தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்…
“நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.

செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு ‘கெட்ட பெண்’ என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையான போது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை – நானா? அல்லது அவர்களா?)
எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.