இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய “பத்ரு” போர் ரமழான் 17ல் நடைபெற்றது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த “பத்ரு” போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1432 ஆண்டுகள். இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
எழுபது ஒட்டகங்களையும் இரண்டு குதிரைகளையும் மிகக் குறைந்த ஆயுத வசதிகளையும் கொண்ட 313 முஸ்லிம்கள், ஆயுதம் தாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைஷ்களை எதிர்த்தனர் என்றால், அந்த முஸ்லிம்களின் நெஞ்சுறுதியையும் இறை நம்பிக்கையையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நோன்பு வைத்துள்ளோமே இச்சமயத்தில் எப்படிப் போராடுவது என்றெல்லாம் அவர்கள் தயங்கிக் கொண்டிருக்கவில்லை. இறை நெறிக்கு ஓர் ஆபத்து என்ற போது தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.