Wednesday, 14 August 2013

நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டாமா?

நாஸ்திகர்கள் இறைவனையும் மறுமையையும் மறுத்துக்கூற பிரதான காரணம் என்ன? அவர்களின் அந்த எண்ணம் சரியா? அவர்கள் எண்ணப்படி தங்கள் திட்டத்தில் வெற்றி அடைந்தார்களா? என்று பார்ப்போம். ஒரே தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்த இந்த உலக மக்களிடம் இன்று எண்ணற்ற மதங்களையும், பிரிவுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் விரோத குரோத மனப்பான்மைகளையும் பார்க்கிறோம். ஒரு சாரார் இன்னொரு சாரார் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக மக்களின் ஜனத்தொகையில் குறைந்த விகிதாச்சாரத்தில் உள்ளவர்கள் பெரும்பான்மை மக்களை ஆட்டிப்படைக்கின்றனர். சமத்துவ சகோதரத்துவ சீரானதொரு வாழ்க்கையை மனித சமுதாயத்தில் பார்க்க முடியவில்லை.
மனித சமுதாயத்தின் பெரும்தொகையினரை தீண்டத்தகாதவர்கள் என மதத்தின் பெயராலேயே ஒதுக்கி வைத்து, கொடுமைகள் பல இழைக்கப்பட்டு வருகின்றன. நாய்க்கிருக்கும் அந்தஸ்து கூட இந்த மனிதர்களுக்கு இல்லை என்ற கொடுமையை பார்க்கிறோம். ஆக இப்படி சமுதாயத்தில் காணப்படும் அத்தனை கொடுமைகளுக்கும் இறைவனையும், மறுமையையும் நம்புவதே காரணமாக இருக்கிறது. இறைவனையும், மறுமையையும் சொல்லியே பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்கள் ஏமாற்றுகின்றனர். அந்த மயக்கம் காரணமாகவே பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்குக் கட்டுபடுகின்றனர். எனவே இறைவனும், மறுமையும் இல்லை. மரணத்தோடு மனித வாழ்க்கை முடிவுற்றுவிடுகின்றது என்று நிலை நாட்டி விட்டால், இப்படிப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் அழித்து விடலாம். ஓர் உன்னத சமுதாயத்தை உருவாக்கி விடலாம் என்பது நாஸ்திகர்களின் எண்ணமாகும்.

இறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்களா?

பகுத்தறிவுகாரர்கள் கண்னுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டு மிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. கடவுளைக் காட்டினால் நம்புகிறோம், லட்சக்கணக்கில் பணம் பரிசும் தருகிறோம் என்று சவால் விடுகிறார்கள். இதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? எந்த உண்மையான பகுத்தறிவுவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இதனைப் பார்த்தறிவு அதாவது ஜயறிவு என்றே சொல்லுவான். இன்னும் பச்சையாகச் சொன்னால் இதை மிருக அறிவு என்றே சொல்ல வேண்டும்.
கண்ணியமிக்க ஒருவர் உங்களிடம் வந்து எதிர்வரும் ஒரு தேதியில் பெரிய தொரு விருந்துபசாரம் நடைபெற இருப்பதாகவும், அதில் நீங்கள் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுகிறார். பகுத்தறி ரீதியாக இதை எப்படி ஏற்பீர்கள்? அவர் வீட்டிற்குப் போய் அந்த விருந்துக்குறிய ஏற்பாடுகள் அனைத்தையும் கண்ணால் பார்த்த பின்னர்தான் ஏற்பீர்களா? அப்படியே அவர் வீட்டிற்குப் போய் நேரில் நீங்கள் பார்ப்பதால் நடைபெற இருக்கும் விருந்துக்குரிய அறிகுறிகள் ஏதும் அதற்கு முன்னரே உங்கள் பார்வையில் படுமா? இல்லையே?

பகுத்தறிவு என்றால் என்ன?

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

Saturday, 27 July 2013

“பத்ரு” களம்…! தரும் படிப்பினை!

Post image for “பத்ரு” களம்…! தரும் படிப்பினை! இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய “பத்ரு” போர் ரமழான் 17ல் நடைபெற்றது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ரு” போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1432 ஆண்டுகள். இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
எழுபது ஒட்டகங்களையும் இரண்டு குதிரைகளையும் மிகக் குறைந்த ஆயுத வசதிகளையும் கொண்ட 313 முஸ்லிம்கள், ஆயுதம் தாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைஷ்களை எதிர்த்தனர் என்றால், அந்த முஸ்லிம்களின் நெஞ்சுறுதியையும் இறை நம்பிக்கையையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நோன்பு வைத்துள்ளோமே இச்சமயத்தில் எப்படிப் போராடுவது என்றெல்லாம் அவர்கள் தயங்கிக் கொண்டிருக்கவில்லை. இறை நெறிக்கு ஓர் ஆபத்து என்ற போது தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.

Sunday, 2 June 2013

உறவுகளைப் பேணுவோம்

இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.
துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் துணிவதில்லை.
நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தெரிவு செய்பவையாகும். இரத்தஉறவு அல்லாஹ்வின் தெரிவாகும். இவன் உன் வாப்பா, இவன் உன் சாச்சா, இவன் மாமா, இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தெரிவாகும். இந்தத் தெரிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.
ஈமானுடன் சம்பந்தப்பட்டது: 
இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசிய மானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது. எனவே, குடும்ப உறவைப் பேண உறுதி பூணுவோமாக.

மக்கள் மனங்களைக் கவர!

அழைப்புப் பணி புரிவோரும், சமூகப் பணி புரிவோரும் மக்களால் நேசிக்கப்பட வேண்டும். தாம் நேசிக்கும் ஒருவரின் கருத்துக்குத்தான் மக்கள் மதிப்பளித்துப் பழக்கப்பட்டுள்ளனர். எனவே பிறர் மீது தனது ஆளுமையைப் பிரயோகிக்க விரும்புபவர் முதலில் அவரால் நேசிக்கப்படக் கூடியவராகத் தன்னை மாற்றிக்கொள்வது அவசியமாகும்.
இந்த வகையில் மக்கள் மனங்களைக் கவரவும், அவர்களைத் தன் பால் ஈர்த்தெடுக்கவும், அவர்களது நேசத்தைப் பெறவும் இஸ்லாம் காட்டும் சில வழிகாட்டுதல்களைத் தொகுத்து நோக்குவது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என எண்ணுகின்றேன்.
1. அல்லாஹ்வின் நேசத்தைப் பெறல்:
மக்கள் உங்களை நேசிக்க வேண்டுமா? அவர்களது மனதில் நீங்கள் நீங்காத இடத்தைப் பெற வேண்டுமா? அப்படியாயின் நீங்கள் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற வேண்டும். அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.
அல்லாஹ்வின் நேசத்தைப் பெற பர்ளான கடமைகளையும், மேலதிகமான ஸுன்னத்தான அமல்களையும் ஆர்வத்துடன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அல்லாஹ்வின் நேசம் கிடைக்கும்.

நயவஞ்சகர்களின் பண்புகள்

ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் ‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, ‘நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்” என்று கூறினான். அவன் கூறியதை ‘(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்’ அல்லது ‘உமர் (ரலி) அவர்களிடம்’ கூறினேன். அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) ‘நாங்கள் அதைச் சொல்லவேயில்லை” என்று அவர்கள் சாதித்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் இப்னு உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ்நாளில் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று கூறினார்கள். அப்போது, ‘இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிற போது” என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, ‘ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவு படுத்திவிட்டான்)” என்று கூறினார்கள்.
புஹாரி :4900 ஜைது பின் அர்கம் (ரலி).