நாஸ்திகர்கள் இறைவனையும் மறுமையையும் மறுத்துக்கூற பிரதான காரணம் என்ன? அவர்களின் அந்த எண்ணம் சரியா? அவர்கள் எண்ணப்படி தங்கள் திட்டத்தில் வெற்றி அடைந்தார்களா? என்று பார்ப்போம். ஒரே தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்த இந்த உலக மக்களிடம் இன்று எண்ணற்ற மதங்களையும், பிரிவுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் விரோத குரோத மனப்பான்மைகளையும் பார்க்கிறோம். ஒரு சாரார் இன்னொரு சாரார் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக மக்களின் ஜனத்தொகையில் குறைந்த விகிதாச்சாரத்தில் உள்ளவர்கள் பெரும்பான்மை மக்களை ஆட்டிப்படைக்கின்றனர். சமத்துவ சகோதரத்துவ சீரானதொரு வாழ்க்கையை மனித சமுதாயத்தில் பார்க்க முடியவில்லை.
மனித சமுதாயத்தின் பெரும்தொகையினரை தீண்டத்தகாதவர்கள் என மதத்தின் பெயராலேயே ஒதுக்கி வைத்து, கொடுமைகள் பல இழைக்கப்பட்டு வருகின்றன. நாய்க்கிருக்கும் அந்தஸ்து கூட இந்த மனிதர்களுக்கு இல்லை என்ற கொடுமையை பார்க்கிறோம். ஆக இப்படி சமுதாயத்தில் காணப்படும் அத்தனை கொடுமைகளுக்கும் இறைவனையும், மறுமையையும் நம்புவதே காரணமாக இருக்கிறது. இறைவனையும், மறுமையையும் சொல்லியே பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்கள் ஏமாற்றுகின்றனர். அந்த மயக்கம் காரணமாகவே பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்குக் கட்டுபடுகின்றனர். எனவே இறைவனும், மறுமையும் இல்லை. மரணத்தோடு மனித வாழ்க்கை முடிவுற்றுவிடுகின்றது என்று நிலை நாட்டி விட்டால், இப்படிப்பட்ட கொடுமைகள் அனைத்தையும் அழித்து விடலாம். ஓர் உன்னத சமுதாயத்தை உருவாக்கி விடலாம் என்பது நாஸ்திகர்களின் எண்ணமாகும்.