Thursday 27 February 2014

கலாச்சார ஊடுருவல்

உலகின் பல்வேறு இன, மொழி, தேசக் கலாச்சாரங்களிலிருந்தும் வேறுபட்டு அகில உலகத்தையும் தன்பால் ஈர்த்தக் கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரமாகும். இறை வேத வரிகளும் இறைத்தூதர் மொழிகளும் போதித்த இஸ்லாமியக் கலாச்சாரத்தை இம்மியும் பிசகாமல் இஸ்லாமியச் சமுதாயம் கடைப்பிடித்த காலமெல்லாம் அகில உலகுக்கும் முன்மாதிரியாக அது திகழ்ந்தது.


இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டப் பல்வேறு சமுதாய மக்களும் இனிய இஸ்லாத்தில் இணைந்த போது, அதுநாள் வரை தாங்கள் பின்பற்றி வந்த சில கலாச்சாரங்களைத் தங்களையும் அறியாமல் சிலர் தங்களுடன் கொண்டு வந்தனர். காலப் போக்கில் அந்த அந்நியக் கலாச்சாரங்கள் வேர்விட்டு, கிளைபரப்பி, முழு இஸ்லாமியச் சமுதாயத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைக் கலாச்சாரத்துக்குக் குழிபறித்து விட்டது எனலாம்.
சிலை வணக்கக் கலாச்சாரம் போன்ற, “பாவம்” என்று பார்வையில் கண்காணத் தெரிந்த சில கலாச்சாரங்கள் நம்மிடம் நுழைய முடியவில்லையே தவிர, நல்லவைதாமே என்ற போர்வையில் நுழைந்த கலாச்சாரங்களைப் பாமர முஸ்லிம்கள் அலட்சியத்தோடு கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு பல சீர்கெட்டக் கலாச்சாரங்களின் ஊடுருவல் நம் இஸ்லாமியச் சமுதாயத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. இந்தக் கலாச்சார ஊடுருவல்களில் பல, ஷிர்க் என்னும் இணைவைத்தலில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை நம் சமுதாயத்தில் பலர் இன்னமும் உணர்ந்ததாகத் தெரிய வில்லை. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான் – (திருக்குர்ஆன் 4;:48)
இந்தக் காலாச்சார ஊடுருவலை அலட்சியம் செய்வோர், மற்றும் அவற்றுக்கு நியாயம் கற்பிப்போர் பின்வரும் நபி மொழியை நினைவிற் கொள்ள வேண்டும். “எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: அபூதாவூத். என்னும் நபி மொழியை நன்றாகப் புரிந்து கொண்டால் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வளவு மோசமானது என்பதை உணரலாம். “அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்னும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கருத்தாழமிக்க வார்த்தைகளை அலட்சியப் படுத்த எந்த ஒரு முஸ்லிமும் முன்வரமாட்டார்.
நமது அன்றாட வாழ்வில் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வாறெல்லாம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது என்பதைச் சிந்தித்து, ஆராய்ந்து, நல்லுணர்வு பெற வேண்டும்.
பிறப்பில், இறப்பில், வாழ்வில், திருமணத்தில் மற்றும் அன்னறாடப் பழக்க வழக்கங்களில் நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட இந்தக் கேடு கெட்டக் கலாச்சார ஊடுருவலை நாம் வேரோடும் வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் தொடங்கி, பெண் குழந்தைகள் பருவமடைவதிலும் திருமணம் நடத்துவதிலும் புதிய வீடு கட்டுவதிலும், இப்படி அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவலால், “மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் எவ்வகையிலும் வேறுபடவில்லையே” என்று பிற மதத்தவர் விமர்சிக்கும் அளவுக்குப் போய்விட்டது.

Friday 21 February 2014

''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.''

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.
ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-
அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?
ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?
இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?
ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?
தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?
தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?
மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?

நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்

மேலும் மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (ஆலு இம்ரான் : 104)

இங்கே நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் -  நல்லதைக் கொண்டு ஏவுபவர்கள், அழைப்பாளர்கள் பற்றியும், தீயவற்றிலிருந்து தடுப்பவர்கள் பற்றியும் ஒரு முஃமினுடைய மூன்று குணாதிசயங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் முதலில் தான் எந்த நன்மையின் பக்கம் மக்களை அழைக்கின்றோமோ, அந்த நன்மையைப் பின்பற்றுபவர்களாக இருத்தல் வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் உள்ள நபிமார்களுக்கு சீடர்கள் இருந்தார்கள். அந்த சீடர்கள் தங்களது நபிமார்கள் மறைந்தவுடன் அந்த நபிமார்கள் எதை எதைக் காட்டித் தரவில்லையோ, அவற்றை எல்லாம் செய்து கொண்டும், அதன் மூலம் எழுந்த தீமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். அதனால் தான் அவர்கள் வரலாறு நெடுகிலும் அழிக்கப்பட்டு வந்திருப்பதை திருமறை வாயிலாக, ஆது, ஸமூது, மத்யன், ஹுது என பல்வேறு கூட்டத்தார்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

முதியோர்களைப் பேணும் முறை பற்றி இஸ்லாம்

முதியோர்களின் தள்ளாத வயதில் அவர்களைக் கண்காணித்து அவர்களைக் கண்ணியப்படுத்தி அவர்களது தேவைகளை ஒருவர் நிறைவேற்றுவது என்பது, அவருக்குக் கிடைத்த பெரும்பேராகவும், அவ்வாறு செய்பவரது ஆன்மீக வளர்ச்சிக்கும், இறைப்பொருத்தத்திற்குக் கிடைத்த நல்வாய்ப்பாகவும் அமைகின்றது என இஸ்லாம், முஸ்லிம்களுக்க வலியுறுத்திச் சொல்வதே இதன் காரணமாகும். இஸ்லாமானது பெற்றோர்களுக்காக பிரார்த்திக்க மட்டும் வலியுறுத்தவில்லை, மாறாக தான் எதையுமே செய்ய இயலாத குழந்தையாக இருந்த பொழுது அவர்கள் தங்களது சுயநலன்களை மறந்து நமக்காக அவர்கள் செய்த இணையற்ற ஈடுசெய்ய இயலாத சிரமங்களை எண்ணிப்பார்த்து, தன்னைப் பெற்றவரது முதுமைக் காலத்தில் அவரிடம் பணிவையும், இரக்கத்தையும் வெளிக்காட்டி அவர்களிடம் அளவு கடந்து நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் முஸ்லிம்களைப் பணிக்கின்றது. குறிப்பாக தாயாரிடத்தில் மிகவும் அன்பு காட்டி அவர்களைக் கண்ணியப்படுத்துமாறு இஸ்லாம் வலியுறுத்திக் கூறியுள்ளது.

Friday 7 February 2014

இழிவைத் தரும் முகஸ்துதி

உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும். மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.
ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)
எந்த வணக்கமும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.
(எனினும் அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து அல்லாஹ் ஒருவனையே வணங்கி தொழுகையையும் கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறேயன்றி (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)