்கிற அடிப்படையிலே நாம் வழிபட்டு கொண்டு இருக்கிறோம். இதுதான் உண்மையான ஈமானும் கூட. அதே வேளையில் உலகியல் அடிப்படையில் சில நன்மைகளும் இருக்கும் போது நமது மனம் திருப்தி அடைகின்றது. செய்யும் காரியத்தில் ஒரு ஆர்வமும்   உறுதியும் ஏற்படுகின்றது. ஆகவே இதை நம் மக்களிடம் சொல்லலாமே தவிர இதை வைத்து பிற மக்களிடம் இஸ்லாமை அறிமுகப்படுத்தலாகாது.
கேரள பிரபல இலக்கியவாதி கமலா சுரைய்யா (மாதவி குட்டி) பிரபல மேற்கத்திய பாப் இசைப் பாடகர் யூசுப் இஸ்லாம் போன்றோரின் இஸ்லாமிய தழுவலை அவர்களின் பிரபலத்தை முன்வைத்து இஸ்லாமை பிறருக்கு பிரச்சாரம் செய்கிறோம். இத்தகைய பிரபல மனிதர்கள் இஸ்லாமை தழுவியிருக்கிறார்கள். நீங்களும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.
சிலர் இஸ்லாமிற்குள் வராவிட்டாலும் இஸ்லாமைப்பற்றி தங்களது நல்ல அபிப்பிராயங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் கொள்கையைப் பற்றியும்   போதனைகளைப் பற்றியும் அது ஏற்படுத்திய சமூக மாற்றத்தைப் பற்றியும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.
இன இழிவிற்கு இஸ்லாமே அருமருந்து என்று பெரியார் ஈ.வே. ராமசாமியும் முஹம்மத் இன்று இருந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிருப்பார் என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறியிருக்கிறார். இது போன்று எத்தனையோ தலைவர்கள் இஸ்லாமை தழுவாவிட்டாலும் இஸ்லாமை போற்றியிருக்கிறார்கள்.
இவர்களது பேட்டிகளையும்   அறிக்கைகளையும் முன்வைத்து இஸ்லாமை பிரச்சாரம் செய்கிறோம். இப்படிப்பட்ட பிரபலமானவர்களின் நற்கருத்துக்களை மக்களிடம் சொன்னால் மக்கள் இஸ்லாமை ஆர்வத்தோடு படிப்பார்கள். இஸ்லாமினுள் நுழைவார்கள் என்று நம்புகிறோம். உண்மையில் சகோதரர்களே! இதனால் அவர்களுக்கு இஸ்லாத்தின் மீது நன்மதிப்பே ஏற்படுத்துமே தவிர அவர்களை இஸ்லாமிற்குள் நுழைக்கச் செய்யாது. சாதாரணமான ஒருவருடைய மனதில் ” அவர்கள் (அந்த பிரபலங்கள்) உண்மையானவர்களாக இருந்தால் இஸ்லாமை தழுவியிருக்கலாமே ” என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.
அருமைச் சகோதரர்களே! நாம் இஸ்லாமை இவ்வாறு கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இத்தகைய கவர்ச்சி நாயகர்களின் வசீகர பேச்சுக்கள் இஸ்லாமை அறிமுகப்படுத்த தேவையே இல்லை. இஸ்லாமே கவர்ச்சி மார்க்கம்   உண்மையான இஸ்லாமை மக்களிடம் சொன்னாலே மக்கள் சாரை சாரையாக வருவார்கள். அதன் கடவுட் கொள்கை ஒன்றே போதும்.
மேலும் தொழுகை   நோன்பு போன்ற வழிபாடுகளின் அழகையும்   அதன் செயல் வடிவ வசீகரத்தையும்   கல்விக்கு இஸ்லாம் அளித்துள்ள முக்கியத்துவம்   தாயை பேணுவதற்கான கட்டளைகள். இன்னும் எத்தனையோ சமூக சீர்திருத்த கருத்துகள்   மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அழகான அறவுரைகளை எடுத்துக் கூறி இஸ்லாமை பிரச்சாரம் செய்கிறார்கள். எத்தனையோ பேர் இதைக் கேட்டு இஸ்லாமிற்குள் வருகிறார்கள்.
இஸ்லாமில் தீண்டாமை இல்லை என்று கருதி இஸ்லாமினுள் வருகிறார்கள். இவ்வாறு எவ்வளவோ அழகான நெறிமுறைகள் தாங்கிய மார்க்கமாக இஸ்லாம் இருக்கின்றது. ஆனால் இதை மட்டும் கருத்தில் கொண்டு இஸ்லாமைத் தழுவியவர்களிடம் அவ்வளவு கொள்கை பிடிப்பு இருக்காது. நிலைகுலையாமை இருக்காது. “உலகில் எத்தனையோ நல்ல கருத்துகளை மதங்கள் கூறுகின்றன. அவற்றுள் இஸ்லாமும் ஒன்று. இஸ்லாமும் சிலவற்றை கூறுகின்றது! ” என்ற கருத்தோட்டத்தையே இது பலரிடம் ஏற்படுத்தி விடும். இந்த நல்ல அறிவுரைகளுக்காக இஸ்லாமை தழுவ வேண்டிய அவசியம் இல்லை என்கிற எண்ண நிலைப்பாட்டை தோற்றுவித்துவிடும்.
அருமைச் சகோதரர்களே! உலகில் நல்ல அறவுரைகளுக்கும்   தத்துவங்களுக்கும் பஞ்சமில்லை. எல்லா சமயங்களிலும் நல்ல அறவுரைகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் நல்ல அறவுரைகளை மையப்படுத்தி இஸ்லாமை கொண்டு சென்றால் மக்கள் அதைப் போற்றத்தான் செய்வார்களே தவிர இதற்காக ஒரு மதத்தை தழுவி அதில் கட்டுண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றே மக்கள் கருதுவார்கள்.
இஸ்லாம் ஓர் அழகான வாழ்க்கை நெறியாக உள்ளது. அது மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் வழிகாட்டும் நெறியாக உள்ளது என்று கூறுகிறோம். தனிமனித   மற்றும் பொதுவாழ்க்கை என எல்லா விஷயங்களிலும் மனிதன் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் தீர்வளிக்கிறது என்று பிரச்சாரம் செய்கிறோம்.
இது உண்மை என்றாலும் இதை நாம் அழைப்புப்பணியின் பிரச்சார வழிமுறையாக கொள்ளக்கூடாது. இது ஒரு வகையில் கிறித்தவ மிஷினரிகளின் பிரச்சார வழிமுறையை ஒத்ததாக அமைந்திருக்கின்றது. அவர்கள் தான் “நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டீர்களானால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். நோய்   நொடிகள் குணமாகும். கடன் தொல்லைகள் தீரும். முடவர்கள் நடப்பார்கள். மனநிம்மதி கிடைக்கும்! ” என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
மார்க்கத்தின் கவர்ச்சியே கலிமத்து தய்யிபாதான். அந்த “லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
ஏகத்துவ பிரச்சாரம் செய்தாலே நமக்கு போதுமானது. அதற்கு இருக்கும் வசீகரத் தன்மை வேறு எந்த வாக்கியத்திற்கும் கிடையாது. இதை ஒன்றை மட்டும் வைத்தே தங்களது 23வருட நபித்துவ வாழ்க்கையில் இறைத்தூதர் (ஸல்) இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். இஸ்லாத்தின் ஏனைய எந்த ஒரு அம்சத்தையும் பிரச்சார வழிமுறையாய் அண்ணல் நபி (ஸல்) கையிலெடுக்கவில்லை. அனைத்து நபிமார்களும்   “என் சமூகமே அல்லாஹ்வை வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்றும் “அல்லாஹ்வை வணங்குங்கள் தாகூதை விட்டும் விலகி இருங்கள்!” என்றும்தான் பிரச்சாரம் செய்தார்கள்.
அன்றைய அரபு தீபகற்பத்தில் ஷிர்க்கும் இருந்தது. ஏனைய அனாச்சாரங்களும் இருந்தன. விபச்சாரத்தை ஒழிக்கவும் மதுவிலக்கை கொண்டு வரவும் இறைத்தூதர் (ஸல்) ஓர் இயக்கத்தை உருவாக்கவில்லை. அப்படி தீமைகள் ஒழிப்பு இயக்கம் என ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருந்தால் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இருந்த வெறுப்பும் எதிர்ப்பும் அந்தளவிற்கு ஏற்பட்டு இருக்காது.
உண்மையில் இஸ்லாம் எதிர்ப்பிலேயே வளர்ந்திருக்கின்றது. பொய்க் கடவுளர்களைக் கொண்டு மக்களை நம்ப வைத்து அதை வைத்தே மக்களை தமக்குக் கீழே அடிமைகளாக நடத்திக் கொண்டிருந்தனர்   அன்றைய தலைவர்கள். அவ்வேளையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதுவையும் விபச்சாரத்தையும் இன்னபிற தீமைகளையும் ஒழிப்பதையே முன்னிறுத்தி போராடி இருந்தால் அத்தலைவர்களது எதிர்ப்பிற்கு ஆளாகி இருக்கமாட்டார்கள். இது ஏனென்றால் அப்போராட்டம் அவர்களது தலைமைக்கும் பதவிக்கும் இது எவ்விதத்திலும் ஆபத்து ஏற்படுத்தாது. ஷிர்க்கை எதிர்த்த போது தான் தம் தலைமைக்கே இது வேட்டு வைக்க கூடியதாக உள்ளது என்பதை உணர்ந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதிர்த்தார்கள்   துன்பம் தரலானார்கள்   நாடு கடத்தினார்கள்   கொலை செய்யவும் முற்பட்டார்கள்.
எந்த கற்சிலைகளை கடவுளர்கள் என்று மக்களை நம்ப வைத்து தமக்கு கட்டுப்படுபவர்களாக ஆக்கி வைத்திருந்தார்களோ அச்சிலைகள் கடவுள்கள் கிடையாது என்னும் போது எப்படி அத்தலைவர்களால் பொறுத்துக் கொள்ள முடியும். அவர்களது தலைமையையே பறிக்கக் கூடியதாக அல்லவா அது இருந்தது?
தலைமையும்   அதிகாரமும் கையில் இருக்கும் போது எல்லா சமூக கேடுகளையும் ஒழிக்க அவர்களால் முடியும். ஆனால் அது அவர்களுக்கு எவ்விதத்திலும் உதவாது. சிலைகளை கடவுளர்களாக மக்களை நம்பவைக்கும் போதுதான் அத்தலைவர்களுக்கு பற்பல வழிகளில் செல்வமும் கிடைக்கின்றது செல்வாக்கும் கிடைக்கின்றது. உலகம் முழுவதும் இதுதான் இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது.
நன்மைகளை செய்கிறோம். தீமைகளுக்கு எதிராக போராடுகிறோம் என்று மக்களை ஒன்றிணைத்து பின்னர் படிப்படியாக இஸ்லாமை பிரச்சாரம் செய்யலாமே என்று நாம் நினைக்கலாம். இதுவும் சரியான வழிமுறை அன்று!. ஒரு வேளை ஏதாவது ஈமானிய சோதனை ஏற்பட்டால் அப்படி இஸ்லாமிற்குள் வருபவர்களிடம் ஈமானிய உறுதி இஸ்திகாமத் நிலைகுலையாமை தென்படாது.
ஏகத்துவ கலிமாவை சொல்லித்தான் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். அதன் ஆழ   அகலத்தை நன்றாக விளங்கிக் கொண்டபின்புதான் குறைஷித் தலைவர்கள் எதிர்த்தார்கள்.
ஒரு முறை அபு ஜஹ்லிடம் அவனைச் சார்ந்த கூட்டத்தாரில் ஒருவன் இப்படி கேட்டான். “நீங்கள் ஏன் முஹம்மதை இந்தளவிற்கு எதிர்க்கிறீர்கள்?. அவர் ஒன்றும் அன்னியர் கிடையாதே. உங்கள் சித்தப்பா மகன் தானே! அவர் சொல்வதை கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?
” அதற்கு அபுஜஹ்ல் “அவர் சொல்வது உண்மைதான்!. ஆனால்   அவர் தன்னை எப்படி அறிமுகப்படுத்துகிறார் தெரியுமா? தன்னை ரசூலுல்லாஹ் அல்லாஹ்வின் தூதர் என்று பிரகடனப்படுத்துகிறார். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? அவர் “நில்” என்றால் நிற்க வேண்டும்   “உட்கார்” என்றால் உட்கார வேண்டும். இது என்னால் முடியாது!” என்று கூறினான். இது தான் அவர்கள் புரிந்து கொண்ட இஸ்லாம்! அதனால் கடுமையாக எதிர்த்தார்கள். எங்கே தம்மை விட்டும் தலைமை போய்விடுமோ என்று அஞ்சினார்கள்.
இஸ்லாமை சொல்லும் போது அடி விழும். உதை வாங்க நேரிடும். அப்பொழுது தான் நாம் உண்மையான இஸ்லாமைச் சொல்கிறோம் என்று பொருள்!. அனைத்து நபிமார்களும் இஸ்லாமை சொன்ன போது எதிர்ப்பு இல்லாமல் இருந்தது இல்லை. இஸ்லாமை சொன்ன போது நபி (ஸல்) அவர்களுக்கும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. இது எப்பொழுது ஏற்படும் என்றால் அல்லாஹ்வை விட்டு விட்டு மற்றவைகளை வணங்காதீர்கள் என்று நாம் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யும் போது தான் ஏற்படும்!.  இஸ்லாமை இப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டும்!. நபிமார்கள் வாழ்க்கையிலிருந்து படிப்பினையாக இதனையே பெறுகிறோம்!!.
ஆகவே மற்ற மற்ற சிறப்பம்சங்களை காட்டிலும் இஸ்லாத்தின் இந்த அடிப்படையை மையப்படுத்தி இஸ்லாமை நாம் அறிமுகப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்!!

No comments:

Post a Comment