Sunday, 2 June 2013

உறவுகளைப் பேணுவோம்

இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.
துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் துணிவதில்லை.
நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தெரிவு செய்பவையாகும். இரத்தஉறவு அல்லாஹ்வின் தெரிவாகும். இவன் உன் வாப்பா, இவன் உன் சாச்சா, இவன் மாமா, இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தெரிவாகும். இந்தத் தெரிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.
ஈமானுடன் சம்பந்தப்பட்டது: 
இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசிய மானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது. எனவே, குடும்ப உறவைப் பேண உறுதி பூணுவோமாக.

மக்கள் மனங்களைக் கவர!

அழைப்புப் பணி புரிவோரும், சமூகப் பணி புரிவோரும் மக்களால் நேசிக்கப்பட வேண்டும். தாம் நேசிக்கும் ஒருவரின் கருத்துக்குத்தான் மக்கள் மதிப்பளித்துப் பழக்கப்பட்டுள்ளனர். எனவே பிறர் மீது தனது ஆளுமையைப் பிரயோகிக்க விரும்புபவர் முதலில் அவரால் நேசிக்கப்படக் கூடியவராகத் தன்னை மாற்றிக்கொள்வது அவசியமாகும்.
இந்த வகையில் மக்கள் மனங்களைக் கவரவும், அவர்களைத் தன் பால் ஈர்த்தெடுக்கவும், அவர்களது நேசத்தைப் பெறவும் இஸ்லாம் காட்டும் சில வழிகாட்டுதல்களைத் தொகுத்து நோக்குவது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என எண்ணுகின்றேன்.
1. அல்லாஹ்வின் நேசத்தைப் பெறல்:
மக்கள் உங்களை நேசிக்க வேண்டுமா? அவர்களது மனதில் நீங்கள் நீங்காத இடத்தைப் பெற வேண்டுமா? அப்படியாயின் நீங்கள் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற வேண்டும். அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.
அல்லாஹ்வின் நேசத்தைப் பெற பர்ளான கடமைகளையும், மேலதிகமான ஸுன்னத்தான அமல்களையும் ஆர்வத்துடன் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அல்லாஹ்வின் நேசம் கிடைக்கும்.

நயவஞ்சகர்களின் பண்புகள்

ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் ‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள்” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, ‘நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்” என்று கூறினான். அவன் கூறியதை ‘(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்’ அல்லது ‘உமர் (ரலி) அவர்களிடம்’ கூறினேன். அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) ‘நாங்கள் அதைச் சொல்லவேயில்லை” என்று அவர்கள் சாதித்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் இப்னு உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ்நாளில் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று கூறினார்கள். அப்போது, ‘இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிற போது” என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, ‘ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவு படுத்திவிட்டான்)” என்று கூறினார்கள்.
புஹாரி :4900 ஜைது பின் அர்கம் (ரலி).